search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை
    X

    ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை

    • ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணப்பாறை:

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்து, கடனாளியாகி கடைசியில் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்கின்றன.

    ஏற்கனவே தமிழ்நாட்டில் 41 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்தனர். 42-வது நபராக கடந்த 24-ந்தேதி மத்திய அரசுக்கு சொந்தமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்த ரவிசங்கர் (வயது 40) என்பவர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ரூ.6 லட்சம் பணத்தை இழந்திருந்தார்.

    இதனால் மன விரக்தியுடன் இருந்த அவர் அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்தார். இந்த நிலையில் தற்போது 43-வது நபராக திருச்சி மணப்பாறை பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். அது பற்றிய விபரம் வருமாறு:-

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள அஞ்சல்காரன்பட்டி கிராமம் சவேரியார்புரம் பகுதியை சேர்ந்தவர் மரிய பொன்னுசாமி. இவரது மகன் வில்சன் (26). கோவையில் உள்ள ஒரு டீக்கடையில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் சிறு வயதிலேயே திருமணம் செய்துள்ளார். தற்போது அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் பாழாய் போன ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டது. கூலி வேலை செய்து சம்பாதிக்கும் சொற்ப வருமானத்தையும் ஆன்லைன் ரம்மியில் இழந்து வந்தார். தொடக்கத்தில் அவரது தந்தை இதனை கண்டித்தார். ஒரு கட்டத்தில் கையிருப்பு கரையவும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் தந்தையின் கடிவாளத்தில் இருந்து தப்பிக்க மனைவி, குழந்தைகளுடன் தனிக்குடித்தனம் சென்றார். பின்னர் மனைவியின் கண்களை மறைத்து தொடர்ந்து ஆன்லைன் ரம்மியை விளையாட்டை தொடர்ந்தார்.

    இதற்கிடையே குடும்பச் செலவுகளுக்கும் பணம் கொடுப்பதை சுருக்கிக்கொண்டார். குடும்பம் நடத்தவும், குழந்தைகளை வளர்க்கவும் அவரது மனைவி தவித்து வந்தார். பலமுறை கண்டித்தும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை வில்சன் கைவிடவில்லை. இதனால் குடும்பத்திலும் பிரச்சினைகள் ஏற்பட்டதாக தெரிகிறது.

    மேலும் இதுவரை அவர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ரூ.4 லட்சம் வரை பணத்தை இழந்திருந்தார்.

    இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வில்சன் நேற்று கோவையில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். பின்னர் இரவு குடும்பத்தினருடன் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். நள்ளிரவில் எழுந்த அவர் திடீரென்று தனி அறைக்கு சென்று தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார்.

    அதைத்தொடர்ந்து சத்தம் கேட்டு எழுந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் இன்று அதிகாலை வில்சன் சிகிச்சை பள்ளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் திருச்சியில் தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய தமிழக அரசு போராடி வருகிறது.

    தமிழக சட்டசபையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது பின்னர் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த தடை மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்.

    அதன் பின்னர் கடந்த 23-ந்தேதி மீண்டும் அந்த மசோதா சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×