search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • வகுப்பு ஆசிரியர் மாணவியை தூக்கிக்கொண்டு முதல் உதவி சிகிச்சை அளித்தார்.
    • மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள சீலையம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி மகள் ரித்திகா (வயது8) என்பவர் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி தனது வகுப்பறையில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது இந்த வகுப்பறையில் பழுதான மேற்கூரை கட்டிடம் இடிந்து மாணவியின் தலை மீது விழுந்தது. இதில் மாணவிக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்ததும் அருகில் இருந்த மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    உடனே வகுப்பு ஆசிரியர் மாணவியை தூக்கிக்கொண்டு முதல் உதவி சிகிச்சை அளித்தார். பின்னர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளிக்கு ஓடி வந்தனர். பின்னர் நடந்த விபரத்தை கேட்டு அழுதபடியே மாணவியை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் பள்ளியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    பள்ளிகள் திறப்புக்கு முன்பு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிமாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயாராக செய்து கொடுக்க வேண்டும். பழுதடைந்த கட்டிடங்கள், சுவர்கள் ஆகியவற்றை இடித்து பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டும் பெரும்பாலான பள்ளிகள் இதனை பின்பற்றுவதில்லை. எனவே இனிமேலாவது அதிகாரிகள் பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகள் சரியான முறையில் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகள் உள்பட எந்த சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது
    • கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்

    நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவன் குடும்பத்தினர், சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேற்று சமர்ப்பித்தது.

    அதில் உள்ள முக்கிய பரிந்துரைகள்:

    • அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகள் உள்பட எந்த சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது
    • தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும். சாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பிறகே, புதிய பள்ளி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்
    • குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களை தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது
    • ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும்
    • கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்
    • மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்.

    இந்நிலையில், தேனி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில், சாதி மோதலுக்கு எதிரான சந்துரு குழுவின் அறிக்கையை கிழித்து பாஜகவை சேந்த ஊராட்சிக் குழு துணைத் தலைவர் ராஜபாண்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    கையில் கயிறு கட்டக்கூடாது என கூறுவது இந்து மாணவர்களுக்கு எதிரானது என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ராஜபாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

    • துப்புரவு பணியாளர்களை அவதூறாக பேசியதாக அறிவழகன் என்பவர் தேனி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.
    • தேவதானப்பட்டி போலீசார் நிபந்தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சியில் 9-வது வார்டு உறுப்பினராக தி.மு.க.வைச் சேர்ந்த நிபந்தன் என்பவர் வெற்றி பெற்று பேரூராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதாகவும், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து குடிநீர் வழங்க கோரி துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் முறையிடச் சென்றனர்.

    அப்போது துப்புரவு பணியாளர்களை அவதூறாக பேசியதாக அறிவழகன் என்பவர் தேனி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தேவதானப்பட்டி போலீசார் நிபந்தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் இன்று தேவதானப்பட்டி பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றும் 40-க்கும் மேற்பட்டோர் துப்புரவு பணியாளர் அல்லாத தனி நபர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நிபந்தன் மீது பொய் புகார் கொடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் புகார் கொடுத்த நபர் துப்புரவு பணியாளர் அல்லாத நபர் என்றும் நடைபெறாத செயலை சித்தரித்து தனது சுயலாபத்திற்காக பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தேனி மாவட்டம் உட்பட தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே சுமார் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குரங்கணி மலை கிராமம். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமம் அறிவிக்கப்படாத சுற்றுலாத்தலமாக திகழ்ந்து வருகிறது.

    இங்குள்ள குரங்கணி நீரோடை, கொட்டகுடி ஆறுகளில் இருந்து வரும் நீர் மூலம் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை விடுமுறை காரணமாக குரங்கணி அருவி நீரோடை பகுதிகளில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் தேனி மாவட்டம் உட்பட தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குரங்கணி அருவி, நீரோடைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்புகின்றனர். கனமழை எச்சரிக்கை காரணமாக எந்த நேரமும் அருவி நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்று நிலையில் சுற்றுலா பயணிகள் அருவி நீரோடை இறங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பள்ளி விடுமுறை நாட்கள் முடிந்து வருகின்ற 10ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறப்பதன் காரணமாகவும் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்ததால் குரங்கணி மலை கிராமம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • அணையில் இருந்து பாசனத்திற்காக 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
    • பெரியகுளம் 28, வீரபாண்டி 1.8, அரண்மனைபுதூர் 7.2, ஆண்டிபட்டி 2.7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.

    அதன்படி தேனி மாவட்டத்தில் பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது.

