search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
    • தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு 20 நாட்களுக்கு பிறகு குணமடைந்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த மதுரை வீரன் மனைவி அமராவதி (வயது 45). கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக சரியாக சாப்பிட முடியாமல் உடல் எடை குறைந்து சோர்வுடன் காணப்பட்டார்.

    இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அமராவதிக்கு உணவுக்குழாயில் புற்று நோய் பாதித்திருப்பதை உறுதி செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அவருக்கு கடந்த மாதம் 8-ந் தேதி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. டாக்டர்கள் முத்துலெட்சுமி நாராயணன், குடல் இரைப்பை சிறப்பு மருத்துவர் அசோக்குமார் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் அமராவதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

    இதனையடுத்து அவர் பூரண குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். தனியார் ஆஸ்பத்திரியில் மட்டுமே செய்யப்படும் இது போன்ற அறுவை சிகிச்சையை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் செய்து அமராவதி குணமடைந்ததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

    இது குறித்து கல்லூரி டீன் பாலசங்கர் கூறுகையில், உணவுக்குழாய் புற்று நோய் ஏற்பட்டால் மார்பை கிழித்து அறுவை சிகிச்சை செய்வதுதான் வழக்கம். ஆனால் அமராவதிக்கு கழுத்து, வயிறு பகுதியில் துளையிட்டு புற்று நோய் பாதித்த உணவுக்குழாய் பகுதியை அகற்றி செயற்கை உணவுக்குழாய் பொருத்தப்பட்டது.

    அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு 20 நாட்களுக்கு பிறகு குணமடைந்தார். சவால் நிறைந்த இந்த அறுவை சிகிச்சை தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது என்றார்.

    • ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • கும்பக்கரை மற்றும் சுருளி அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை நீடித்து வருகிறது. போடி, குரங்கணி, கொட்டக்குடி பகுதியில் பெய்த மழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரும் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சோத்துப்பாறை, கும்பக்கரை, பெரியகுளத்தில் பெய்த தொடர் மழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆற்றின் இரு கரையையும் ஒட்டியவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார வராக நதி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் வருசநாடு, கண்டமனூர், வெள்ளிமலை, அரசரடி பகுதியில் பெய்த தொடர் மழையால் மூலவைகையாற்றில் தண்ணீர் அதிக அளவு வருகிறது. இதன் காரணமாக வைகை அணை அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 2931 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2481 கன அடி நீர் திறக்கப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்ப ட்டுள்ளனர்.

    கும்பக்கரை மற்றும் சுருளி அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் அங்கு உற்சாகமாக குளித்து சென்றனர்.


    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியாக உள்ளது. 820 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.10 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 80 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 290.78 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 1.4, தேக்கடி 0.4, கூடலூர் 3.2, உத்தமபாளையம் 4.8, சண்முகாநதி அணை 15, போடி 11.8, வைகை அணை 24.2, மஞ்சளாறு 4, சோத்துப்பாறை 15, பெரியகுளம் 31, வீரபாண்டி 19.8, அரண்மனைபுதூர் 20.6, ஆண்டிபட்டி 33.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த நண்பர்கள் மைக் செட் மூலம் தகவல் தெரிவித்து அவரை கண்டுபிடிக்க முயன்றனர்.
    • சங்கரின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வருசநாடு:

    சென்னை திருநின்றவூர் புதிய சாலைத் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 40). கூலித் தொழிலாளி. திருமணமாகாத இவர் கடந்த 31-ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு யாத்திரை குழுவினருடன் சபரிமலைக்கு மாலை அணிந்து புறப்பட்டார்.

    கடந்த 3-ந் தேதி சபரிமலைக்கு சென்று அனைவரும் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மலையை விட்டு இறங்கிய போது பம்பை ஆற்றங்கரையில் திடீரென சங்கர் மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த நண்பர்கள் மைக் செட் மூலம் தகவல் தெரிவித்து அவரை கண்டுபிடிக்க முயன்றனர்.

    அப்போது சங்கர் மாலையை கழற்றி விட்டு இருமுடி இல்லாமல் வந்துள்ளார். இது குறித்து குருசாமி அவரிடம் கேட்ட போது அவர் போதையில் இருந்தது போல உளறியுள்ளார். அதன் பிறகு தேனி மாவட்டம் மாளிகைப்பாறை கருப்பசுவாமி கோவிலுக்கு அவர்கள் வந்தனர். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு பார்த்த போது மீண்டும் சங்கர் மாயமானார்.

