search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனை
    X

    டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனை

    • கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக புகார்.
    • மது பாட்டிலுக்கு 2 ரூபாய் தர வேண்டும் என கேட்பதாக புகார்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில், குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மது பாட்டில்களுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் தொகையை கேட்டு சிலர் மிரட்டுவதாக டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக டாஸ்மாக் மதுக்கடை வாரியாக விற்பனை விவரங்களுடன் சிலர் வருகிறார்கள். மது பாட்டிலுக்கு 2 ரூபாய் தர வேண்டும் என கேட்பதாக சங்கத்தினர் புகார் கூறியுள்ளனர். மேலும் இந்த விவரம் தொடர்பாக ஊழியர் சங்கத்தினர் தமிழக முதல்-அமைச்சர், தமிழக மின்சாரம், மதுவிலக்கு அமலாக்க துறை அமைச்சர் மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் அலுவலகத்திற்கும் புகார்மனு அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டாஸ்மாக் வடக்கு, தெற்கு கலால் மாவட்ட எல்லைக்குள் பல்வேறு மதுபான கடைகளில் அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். குவார்ட்டர், பீர் பாட்டில்களுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் தொகை, தினமும் விற்பனையாகும் மதுபாட்டில்கள் குறித்து பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

    டாஸ்மாக் ஊழியர்கள் குறைந்தபட்ச விற்பனைக்கு மேலாக தினமும் வசூலிக்கும் தொகையின் பின்னணி குறித்தும் ஆய்வு நடக்கிறது.

    இதுகுறித்து ஊழியர் சங்கத்தினர் கூறும்போது,

    பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வகுலிப்பதாக ஊழியர்கள் மீது புகார் கூறப்படுகிறது. குடோன்களில் இருந்து மதுபான கடைக்கு கொண்டு வரப்படும் மதுபாட்டில்கள் உடைந்தால் அதற்கு ஊழியர்கள் பொறுப்பேற்க வேண்டியுள்ளது.

    ஏற்றுக்கூலி, இறக்கு கூலி, பெட்டிகள், பாட்டில்கள் சேதமடைந்தால் அதற்குரிய கட்டணம், பல்வேறு தரப்பினர் மாதந்தோறும் வசூலித்து செல்லும் தொகை குறித்தும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தெரிவித்திருக்கிறோம்.

    மது பாட்டில் விற்பனையில் நிலவும் பிரச்சினைகளை அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும். கடையில் வந்து மிரட்டி பணம் கேட்டும் நிலையை தவிர்க்க வேண்டும். ஆய்வு நடத்தி குறிப்பிட்ட சில ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம் என்றனர்.

    Next Story
    ×