search icon
என் மலர்tooltip icon

    தென்காசி

    • 2 மினி லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • மினி லாரிகளில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து ஏராளமான வாகனங்களில் அண்டை மாநிலமான கேரளாவுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது.

    அதுமட்டுமல்லாமல் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு செல்லும் லோடு வாகனங்களில் பொருட்களுக்கு இடையே அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தப்பட்டு அவ்வப்போது சோதனையின் போது சிலர் சிக்கி கொள்கின்றனர்.

    இந்நிலையில் காய்கறிகள் ஏற்றிக்கொண்டு வரும் மினி லாரியில் குட்கா கடத்தி கொண்டுவரப்படுவதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. உடனடியாக போலீசார் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே காய்கறிகளை ஏற்றி சென்ற 2 மினி லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா சுமார் 32 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 3.35 லட்சம் என்பதும், மொத்த எடை 391 கிலோ என்றும் தெரியவந்தது. இதையடுத்து மினி லாரிகளில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் கீழப்பாவூரை சேர்ந்த முருகன்(31), ஆரியங்காவூர் சத்தியமூர்த்தி (35) மற்றும் அரியப்புரத்தை சேர்ந்த முருகன் (39) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய மேலும் 4 பேர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வலைவீசி தேடி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மினி லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • பஸ் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் உள்ள குளத்தை நோக்கி சென்றது.
    • போலீசார் விரைந்து சென்று பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    கடையநல்லூர்:

    பெரம்பலூர் மாவட்டம் துறையூர் பகுதியில் இருந்து 36 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு புறப்பட்டனர். பஸ்சை அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் மற்றும் வினோத் ஆகியோர் ஓட்டி வந்தனர்.

    பஸ் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அட்டைகுளம் கரை பகுதியில் நேற்று இரவு சென்றபோது பஸ்சின் முன்பகுதி சக்கரம் திடீரென கழன்று ஓடியது. சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு அந்த சக்கரம் ஓடியது.

    இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் உள்ள குளத்தை நோக்கி சென்றது. இதனை அறிந்து பஸ்சில் இருந்த பக்தர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

    உடனே சுதாரித்து கொண்ட பஸ் டிரைவர் சுபாஷ் சாதுர்யமாக செயல்பட்டு பஸ்சை முழு கொள்ளளவு உள்ள அட்டை குளத்திற்குள் பாய்வதற்குள் முன்எச்சரிக்கையாக நிறுத்திவிட்டார்.

    இதனால் பஸ்சில் பயணித்த 36 ஐயப்ப பக்தர்களும் எவ்வித காயங்களும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் இகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.
    • மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் சற்று கூடுதலாக விழுவதால் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    தற்போது மழைப்பொழிவு குறைந்ததால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சற்று நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது. இன்று காலை முதல் ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மற்ற அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

    ஆனால் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் சற்று கூடுதலாக விழுவதால் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. வெள்ளம் குறைந்தால் அங்கு இன்று மாலைக்குள் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய காட்டாற்று வெள்ளத்தால் பெண்கள் குளிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் தூண்கள், நடைமேடைகளில் அமைக்கப்பட்டு இருந்ததால் செங்கல்கள் பெயர்ந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலத்த சேதம் அடைந்தது .

    அருவிக்கரையை சுற்றிலும் பொதுமக்கள் நின்று குளிக்கும் பகுதிகளில் அருவியில் அடித்து வரப்பட்ட கற்கள், மரத்துண்டுகள், மண் குவியல்கள் ஆகியவற்றை துப்புரவு பணியாளர்களை கொண்டு அகற்றும் நடவடிக்கையில் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
    • நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

    அதிகனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    • வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டது.
    • சுவர் மற்றும் தரை கற்களும் சேதம் அடைந்து காணப்படுகிறது.

    தென்காசி:

    கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்திருக்கும் குற்றால அருவிகளில் நேற்று முன்தினம் முதல் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று முழுவதும் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் மழையின் தாக்கம் குறைந்ததால் தற்போது குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.