    குறிப்பாக ஆண்டிபட்டி, பெரியகுளம், வைகை அணை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இதனால் நீர்வரத்து குறைந்து காணப்பட்ட அணைகளுக்கும் மீண்டும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.80 அடியாக உள்ளது. நேற்று 96 கன அடி நீர் வந்த நிலையில் இன்று காலை 201 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.80 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.40 அடியாக உள்ளது. 68 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.11 அடியாக உள்ளது. வரத்து 6 கன அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 16.4, தேக்கடி 4.4, கூடலூர் 1.8, உத்தமபாளையம் 2.4, சண்முகாநதி அணை 2.2, போடி 7.6, வைகை அணை 63.2, மஞ்சளாறு 42, சோத்துப்பாறை 21, பெரியகுளம் 28, வீரபாண்டி 1.8, அரண்மனைபுதூர் 7.2, ஆண்டிபட்டி 2.7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட ஆய்வு செய்வதற்கு கேரளா முயற்சித்து வருகிறது.
    • தமிழக விவசாயிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இங்கு இருபோக நெல் சாகுபடிக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் உள்ளது.

    மேலும் தேனி மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு அணையை கண்காணித்து பராமரிக்க 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. பின்னர் 2022ம் ஆண்டு மேலும் இரு மாநில தொழில்நுட்ப வல்லுனர்களையும் சேர்த்து ஐவர் குழுவாக மாற்றப்பட்டது.

    தற்போது குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையர் தலைமை பொறியாளர் ராஜேஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா காவிரி தொழில்நுட்பக் குழும தலைவர் சுப்பிரமணியம், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர் பாசனத்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் வேணு, நிர்வாக தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் உள்ளனர்.

    இந்த குழுவினர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி ஆய்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் ஆய்வு தள்ளி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் வருகிற 13, 14-ந் தேதிகளில் மத்திய கண்காணிப்பு குழுவினர் முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட ஆய்வு செய்வதற்கு கேரளா முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு பருவமழை காலத்தின் போதும் முல்லைப்பெரியாறு அணையின் பலம் குறித்து கேரளா சந்தேகம் எழுப்பி வருகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது. தற்போதும் பரபரப்பான இந்த சூழலில் மத்திய கண்காணிப்புக்குழு அணையை ஆய்வு செய்ய உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த ஆண்டு மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 118.40 அடியாக இருந்தது.
    • இன்று காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.15 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    முல்லை பெரியாறு அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14,707 ஏக்கர் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப் தொடங்கி பழனிசெட்டிபட்டி வரை கம்பம் பள்ளத்தாக்கு பகுதியாக உத்தமபாளையம் வட்டத்தில் 1807 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர், தேனி வட்டத்தில் 2412 ஏக்கர் என மொத்தம் மாவட்டத்தில் 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் பெரியாறு அணையின் பாசனத்தின் மூலம் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் முதல் போகத்திற்கு ஜூன் மாதம் தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    கடந்த ஆண்டு மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 118.40 அடியாக இருந்தது. இருப்பினும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்போக விவசாயத்திற்கு ஜூன் மாதம் முதல்நாள் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 119 அடியை கடந்தது.

    இந்நிலையில் தேனி மாவட்ட முதல்போக பாசனத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை அணையிலிருந்து பாசனத்திற்கு 200 கனஅடி, தேனி மாவட்ட குடிநீருக்கு 100 கனஅடி என 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கபட்டது. தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் என யாரும் வரவில்லை. பொறியாளர் அன்புச்செல்வன் தண்ணீரை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் மயில்வாகணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.15 அடியாக உள்ளது. வரத்து 204 கன அடி. இருப்பு 2475 மி.கன அடி.

    ஒவ்வொரு ஆண்டும் முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்போது விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு இங்குள்ள துர்க்கையம்மன் கோவிலில் வழிபாடு நடத்தி தண்ணீர் திறக்கப்பட்டதும் மலர்தூவி நன்றி தெரிவிப்பது வழக்கம். மேலும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ முறைப்படி மும்மத வழிபாடும் நடைபெறும். இந்த ஆண்டும் தண்ணீர் திறக்க பூஜைக்குரிய பொருட்களை வாங்கி வைத்தும் மும்மதத்தினரும் தயார் நிலையில் இருந்த நிலையில் அதிகாரிகள் அதற்கு தடைவிதித்தனர். மேலும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளையும் அழைக்கவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.54 அடியாக உள்ளது. வரத்து 14 கன அடி, திறப்பு 69 கனஅடி. இருப்பு 1686 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.15 அடி. வரத்து 22 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 3 கன அடி.