    சில மணி நேரம் கழித்து வந்த சங்கர் போதையில் இருந்தது தெரிய வந்தது. இதனால் அவரை கண்டித்து வண்டியில் ஏற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர் அளவுக்கு அதிகமாக போதையில் இருந்ததால் அங்கேயே விட்டுச் சென்றனர்.

    போதை தெளிந்து எழுந்த சங்கர் செல்போனில் உடன் வந்த தனது நண்பர்களுக்கு போன் செய்தார். அப்போது தாங்கள் சென்னைக்கு புறப்பட்டு விட்டதாக கூறிவிட்டனர். இதனால் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த சங்கர் தங்கம்மாள்புரம் பகுதியில் இருந்த சர்ச் முன்பு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை அப்பகுதி மக்கள் இது குறித்து கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது மேற்கண்ட விபரங்கள் தெரிய வந்தது.

    இதனையடுத்து சென்னையில் உள்ள அவரது சகோதரி கோமதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தற்கொலை செய்து கொண்ட சங்கரின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சபரிமலைக்கு சென்று திரும்பிய போது வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சம்பவ இடத்துக்கு ஜான் செல்லத்துரை தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.
    • மகேந்திரனை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கி மற்றும் வீட்டில் இருந்த தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சடையாண்டி (வயது 48). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது கோவை கிணத்துக்கிடவில் உள்ள ஒரு கியாஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபோது பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி வ.உ.சி. தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான மகேந்திரன் (47) என்பவர் குடி போதையில் தகராறு செய்து கொண்டு இருந்தார்.

    சடையாண்டி வீட்டின் அருகே அவர் சத்தம் போட்டு கொண்டு இருந்ததால் அவரும் அவரது மனைவியும் இதனை தட்டிக் கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் அவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி மிரட்டினர். மேலும் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொன்று விடுவதாக தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சடையாண்டி இது குறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு ஜான் செல்லத்துரை தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் மகேந்திரனை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கி மற்றும் வீட்டில் இருந்த தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். இந்த துப்பாக்கி உரிமம் பெற்று வைத்துள்ளரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாயமான மாணவர்கள் நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்தனர்.
    • மாணவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தேனி மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் தெரிவித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்த கார்த்திக் மகன் பரத் (13). பால்பாண்டி மகன் சிவனேஷ்வரன் (13). இவர்கள் 2 பேரும் மயிலாடும்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறிச்சென்ற மாணவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. இரவு வரை அவர்கள் வராததால் பெற்றோர்கள் அவர்கள் படித்த பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது மாணவர்கள் 2 பேரும் பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் மாணவர்களின் புகைபடங்களை வைத்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.

    இதனிடையே மாயமான மாணவர்கள் நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்தனர். அங்கு வந்த நல்லூர் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில் தாங்கள் தேனியை சேர்ந்தவர்கள் என்றும், இங்கு கபடி போட்டி நடப்பதால் அதனை பார்க்க வந்ததாகவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாணவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தேனி மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் மயிலாடும்பாறை போலீஸ் ஏட்டு சமுத்திரம் நாமக்கல் சென்று மாணவர்கள் 2 பேரையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1499 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.95 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    கேரள மாநிலம், மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்தது. இதனால் அணைகள், குளம், கண்மாய் உள்பட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியது. முல்லைப்பெரியாறு, வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு, வராகநதி உள்பட அனைத்து நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்து பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    இந்தநிலையில் அடுத்த சில நாட்களுக்கு தேனி மாவட்டம் உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி நேற்று மாலை முதல் மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் வைகை அணை நீர்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கண்டமனூர் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம், கூடலூர், கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 2233 கனஅடிநீர் வந்தது. நீர்மட்டமும் 69.75 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டும்போது தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும்.

    எனவே அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ஆற்றைக்கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். வைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1499 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 136.95 அடியாக உள்ளது.ப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.95 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1284 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1867 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 56.10 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 80 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 73.54 கனஅடியாகும்.

