search icon
என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • பாலச்சந்திரன் அரிவாளால் கீதாவை சரமாரியாக வெட்டினார்.
    • கொலை நடந்த பகுதியில் பாதுகப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி அந்தரப்பட்டி குடோன் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கீதா(வயது46). முருகேசன் வளையல் வியாபாரம் செய்து வருகிறார். கீதா கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கீதாவுக்கும் முசிறியை அடுத்த வாழவந்தியை சேர்ந்த பாலசந்திரன்(64) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பாலச்சந்திரன் அடிக்கடி கீதாவை சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை பாலச்சந்திரன் வழக்கம்போல கீதாவின் வீட்டுக்கு வந்தார். அங்கு கீதாமட்டும் தனியாக இருந்தார். அப்போது கீதாவுக்கும், பாலசந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பாலச்சந்திரன் அரிவாளால் கீதாவை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கீதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். பின்னர் அங்கிருந்து ஆவேசமாக பாலச்சந்திரன் வாழ்வந்திக்கு சென்றார்.

    அங்கு தனது வீட்டு அருகே வசித்த ரமேஷ்(55) என்பவர் அங்குள்ள டீக்கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இவர் வாழவந்தி தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார். திடீரென ரமேசையும் பாலச்சந்திரன் அரிவாளால் வெட்டினார்.

    தலை மற்றும் கைகால்காளில் வெட்டுக்காயம் அடைந்த ரமேஷ் உயிருக்கு போராடிக் கண்டிருந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். அடுத்தடுத்த கொலைகளால் அந்த பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. கொலையாளி பலச்சந்திரன் ஜம்பு நாதபுரம் காவல் நிலையத்தில் அரிவாளுடன் சென்று போலீசாரிடம் நடந்த விவரத்தை கூறி சரண் அடைந்தார்.

    இதை தொடர்ந்து பாலச்சந்திரனிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவத்துக்கும் ரமேஷ் கொலைக்கும் வேறு வேறு காரணங்கள் இருப்பதாக போலீசாரிடம் பாலச்சந்திரன் கூறியுள்ளார். எனினும் கள்ளக்காதல் விவகாரத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் கொலை செய்யப்பட்ட ரமேசுக்கும் பாலசந்திரனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக அவரை பாலசந்திரன் கொலை செய்ததாக தெரிகிறது. கள்ளக்காதலி கீதாவை கொலை செய்ததற்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முசிறி பகுதியில் இன்று அதிகாலை நடந்த இந்த இரட்டைக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கொலை நடந்த பகுதியில் பாதுகப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • அண்ணாதுரை தனது வீட்டு மாட்டு கொட்டகையில் வந்து உட்கார்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை அன்னை நகரை சேர்ந்தவர் ஜெயா (60). இவரது கணவர் அண்ணாதுரை (70). இவர் பாத்திரம் அடைக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயா தங்கை மகள் பூங்கொடி தங்கள் தெருவில் உள்ள பைப்பிற்கு தண்ணீர் பிடிக்க சென்ற போது, அருகில் இருந்த புளிய மரத்தின் அடியில் டப்பாவுடன் கூடிய பிராந்தி பாட்டில் ஒன்று கிடந்துள்ளது.

    அதனை பூங்கொடி எடுத்து வந்து பெரியப்பா அண்ணாதுரையிடம் கொடுத்ததாகவும் அதை வாங்கி கொண்டு அண்ணாதுரை சென்று விட்டதாகவும் சிறிது நேரம் கழித்து அண்ணாதுரை தனது வீட்டு மாட்டு கொட்டகையில் வந்து உட்கார்ந்தவர் சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

    உடனே அண்ணாதுரை குடும்பத்தினர் என்னவென்று சென்று பார்த்த போது அண்ணாதுரை இடுப்பில் மது பாட்டில் பாதி குடித்துவிட்டு வைத்திருந்து உள்ளார். அதை எடுத்து பார்த்த போது அது ஊதா நிறத்தில் இருந்து உள்ளது.

    உடனே அண்ணாதுரை மகன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அண்ணாதுரையை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக அறிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஜெயா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கீழே கிடந்த மது பாட்டிலில் விஷம் கலந்து இருந்ததா? அல்லது அவரின் சாவுக்கு வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமானங்களில் வரும் பயணிகள் மறைத்து கடத்தி வரப்பட தங்கம் பிடிபட்டது. இதுபோன்ற செய்திகள் நாளும் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பெறுகிறது.