    • 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
    • சிறப்பு நீதிமன்றம் உத்தரவின் பேரில் பாலமுருகனை பழனிசெட்டிபட்டி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    தேனி:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர் சவுக்கு சங்கர். இவர் பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்ததாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தேனியில் கடந்த 4ம் தேதி கைது செய்தனர்.

    தேனி அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் தனியார் விடுதியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த போது காரில் 400 கிராம் கஞ்சா இருந்தது தெரியவரவே அதனை பறிமுதல் செய்தனர். சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கைதான ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு ஆகிய 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி வழங்கியது தொடர்ந்து பரமக்குடி அருகே காரைக்குடியை சேர்ந்த மகேந்திரனிடம் கஞ்சா பெற்றுக் கொண்டதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மகேந்திரனை கைது செய்த பழனிசெட்டிபட்டி போலீசார் அவரிடம் 2.600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


    புதுக்கோட்டை சிறையில் இருந்த பாலமுருகனிடம் இந்த கஞ்சாவை பெற்று விற்பனை செய்ததாக மகேந்திரன் தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    சிறப்பு நீதிமன்றம் உத்தரவின் பேரில் பாலமுருகனை பழனிசெட்டிபட்டி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலமுருகன், ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து தூத்துக்குடி துறைமுகத்தில் பரவலாக கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. நான் அங்கு பணிபுரியும் லாரி டிரைவர்களிடம் கஞ்சா பெற்று மகேந்திரனுக்கு கஞ்சா வழங்கினேன். அவர் அதனை சவுக்கு சங்கர் உதவியாளரிடம் வழங்கியுள்ளார். மற்றபடி சவுக்கு சங்கரை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை. சமூக வலைதளங்களில் தான் அவரது பேச்சை கேட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

    • தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் அணையின் நீர் மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 118.80 அடியாக உள்ளது. வரத்து 44 கன அடி. திறப்பு 100 கன அடி.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசன தேவைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக இருந்தது. அப்போது ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு பூர்வீக பாசன தேவைகளுக்காக 3 கட்டங்களாக தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து இன்று காலை 47.64 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 199 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை குடிநீர் தேவைக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1498 மி.கன அடியாக உள்ளது.

    தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் அணையின் நீர் மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 118.80 அடியாக உள்ளது. வரத்து 44 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 2439 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.90 அடி. வரத்து 21 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. வரத்து 7 கன அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறில் 5.4, தேக்கடியில் 0.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • கேரள அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    • விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்சனையாக உள்ளது. 152 அடி உயரமுள்ள இந்த அணையில் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணை 130 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதால் பலமிழந்து விட்டது என்றும், அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது.

    இது குறித்து உச்சநீதிமன்றம் வல்லுனர் குழுவை அமைத்து அணை பலமாக உள்ளது. இதனால் அருகில் உள்ள பேபி அணையை பலப்படுத்திய பின்பு கூடுதல் தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.

    இந்நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கேரள அரசு கடிதம் எழுதி புதிய அணை கட்ட இருப்பதால் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தது. கேரள அரசின் மனு மீது நாளை (28-ந் தேதி) விசாரணை நடைபெறுகிறது. 11 பேர் கொண்ட குழுவினர் இந்த மனு மீது விசாரணை நடத்த உள்ளனர்.

    கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 மாவட்ட விவசாயிகள் இன்று தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர். பேரணியாக சென்று பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில் அஞ்சலி செலுத்தி பின்னர் கேரள எல்லையான குமுளியில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இதனால் தமிழக-கேரள எல்லைப்பகுதியான குமுளி நெடுஞ்சாலையில் நேற்று இரவு முதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இன்று காலை லோயர் கேம்ப் பஸ் நிலையத்தில் முல்லைப்பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் விவசாயிகள் சங்க தலைவர் பொன்காட்சி கண்ணன் முன்னிலையில் திரண்ட விவசாயிகள் அங்கிருந்து பென்னிகுவிக் மணிமண்டபத்துக்கு சென்றனர். அதன் பின்பு பேரணியாக செல்ல முயன்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கேரள அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    இது குறித்து முல்லைப்பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், கேரளாவில் எந்த அரசு அமைந்தாலும் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கடந்த சட்டசபை தொடரின் போதே கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தது. அப்போது தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருந்து விட்டது. உச்சநீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பையே மதிக்காதது கேரள அரசு. சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணைக்கட்டி வந்த போது பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து அதனை தடுத்து நிறுத்தியுள்ளது. அதே போல உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி புதிய அணை கட்ட முடியாது என்று தெரிந்தும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசு மனு அளித்துள்ளது. எனவே உச்சநீதிமன்றமும் தாமாக முன் வந்து கேரள அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.