    மெயின் அருவி பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கினால் மெயின் அருவி மேல் பகுதியில் இருந்து மரத்துண்டுகள், பாறைகள் மற்றும் மண் அடித்து வரப்பட்டுள்ளது. மேலும் அருவி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுவர் மற்றும் தரை கற்களும் சேதம் அடைந்து காணப்படுகிறது.

    வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளதால் முற்றிலும் குறைந்த பின்னர் அருவிப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.

    • வாராந்திர சிறப்பு ரெயில்களை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • சிறப்பு ரெயில்களை தொடர்ந்து இயக்க தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்காசி:

    நெல்லை-சென்னை எழும்பூர் இடையே (வண்டி எண்-06069) இயக்கப்படும் சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் சுற்றி செல்லும் வகையில் இயக்கப்படுவதால், இந்த ரெயிலில் உள்ள இருக்கைகள் பெரும்பாலும் காலியாகவே இருப்பதாக ரெயில் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    இந்த ரெயிலை நெல்லையில் இருந்து அம்பை, தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த வழித்தடத்தில் இயக்கினால் நல்ல வருமானம் கிடைக்கும் என்றும் பயணிகள் கூறுகின்றனர்.

    ஏற்கனவே தென்காசி, மதுரை வழியாக 5 மாதங்கள் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்ட நெல்லை-தாம்பரம் ரெயில் 17,303 பயணிகளுடன் ரூ.1.14 கோடி வருமானத்துடன் 108.84 சதவீதம் பயணிகள் பயன்பாட்டுடனும், தாம்பரம்-நெல்லை ரெயில் 16,214 பயணிகளுடன் ரூ.97.61 லட்சம் வருமானத்துடன் 101.72 சதவீத பயணிகள் பயன்பாட்டுடனும் இயங்கியது.

    5 மாதங்களில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்ட இந்த இரு வாராந்திர சிறப்பு ரெயில்களையும் சேர்த்து மொத்தம் 33,517 பயணிகளுடன் ரூ.2.14 கோடி வருமானம் கிடைத்தது.

    ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட வண்டி எண் 06069 சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு ரெயிலில் மொத்தம் உள்ள 1,364 இருக்கைகளில் 892 இருக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளது. 35 சதவீத இருக்கைகள் காலியாக சென்றன. இந்த ரெயிலுக்கான மொத்த வருமானமாக வரவேண்டிய ரூ.11 லட்சத்து 44 ஆயிரத்து 483-க்கு பதிலாக ரூ.5 லட்சத்து 39 ஆயிரத்து 128 வருமானமாக கிடைத்துள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.6.05 லட்சம் வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது 53 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் நெல்லையில் இருந்து வருமானம் கொழிக்கும் அம்பை, தென்காசி, ராஜபாளையம் வழித்தடத்தின் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரெயில்களை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    இதுகுறித்து தென்மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த ஜெகன் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து தென்மாவட்டத்திற்கு செல்லக்கூடிய இந்த சிறப்பு ரெயில் 50 சதவீதம் கூட நிரம்பாததுக்கு முக்கிய காரணம் திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டது தான். ஆனால் நெல்லை-தாம்பரம் இடையே தென்காசி வழியாக ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில்கள் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

    ரெயில்வேக்கும் கணிசமான வருமானம் கிடைத்தது. பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில் ஆகியவை காத்திருப்போர் பட்டியலுடன் இயங்குவதால் பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழித்தடத்தில் அனைத்து இருக்கைகளும் எளிதாக நிரம்பி விடும். எனவே நெல்லையில் இருந்து பாவூர்சத்திரம், தென்காசி, மதுரை, திண்டுக்கல் வழியாக தாம்பரத்திற்கு இயங்கிய சிறப்பு ரெயில்களை தொடர்ந்து இயக்க தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தென்காசி:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    தென்காசி மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இருப்பினும் பெரிய வெள்ளம் ஏற்படாததால் காலை 10 மணி வரையில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

    அதன் பின்பு மழைப் பொழிவு தொடர்ந்து அதிகரித்ததால் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் காட்டாற்று வெள்ளத்தால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பழைய குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு மற்றும் மெயின் அருவியில் பாது காப்பு வளைவை தாண்டி பெருவெள்ளம் ஏற்பட்ட தால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்களுக்கு உடனடியாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    மேலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • மழை இல்லாததால் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்தும் சற்று குறைய தொடங்கியுள்ளது.
    • குற்றாலம் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் குளித்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை இல்லாததால் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்தும் சற்று குறைய தொடங்கியுள்ளது.

    ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் மிதமாக விழும் தண்ணீரில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளை காட்டிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

    சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வரும் நிலையில் தென்காசி மாவட்டம் வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் பலரும் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் புனித நீராடி குற்றாலநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து சபரிமலைக்கு செல்லும் வழக்கத்தை கொண்டிருப்பதால் அருவிகளில் குளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் குளித்தனர். 

    • கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் புனித நீராட குவிந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    மேலும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் புனித நீராட குவிந்தனர்.

    இன்று காலை முதலே அருவி கரைகளில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் சுற்றுலா பயணி களின் வருகை அதி கரித்ததன் காரணமாக அருவிக் கரைகளில் அமைந்துள்ள கடைகளில் பழங்கள் உணவுப் பொருட்களின் விற்பனை யானது அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • தனியார் பஸ்சின் கண்ணாடியையும் உடைத்துவிட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து சங்கரன்கோவிலுக்கு வீ.கே.புதூர் வழியாகவும், அகரம் வழியாகவும் 2 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நேற்று மதியம் ஆலங்குளத்தில் இருந்து வீ.கே.புதூர் வழியாக செல்லும் பஸ்சில் ஒரு பெண்ணை ஏற்றி விட்டு அகரம் வழியாக செல்ல வேண்டும் என்று ஒரு நபர் கூறியுள்ளார். ஆனால் அந்த பஸ் அந்த வழியாக செல்லாது என கண்டக்டர் தெரிவித்தவுடன் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே பஸ் பயணிகள் சமாதானம் செய்து 2 பேரையும் அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் மாலையில் அந்த பஸ் சங்கரன்கோவிலுக்கு சென்றபோது வீராணம் பஸ் நிறுத்தத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் சேர்ந்து அதனை மறித்து பஸ் கண்ணாடியை அரிவாளால் உடைத்து பயணிகளை மிரட்டி தப்பி சென்றனர்.

    அப்போது எதிரே ஆலங்குளம் நோக்கி வந்த மற்றொரு தனியார் பஸ்சின் கண்ணாடியையும் உடைத்துவிட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது. இதில் கண்டக்டர் மகேஷ்குமாருக்கு(வயது 37) தலையில் காயம் ஏற்பட்டது. அவர் வீ.கே.புதூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பகலில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் தனது கூட்டாளிகளுடன் வந்து பஸ் கண்ணாடியை உடைத்து இருக்கலாமா என்ற கோணத்தில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கோமதி யானையின் உடல் நலம் குறித்து நெல்லை வனக் கால்நடை மருத்துவத்துறையுடன் இணைந்து வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
    • யானையின் உடல் வெப்பம், உயரம், எடை ஆகியவற்றை பரிசோதனை செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி யானை உள்ளது. இந்த கோமதி யானையின் உடல் நலம் குறித்து நெல்லை வனக் கால்நடை மருத்துவத்துறையுடன் இணைந்து வனத்துறையினர் ஆய்வு செய்தனர். யானையின் உடல் வெப்பம், உயரம், எடை ஆகியவற்றை பரிசோதனை செய்தனர். பின்னர் மத்திய அரசின் கீழ் உள்ள வனவிலங்கு ஆய்வகத்திற்கு அனுப்புவதற்காக யானையின் ரத்தமாதிரி மற்றும் செல்களை எடுத்து பத்திரப்படுத்தினர். இதைத்தொடர்ந்து யானை நலமாக இருப்பதாக யானைப் பரிசோதனை செய்த வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் கூறினார்.

    ஆய்வின் போது புளியங்குடி வனச்சரக வனவர் மகேந்திரன், உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, கால்நடை மருத்துவர் கருப்பையா, கோவில் துணை ஆணையர் ஜான்சி ராணி மற்றும் யானைப் பாகன்கள் உடனிருந்தனர்.

    • குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததை அடுத்து அங்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இரவில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டியது. அதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே இன்று பிற்பகலில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததை அடுத்து அங்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இன்று சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் குளிக்க உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    ×