    கட்டிங் பிளேயர் கம்பிகளுக்குள் மறைத்து, தலை முடிக்குள் மறைத்து வைத்து, பேஸ்ட் வடிவில், பேரிச்சம்பழக் கொட்டைகளை நீக்கிவிட்டு அதற்குப்பதில் தங்கத்தை வைத்து, ஊட்டச்சத்து பவுடருக்குள் தூளாக்கி, பிரவுன் டேப்புக்குள் பவுடர்களாக தூவி என நூதன முறையில் கடத்தல்காரர்கள் தங்கம் கடத்தி வருவது சுவாரசியம் தரக்கூடிய செய்தியாக மாறி உள்ளது.

    இப்படி தங்கம் கடத்தி வருபவர்களை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பது தொடர்கதையாகவே உள்ளது.

    இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் தனது காலில் அணிந்திருந்த மூட்டு வலி பட்டையில் ரூ. 1.16 கோடி மதிப்பிலான1605 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.

    இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆனி மாதத்தில் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.
    • திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை மாலை நடைபெறுகிறது.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெ ருமாள் ஜேஷ்டா பிஷேகம் கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதியும், ஸ்ரீரெங்க நாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 28-ந் தேதியும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு ஜேஷ்டாபிஷேகம் இன்று நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது.

    அங்கிருந்து காலை 7.15 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் 11 வெள்ளிக்குடங்களை தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனித நீர் வடக்குவாசல் வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு காலை 7.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.

    பின்னர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.

    பின்னர் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெற்றது. திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை மாலை நடைபெறுகிறது.

    இதேபோன்று ரெங்கநாத ர் கோவிலின் உபகோ விலான திருவானைக் காவல் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலிலும் இன்று ஜேஷ்டாபிஷேகம் நடை பெற்றது.

    ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக் குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது.

    அங்கிருந்து காலை 8 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், 11 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனித நீர் வடக்குவாசல், சித்திரை வீதிகள், கீழவாசல் வழியாக கோவிலுக்கு காலை 9.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.

    பின்னர் சிங்கப்பெருமாள் சன்னதியில் மூலவர்கள் லட்சுமிநரசிம்மன், மகாலெஷ்மி தாயார், உற்சவர் லெஷ்மிநரசிம்மர் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்ட ப்பட்டன.

    பின்னர் மூலவர்கள் லட்சுமி நரசிம்மன், மகாலெஷ்மி தாயார், உற்சவர் லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெற்றது. பின்னர் திருப்பாவாடை எனப்படும் பெரிய தளிகை நடைபெற்றது. 

    • சுதாகரின் உறவினர்கள், உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.
    • ஏற்கனவே மணப்பாறை போலீசாரால் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 44). இவர் அப்பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு கடந்த 1-ந் தேதி சென்ற மர்ம நபர்கள் தங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் எனக் கூறி அறிமுகம் செய்து கொண்டு, உங்களது கடையில் சட்டவிரோதமாக மருத்துவம் பார்ப்பதாக புகார் வந்துள்ளதாக கூறி கடையை சோதனை இட்டுள்ளனர்.

    பின்னர் சுதாகரை விசாரணைக்கு வாருங்கள் என கூறி அழைத்து சென்றனர். தொடர்ந்து சுதாகரின் உறவினருக்கு போன் செய்த மர்ம நபர்கள், அவரை விடுவிக்க ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகரின் உறவினர்கள், உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.

    இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மணப்பாறை போலீசார் பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்களை மணப்பாறை-திருச்சி பைபாஸ் சாலையில் வைத்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த நவ்ஷாத் (45), துறையூர் அருகே உள்ள வைரி செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த சேகர் (42), வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (44), மதுரையை சேர்ந்த மாரிமுத்து (53), சென்னையை சேர்ந்த வினோத் (37), தொப்பம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (37) என்பது தெரியவந்தது.