    இதற்கு பின்பும் முல்லைப்பெரியாறு அணையை வைத்து கேரளா அரசியல் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

    • தமிழக விவசாயிகளின் உணர்வு பூர்வமான விஷயம்.
    • கேரள அரசு தாங்கள் நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த அணை பலம் இழந்து வருவதாகவும், அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதற்கு தமிழக அரசு மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு கேரள அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் அணை பலமாக இருப்பதாகவும், அதனை இடித்து புதிய அணை கட்டத் தேவையில்லை எனவும் உத்தரவிட்டனர். மேலும் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும் அருகில் உள்ள பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தலாம் எனவும் உத்தரவிட்டது.

    அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யும் சமயங்களில் நீர்வரத்து, தண்ணீர் திறப்பு, கசிவு உள்ளிட்டவற்றை பார்வையிட மத்திய நீர்வளத்துறை ஆணையர் தலைமையில் தமிழக, கேரள பிரதிநிதிகளை உள்ளடக்கிய மூவர் குழுவும், அவர்களுக்கு உதவ 5 பேர் கொண்ட துணைக்குழுவும் உருவாக்கப்பட்டது. இந்த குழுவினர் அவ்வப்போது அணை பகுதியை பார்வையிட்டு அதன் அறிக்கையை சமர்ப்பித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடந்த கேரள சட்டசபைக் கூட்ட தொடரில் முல்லைப்பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை தொடங்க கடந்த ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை நிபுணர் குழுவுக்கு அறிக்கை அளித்தது.

    இதன் மீதான விசாரணை நாளை மறுநாள் (28-ந் தேதி) வர உள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த விவகாரம் வெளியில் தெரியாத நிலையில் தற்போதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசின் கடிதம் விசாரணைக்கு வர உள்ள தகவல் தமிழக விவசாயிகளிடம் தெரிய வந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு அணை நீரினை பயன்படுத்தும் 5 மாவட்ட விவசாயிகள் நாளை (27-ந் தேதி) மாபெரும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தில் ஒன்று திரண்டு விவசாயிகள் அங்கிருந்து கேரள எல்லையான குமுளிக்கு பேரணியாக சென்று போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

    ஆனால் விவசாயிகளின் போராட்டத்தை முடக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் வருகிற ஜூன் 4-ந் தேதி வரை அமலில் இருப்பதால் எந்தவித போராட்டமும் நடத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி நாளை லோயர் கேம்ப்பில் விவசாயிகள் போராட்டத்துக்கு திரண்டால் அதனை தடுத்து நிறுத்தி கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் எந்தவித அமைப்பினரோ, குழுவினரோ போராட்டம் நடத்தக்கூடாது. இது வரை விவசாயிகள் அமைப்போ, வேறு எந்த அமைப்போ போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு கடிதம் அளிக்கவில்லை. அவ்வாறு கடிதம் அளித்தாலும் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கமாட்டோம் என்றனர்.

    இது குறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், தனிப்பட்ட காரணங்களுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை. இது தமிழக விவசாயிகளின் உணர்வு பூர்வமான விஷயம். எங்கள் எதிர்ப்பை போராட்டத்தின் மூலம் மட்டுமே தெரிவிக்க முடியும். தமிழக அரசு கடிதம் எழுதி விட்டால் அனைத்தும் நடந்து விடும் என்று நினைக்கின்றனர். இது தவறு. கேரள அரசு தாங்கள் நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பையே மதிக்காதவர்கள். எனவே அவர்களிடம் கடிதம் எழுதினால் நடந்து விடும் என்று தமிழக அரசு நினைப்பது தவறு. விவசாயிகள் போராட்டத்தை தடுத்தால் அது மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என்றனர்.

    இதனிடையே பேரணிக்கு திட்டமிட்டுள்ள லோயர் கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    • போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
    • குடும்பத்துடன் அப்பகுதியில் சுற்றித்திரிந்து சிறுவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே கணேசபுரம் மெயின்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கண்டமனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்கேத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர்கள் கண்டமனூர் தெற்கு தெருவை சேர்ந்த பூவநாதன் மனைவி ரத்தினம்மாள் (70), அவரது மகன் பழனிச்சாமி, மருமகள் முருகேஸ்வரி என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் குடும்பத்துடன் அப்பகுதியில் சுற்றித்திரிந்து சிறுவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் 90 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    ×