    பெரியாறு 49, தேக்கடி 71.2, கூடலூர் 7.6, உத்தமபாளையம் 12.6, சண்முகாநதி அணை 14.2, போடி 3, வைகை அணை 0.4 , மஞ்சளாறு 9 , சோத்துப்பாறை 17, பெரியகுளம் 12, வீரபாண்டி 9.6, அரண்மனைப்புதூர் 3 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் தனது நண்பர்களுடன் குளிக்கவந்தார்.
    • வனத்துறையினரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இது மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.

    வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தத்தால் அருவிக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. இதனால் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் குளித்து செல்கின்றனர். நேற்று கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் தனது நண்பர்களுடன் குளிக்கவந்தார்.

    அருவியில் குளித்து கொண்டிருந்தபோது அவர் கையில் வந்திருந்த 6.5 கிராம் தங்க மோதிரத்தை தண்ணீரில் தவறவிட்டார். இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறை அலுவலர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து தாமோதரன் தவறவிட்ட மோதிரத்தை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட்ராஜா சுற்றுலா பயணியான தாமோதரனை வரவழைத்து அவருடைய தங்க மோதிரத்தை ஒப்படைத்தார்.

    மோதிரம் காணாமல் போன ஒரேநாளில் அதனை மீட்டு கொடுத்த வனத்துறையினரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    • இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து மற்றும் அதன் சுற்றுவட்டார கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 62.82 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அணையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு மற்றும் அவர்களுக்கு உதவியாக துணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பருவமழையின்போதும், அணையின் நீர்மட்டம் உயரும்போது ஆய்வு செய்து அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள்.

    இதுவரை அணை பலமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கேரள அரசு மற்றும் சில தன்னார்வலர்கள் அணையின் நீர்மட்டத்தை குறைக்கவேண்டும் என தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதற்கு தமிழக விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    நேற்றிரவு 141 அடியை எட்டியதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து மற்றும் அதன் சுற்றுவட்டார கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அணைக்கு 1230 கனஅடிநீர் வருகிறது. இன்றுமுதல் அணையிலிருந்து நீர்திறப்பு 1300 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 62.82 அடியாக உள்ளது. அணைக்கு 1906 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2149 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 80 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 137 கனஅடி.

    தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்ட நிலையில் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    • வைகை அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 70 அடியை எட்டிவிடும் நிலையில் உள்ளது.
    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 140.80 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணை கடந்த மாதம் 10-ந்தேதி 70 அடியை எட்டியது. இதனைதொடர்ந்து 11-ந்தேதி முதல் 14-ம் தேதி வரை சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு 413 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் வடகிழக்குபருவமழை தீவிரமடைந்ததால் வைகை அணையின் நீர்மட்டம் இந்த மாதம் முழுகொள்ளளவை எட்டியது.

    இதனையடுத்து கடந்த 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ராமநாதபுரம் மாவட்ட வைகை பூர்வீக பாசனபகுதி 3-க்கும் 1004 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வைகையாற்றின் வழியாக நேற்று காலை முதல் விநாடிக்கு 800 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    பின்னர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 200 கனஅடியாக திறக்கப்பட்டது. அணையிலிருக்கும் தண்ணீரை பொறுத்து கிருதுமால் நதிக்கு 10 நாட்கள் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் விநாடிக்கு 150 கனஅடிவீதம் 300 மி.கனஅடி தண்ணீர் 58-ம் கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் 2284.86 ஏக்கர் நிலங்கள் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயனடைவார்கள் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.90 அடியாக உள்ளது. வரத்து 2190 கனஅடி, திறப்பு 1999 கனஅடி, இருப்பு 5728 மி.கனஅடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 70 அடியை எட்டிவிடும் நிலையில் உள்ளது. அதன்பிறகு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரியாக திறக்கப்படும். இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 140.80 அடியாக உள்ளது. ஏற்கனவே இடுக்கி மாவட்டத்தில் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்., அணைக்கு நீர்வரத்து 1715 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து 300 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. இருப்பு 7342 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மழை குறைந்துள்ளபோதிலும் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று 5-ம் நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    • போலீசார் சோதனை நடத்திக் கொண்டு இருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் போதை மாத்திரைகள் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 10 பேரை போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் டேப் பெண்டாடல் ஹைட்ரோ குளோரைடு என்ற போதை தரும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் சிலர் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி சரகத்திற்குட்பட்ட மற்ற பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டி சமத்துவபுரம் அருகே ராஜதானி போலீசார் சோதனை நடத்திக் கொண்டு இருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் போதை ஊசி மற்றும் மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ராஜதானி பிச்சம்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் தினேஷ்குமார் (24), குமாரபுரத்தைச் சேர்ந்த வைரக்குமார் (25), சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த ஜேசுதாசன் (20) மற்றும் சமத்துவபுரத்தைச் சேர்ந்த சசிகுமார் மகன் இன்பக்குமார் (19) என தெரிய வந்தது.