    இந்த 6 பேரும் பேரும் ஒரே குழுவாக சேர்ந்து, இதுபோன்று பல்வேறு இடங்களில் தங்களை பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகள் எனக்கூறி கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது. இவர்களிடம் மேலும் விசாரணை செய்ததில், இந்தக் குழுவில் உள்ள வினோத், நவ்ஷத், கார்த்திக், மாரிமுத்து ஆகிய நான்கு நபர்கள், மணப்பாறையை சேர்ந்த சக்திவேல் (30), திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, துறையூர் சௌடாம்பிகை அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் ஜவுளி வியாபாரியான மதுரை வீரன் (60) என்பவரின் வீட்டிற்கு கடந்த மாதம் 17-ந் தேதி சென்று, அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி, அவரது வீட்டில் 5 லட்சம் பணம், தங்க நகை 5 பவுன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.

    மணப்பாறை வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சக்திவேல், மணிகண்டன் ஆகிய இருவரையும் துறையூர் போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இருவரையும் கைது செய்த துறையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இச்சம்பவத்தில் கொள்ளை போன நகை, பணம் மற்றும் குற்ற செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை ஏற்கனவே மணப்பாறை போலீசாரால் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திமுக சார்ந்த அரசியலை விஜய் முன்னெடுத்தால் பாஜகவின் அரசியல் தனித்துவமாக இருக்கும்.
    • உருது பள்ளிகளை அதிகம் திறப்பது உருது திணிப்பு இல்லையா?

    திருச்சி:

    திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * திமுக சார்ந்த அரசியலை விஜய் கையிலெடுத்தாலும் பாஜகவுக்கு சந்தோஷம் தான்.

    * மத்திய அரசை திமுக பாணியில் ஒன்றிய அரசு என நடிகர் விஜய் கூறுகிறார். திமுக சார்ந்த அரசியலை நடிகர் விஜய் முன்னெடுப்பது போல் உள்ளது.

    * 2021க்கு முன்பு வரை மத்திய அரசு என்று தானே அனைவரும் கூறி வந்தனர்.

    * திமுக சார்ந்த அரசியலை விஜய் முன்னெடுத்தால் பாஜகவின் அரசியல் தனித்துவமாக இருக்கும்.

    * விஜய் திமுக ஆதரவு அரசியலை முன்னெடுப்பது பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும்.

    * தமிழகத்தில் உருது பள்ளிகளை அதிகம் கொண்டு வர வேண்டும் என்பது மாநிலக்கல்விக்கொள்கை. உருது பள்ளிகளை அதிகம் திறப்பது உருது திணிப்பு இல்லையா?

    * கடலோர பள்ளிகளில் மாணவர்களுக்கு மீனவர்கள் சார்ந்து பாடம் கற்பிப்பது குலக்கல்வி இல்லையா?

    * தமிழக அரசு கற்பிப்பது குலக்கல்வி இல்லை, மத்திய அரசு கொண்டு வந்தால் குலக்கல்வியா? என்று கேள்வி எழுப்பினார்.

    • திமுகவிற்கு உதவும் வகையில் விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடவில்லை.
    • நீட் விவகாரத்தில் விஜய் கருத்தை கூறுவதற்கு அவருக்கு கருத்துரிமை உள்ளது.

    திருச்சி:

    திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஆளுங்கட்சியின் அத்துமீறல்களையும் மீறி விக்கிரவாண்டி தேர்தலில் பாமக வெல்லும்.

    * விக்கிரவாண்டியில் போட்டியிடும் துணிச்சல் அதிமுகவிற்கு இல்லை.

    * 3வது, 4வது இடத்திற்கு செல்ல நேரிடும் என்பதால்தான் அதிமுக போட்டியிடவில்லை.

    * திமுகவிற்கு உதவும் வகையில் விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடவில்லை.

    * பாமகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என அதிமுக கூறி உள்ளது திமுகவிற்கு உதவும்.

    * விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றி பெற வைக்க அதிமுக மறைமுக உதவி செய்துள்ளது.

    * நீட் தேர்வு தொடர்பாக திமுக அரசு ஏன் வெள்ளை அறிக்கை வழங்க தயங்குகிறது? நீட் தேர்வுக்கு முன் - பின் மருத்துவ சேர்க்கை எப்படி நடைபெற்றது என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    * நீட் விவகாரத்தில் விஜய் கருத்தை கூறுவதற்கு அவருக்கு கருத்துரிமை உள்ளது.

