search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசியலில் அடுத்தகட்ட நகர்வு: 7-ந் தேதி சசிகலாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்.
    X

    அரசியலில் அடுத்தகட்ட நகர்வு: 7-ந் தேதி சசிகலாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்.

    • கடந்த சில நாட்களாக கேரளாவில் மூலிகை சிகிச்சை மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் நேற்று போடிக்கு வந்தார்.
    • கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் ஓ.பன்னீர்செல்வம் சென்னை செல்ல உள்ளார்.

    திண்டுக்கல்:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனித்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

    தொண்டர்கள் ஆதரவுடன் அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம் அதற்கான நடவடிக்கையில் தீவிர பணியாற்றி வருகிறார். முதற்கட்டமாக திருச்சியில் மாநாடு நடத்தி அ.தி.மு.க.வை மீட்டெடுப்பேன்று என்று சூளுரைத்தார். அடுத்தகட்டமாக சசிகலா, டி.டி.வி. தினகரனை சந்திக்கப் போவதாக அறிவித்தார்.

    ஆனால் டி.டி.வி. தினகரனை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை இதுவரை சந்திக்கவில்லை. இதனிடையே ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளரான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. கடந்த மாதம் 29-ந்தேதி சென்னை அடையாறில் டி.டி.வி. தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

    அதனைத் தொடர்ந்து சசிகலாவையும் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. வைத்திலிங்கம் மகன் திருமணம் வருகிற 7-ந் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது. இதற்கான திருமண அழைப்பிதழை சசிகலாவுக்கு கொடுக்கத்தான் இந்த சந்திப்பு நடந்தது என்று அவரது ஆதரவாளர் தெரிவித்தார்.

    வைத்திலிங்கத்தின் இல்ல திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வமும் கண்டிப்பாக வருவார் என்பதால் திருமண விழாவிலேயே சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கேரளாவில் மூலிகை சிகிச்சை மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் நேற்று போடிக்கு வந்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் சென்னை செல்ல உள்ளார். அங்கிருந்து 7-ந் தேதி தஞ்சாவூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.

    திருமண விழாவைத் தொடர்ந்து சசிகலாவுடன் இணைந்து கட்சி பணியில் ஈடுபடுவது குறித்து தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×