    இதில் ஜெகநாதன் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டு போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும், இன்பக்குமார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டு சக மாணவர்கள் மற்றும் நண்பர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    அவர்களை கைது செய்த போலீசார் இக்கும்பலுடன் மேலும் சிலர் தொடர்பில் இருக்கலாம் என்று சந்தேகமடைந்துள்ளனர். இவர்கள் எங்கிருந்து இந்த மாத்திரைகளை வாங்கி வந்தனர்? என்றும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அணையின்நீர்மட்டம் 142 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
    • மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவின் நீடிப்பதால் அணையிலிருந்து உபரிநீர் கூடுதலாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து நேற்றுமாலை 140 அடியை எட்டியது. இதனால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக நீர்வளத்துறையினர் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பினர்.

    இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்லக்கடவு, வண்டிபெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து ஆகிய பகுதிகளில் உள்ள பெரியாற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவிக்கப்பட்டது. இன்றுகாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 140.35 அடியாக உள்ளது.

    அணைக்கு விநாடிக்கு 1817 கனஅடி நீர்வருகிறது. நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தும் வகையில் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்இருப்பு 7221 மி.கனஅடியாக உள்ளது. நீர்மட்டம் 141 அடியை எட்டும் போது 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கையும், 142 அடியை எட்டும்போது இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும். அதன்பிறகு உபரிநீர் 13 ஷட்டர்கள் வழியாக கேரள பகுதிக்கு திறக்கப்படும்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்குபிறகு இதுவரை 5 முறை அணையின் நீர்மட்டம் 142 அடிவரை உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அணையின்நீர்மட்டம் 142 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் வைகை அணையின் நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டியதால் அணையிலிருந்து தொடர்ந்து அதிகளவு தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. இன்றுகாலை முதல் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக 800 கனஅடிதண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநீர் தொடர்ந்து 10 நாட்களுக்கு திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படும் என்பதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இன்றுகாலை நிலவரப்படி அணையின்நீர்மட்டம் 69.59அடியாக உள்ளது. நீர்வரத்து 1961 கனஅடி, தண்ணீர் திறப்பு 2599 கனஅடி, நீர்இருப்பு 5724 மி.கனஅடி.

    மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவின் நீடிப்பதால் அணையிலிருந்து உபரிநீர் கூடுதலாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பெரியாறு 3, தேக்கடி 8.4, கூடலூர் 3.2, உத்தம பாளையம் 2.4, சண்முகா நதிஅணை 4, மஞ்சளாறு 1.4, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 2, வீரபாண்டி 4, மி.மீ மழைளவு பதிவாகி உள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
    • தொடர் மழை காரணமாக வைகை அணை நிரம்பி காணப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

    கடந்த சில நாட்களாக கேரளா, மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதமும் இதே அளவில் தண்ணீர் நிலைநிறுத்தப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின்நீர்மட்டம் 139.85 அடியாக உள்ளது. அணைக்கு 2023 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் 140 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்போது இடுக்கி மாவட்ட மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 141 அடியை எட்டும்போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 142 அடியை எட்டும்போது 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணையில் 14 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும். எனவே வண்டிபெரியாறு, சப்பாக்கு மற்றும் அதன் சுற்றுவட்டார பெரியாற்று கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 142 அடி வரை அணையில் தண்ணீர் தேக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தற்போது 142 அடியை எட்டினால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் 6-வது முறையாக இந்த அளவை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடர் மழை காரணமாக வைகை அணையும் நிரம்பி காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. 2187 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 2319 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகையாற்றில் இருகரையை தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 122 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 176.97 கனஅடி. தேக்கடி 1.2, கூடலூர் 0.4, உத்தமபாளையம் 1, சண்முகாநதி 0.8, போடி 0.2, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    ×