    * நீட் தேர்வு வந்த பிறகு அதிக அரசுப்பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

    * பாஜக எதிர்ப்பு அரசியல் என்கிற ஒன்றுக்காக நீட் தேர்வை தற்போது எதிர்க்கிறார்கள் என்று கூறினார்.

    • கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த உப்பு மூட்டைகள் எரிந்து சேதமானது.
    • சந்தேகத்தின் பேரில் 3 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த தோளூர்பட்டியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 60). இவருக்கு சொந்தமான கடையை தொட்டியம் பாலசமுத்திரத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு மளிகை கடை வைப்பதற்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் இங்கு வந்தனர். திடீரென்று அவர்கள் முருகானந்தம் நடத்திவரும் மளிகை கடை முன்பாக பெட்ரோல் குண்டினை வீசியதாக கூறப்படுகிறது. இதில் கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த உப்பு மூட்டைகள் எரிந்து சேதமானது.

    கடையின் சுவரில் சிறு பகுதி பெயர்ந்து விழுந்தது. சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த ஞானசேகரன் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தா ர். பின்னர் இதுபற்றி உடனடியாக தொட்டியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் பெயரில் போலீஸ் திருச்சி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. கோடிலிங்கம், தொட்டியம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சம்பவ இடத்தை போலீசார் நேரில் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    முதல் கட்ட விசாரணையில் பெண்ணுடன் பேசுவது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

    • வழக்கை பொருத்தமட்டில் முன்பு இந்திய தண்டனைச் சட்டம் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது.
    • தற்போது புதிய சட்டமான பாரதிய நகரிக் சுரக்ஷா ஷன்ஹிதா 194 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    திருச்சி:

    மத்திய அரசு நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம்(ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம்(சி.ஆர்.பி.சி), மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களின் பிரிவுகளை வடமொழி தலைப்புகளில் பாரதிய நியாய ஷன்ஹிதா, பாரதிய நஹ்ரிக் சுரக்ஷா, பாரதிய சக்ஷய அதிநயம் என மாற்றி புதிய சட்டங்களாக கொண்டு வந்தது.

    இந்த 3 சட்டங்களும் நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. அதன்படி தமிழகத்திலும் புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பாக ஏற்கனவே தமிழக காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து நேற்று திருச்சி மாநகரில் புதிய சட்டங்களின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. திருச்சி புத்தூர் பகுதியில் தன்ராஜ்(வயது 43) என்ற பெயிண்டர் குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இந்த வழக்கை பொருத்தமட்டில் முன்பு இந்திய தண்டனைச் சட்டம் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது. தற்போது புதிய சட்டமான பாரதிய நகரிக் சுரக்ஷா ஷன்ஹிதா 194 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    மேலும் அதே காவல் நிலையத்தில் குட்கா தொடர்பான வழக்கு பாரதிய நஹ்ரிக் சுரக்ஷா (பி. என். எஸ்.) புதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. புறநகர் மாவட்டத்தில் மொத்தம் 7 வழக்குகள் புதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    லால்குடி காவல் நிலையத்தில் குட்கா பிடிபட்ட வழக்கில் பி.என். எஸ். புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோன்று கானக்கிளியநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிராவல் மண் கடத்தல் தொடர்பான வழக்கு பி.என்.எஸ். புதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்தனர்

    சோமரசம்பேட்டையில் குடிபோதைக்கு அடிமையான புருஷோத்தமன் வயது 65 என்பவர் மது குடிக்க குடும்பத்தினர் தடை விதித்ததால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்த வழக்கு புதிய சட்டத்தின் கீழ் பதிவானது.

    மணப்பாறை காவல் நிலையத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி படுகாயம் அடைந்த வழக்கு பி.என்.எஸ். புதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். இதே போன்று கள்ளக்குடி காவல் நிலையத்தில் 7-ம் வகுப்பு மாணவி பிரக்சா பஸ்ஸில் ஏறுவதற்கு முன்பாக டிரைவர் பஸ்சை இயக்கியதால் கீழே விழுந்து காயம் அடைந்தார் இந்த வழக்கு பி.என். எஸ்.சட்டத்தின் கீழ் பதிவானது.

    மேலும் பெட்டவாய்த்தலையில் ஒரு விபத்து வழக்கும், வையம்பட்டியில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கும் பி.என்.எஸ். புதிய சட்டத்தின் கீழ் பதிவானது.

    • விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜேந்திரன் தாக்கல் செய்தார்.
    • போராட்டம் காரணமாக எம்.ஜி.ஆர். சிலை சிக்னல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திருச்சி:

    திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகாமையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை பகுதி வழக்கம் போல் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது. மாணவர் சாலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்பவர்கள் குழுமி இருந்தனர். மார்க்கெட்டுக்கு சென்ற பொதுமக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது 6 மணி அளவில் அங்குள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் முதியவர் ஒருவர் கோஷமிட்டபடி விறுவிறுவென ஏறினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மின் கோபுரத்தில் ஏறியவர் திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68) ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் என்பது தெரிய வந்தது.

    சமூக ஆர்வலரான இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை மாலையாக அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜேந்திரன் தாக்கல் செய்தார். அவரது மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.

    இதைத் தொடர்ந்து ஊர் திரும்பிய ராஜேந்திரன் இன்று காலை அளவில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.

    பாராளுமன்றத் தேர்தலில் வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது திட்டமிட்ட சதி என குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ கணேஷ், தாசில்தார் விக்னேஷ் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இருப்பினும் அவர் கீழே இறங்கி வர மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மின் கோபுரத்தில் ஏறி ராஜேந்திரனை குண்டுக்கட்டாக தூக்கி கீழே இறக்கி கொண்டுவந்தனர். முன்னதாக அந்த பாதையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்த போராட்டம் காரணமாக எம்.ஜி.ஆர். சிலை சிக்னல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பயணிகள் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பிடிபட்டது.
    • தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பிடிபட்டது. இதுபோன்ற செய்திகள் நாளும் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பெறுகிறது. கட்டிங் பிளேயர் கம்பிகளுக்குள் மறைத்து, தலை முடிக்குள் மறைத்து வைத்து, பேஸ்ட் வடிவில், பேரிச்ச ம்பழக் கொட்டைகளை நீக்கிவிட்டு அதற்குப்பதில் தங்கத்தை வைத்து, ஊட்டச்சத்து பவுடருக்குள் தூளாக்கி, பிரவுன் டேப்புக்குள் பவுடர்களாக தூவி என நூதன முறையில் கடத்தல்காரர்கள் தங்கம் கடத்தி வருவது சுவாரசியம் தரக்கூடிய செய்தியாக மாறி உள்ளது.

    இவர்கள் "ரூம் போட்டு யோசிப்பாங்களோ?"னு வடிவேலு பாணியில்தான் கேட்கத் தோன்றுகிறது.

    இப்படி யோசித்து தங்கம் கடத்தி வருபவர்களை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பது தொடர்கதையாகவே உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் கம்பி அறுக்கும் எந்திரத்தில் மறைத்து ஒரு கோடியே 19 லட்சம் மதிப்பிலான 1666 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.

    இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் ரூ 1.20 மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.

    • மெயில் அனுப்பியவர்கள் குறித்து விசாரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அனைத்து விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு தினமும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் திருச்சி விமான நிலையம் பயணிகளின் கூட்டத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என விமான நிலைய இயக்குனர் மெயிலுக்கு தகவல் வந்ததை தொடர்ந்து தமிழக போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு சோதனை பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் இறுதியில் அந்த செய்தி புரளி என தெரிய வந்தது

    இந்த நிலையில் இன்று காலை 10:35 மணி அளவில் திருச்சி விமான நிலைய இயக்குனரின் இமெயிலிற்கு திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் வெடி கொண்டு வைத்திருப்பதாகவும் அது விரைவில் வெடிக்கும் எனவும் தகவல் அனுப்பப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து தமிழக போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு சோதனை பிரிவினர் மற்றும் மோப்பநாய் பிரிவினர் உள்ளிட்டோர் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். மெயில் அனுப்பியவர்கள் குறித்து விசாரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக திருச்சி விமான நிலையம் மற்றும் அனைத்து விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ×