search icon
என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • முதல்கட்டமாக ஜெயக்குமார் உடல் கிடந்த அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.
    • விசாரணை முழுவதும் சி.பி.சி.ஐ.டி. முத்தரசி முன்னிலையில் முழுக்க முழுக்க நடைபெற்று வருவதால் மர்ம மரண வழக்கு சூடுபிடித்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மச்சாவு வழக்கில் சுமார் 3 வாரங்களாக எந்தவித துப்பும் கிடைக்காத நிலையில், அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் அன்றைய தினமே தங்களது விசாரணையையும் தொடங்கினர். முதல்கட்டமாக ஜெயக்குமார் உடல் கிடந்த அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் அந்த கிராமத்தின் நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் உள்பட பலரிடம் விசாரித்தனர்.

    தொடர்ந்து 2-வது நாளான நேற்று அந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் நேற்று மாலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி தலைமையில் அதிகாரிகள் கரைசுத்துபுதூருக்கு மீண்டும் புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்களிடம் தங்களது சந்தேக கேள்விகளை கேட்டு அதற்கு விளக்கம் பெற்றனர்.

    இந்நிலையில் இன்று காலையில் போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ், விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி மற்றும் போலீசார் 2 வாகனங்களில் மீண்டும் கரை சுத்துபுதூருக்கு புறப்பட்டனர்.

    ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி மற்றும் அவரது மகன்களான கருத்தையா, ஜோ மார்ட்டின் ஆகியோரிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி அவர்கள் கூறும் தகவல்களை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்க முடிவு செய்துள்ளனர். மேலும் அவரது வீட்டின் அருகே உள்ள அக்கம்பக்கத்தினரிடமும், நண்பர்களிடமும் விசாரிக்க உள்ளனர்.

    இந்த விசாரணை முழுவதும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி முன்னிலையில் முழுக்க முழுக்க நடைபெற்று வருவதால் மர்மச்சாவு வழக்கு சூடுபிடித்துள்ளது.

    ஜெயக்குமார் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை முடிந்த பின்னர், இறப்புக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நம்பியாற்றில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. முன்கார் பருவ சாகுபடி பணிகளும் தொடங்கி உள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    குறிப்பாக 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று 5 அடி அதிகரித்து 57.30 அடியாக இருந்த நிலையில், இன்று சுமார் 5 சென்டிமீட்டர் மழை பெய்ததால் அணை நீர்மட்டம் மேலும் 7 அடி உயர்ந்துள்ளது.

    இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.30 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழையால் நேற்று 72.34 அடியாக இருந்த அந்த அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் சுமார் 13 அடி உயர்ந்துள்ளது.

    இதன் மூலம் அந்த அணை 85.46 அடியை எட்டியுள்ளது. அங்கு 26 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த 2 அணைகளுக்கும் நேற்று 3 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று வினாடிக்கு 4,372 கனஅடி நீர் வருகிறது.

    118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ½ அடி உயர்ந்து 85.52 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 802 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைப்பகுதியில் 25 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நம்பியாற்றில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 1 1/2 அடி உயர்ந்து 14 அடியை எட்டியுள்ளது.

    இதேபோல் கொடுமுடியாறு அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் 52.50 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 16 அடி உயர்ந்து 31 அடியாக உள்ளது. நேற்று அந்த அணையில் 15.25 அடி மட்டுமே நீர் இருப்பு இருந்தது.

    தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2 நாட்களாக ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிட மட்டுமே அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலைப்பகுதியில் தொடர்மழையால் களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மேலும் பணகுடி குத்திரபாஞ்சான் அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது. பெரும்பாலான காட்டுப்பகுதி ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாஞ்சோலை வனப்பகுதியிலும் கனமழை பொழிந்து வருகிறது.

    மாவட்டத்தில் கன்னடியன் கால்வாய் பகுதி, சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி, அம்பை உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை பரவலாக பெய்தது. பணகுடி மற்றும் திசையன்விளை பகுதிகளில் பலத்த மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. ராதாபுரத்தில் நெடுஞ்சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை தென்காசி நகர் பகுதி, செங்கோட்டை, புளியரை, ஆய்க்குடி, அச்சன்புதூர், மேக்கரை, இலஞ்சி, வல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    சங்கரன்கோவில், திருவேங்கடம், வாசுதேவநல்லூர், புளியங்குடி, சிவகரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அதிகபட்சமாக சிவகிரியில் 34 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    அங்கு தலையணை, தேவிபட்டினம், விஸ்வநாதபேரி, கோம்பையாறு, வடுகப்பட்டி, தென்மலை, ராயகிரி பகுதிகளில் சாரல் மழை நேற்று மாலையில் தொடங்கிய நிலையில், இரவில் இடி-மின்னலுடன் கனமழையாக பெய்தது. இன்றும் காலை 6 மணி முதல் காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. தென்காசி நகர் பகுதியில் 27.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    அணைகளை பொறுத்த வரை கருப்பாநதி, குண்டாறு, கடனா அணை, ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடனா அணை நீர்மட்டம் 1 அடி அதிகரித்து 36 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் மேலும் 6 அடி அதிகரித்து 52 அடியாகவும், கருப்பா நதி நீர்மட்டம் 2 அடியும் அதிகரித்துள்ளது. அடவி நயினார் அணை நீர்மட்டம் 4 1/2 அடி அதிகரித்து 55 அடியை எட்டியுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கயத்தாறு, கடம்பூர், ஓட்டப்பிடாரம், மணியாச்சி, கழுகுமலை மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக பெய்துவரும் மழையால் மானாவாரி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

    சாத்தான்குளம், திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கோடை மழை தொடர்ந்து பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான போலீசார் 2-வது நாளாக சம்பவம் நடந்த தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.
    • சம்பவம் நடந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தன்சிங் மர்ம மரண வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    20 நாட்களுக்கு மேலாகியும் இந்த வழக்கில் மர்ம முடிச்சுகள் அவிழவில்லை.

    எனவே இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும் விதமாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு நேற்று மாற்றம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தையும் மாவட்ட போலீசார், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நேற்றே ஒப்படைத்தனர். உடனடியாக வழக்குப்பதிவு செய்த நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையையும் தொடங்கினர்.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகா செல்வி, முனியாண்டி, சூர்யன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று திசையன் விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூருக்கு சென்று விசாரணையை தொடங்கினர்.

    இந்நிலையில் இன்று மீண்டும் கரைசுத்து புதூருக்கு சென்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான போலீசார் 2-வது நாளாக சம்பவம் நடந்த தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.

    அங்கு ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா? என்று ஆய்வு செய்த நிலையில், சம்பவம் நடந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். ஜெயக்குமாரின் மனைவி மற்றும் மகன்களிட மும் விசாரணை நடத்தப்பட்டது.

    பின்னர் ஜெயக்குமாரின் வீட்டில் பொருத்தியிருக்கும் கேமராக்கள், அவை எந்த திசையை பார்த்து இருக்கின்றன, வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தோட்டதிற்கான வியூ பாய்ண்ட் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

    இதனிடையே ஜெயக்குமார் எழுதியதாக கிடைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மதியம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து நெல்லைக்கு வருகிறார்.

    இதனால் அவரும் கரைசுத்துபுதூருக்கு சென்று விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது. 

    • கோடை காலத்தில் பதிவான அதிகபட்ச மழை அளவு இதுவாகும்.
    • ஊத்து பகுதியில் 78 மில்லி மீட்டரும் என கனமழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 464.2 மில்லி மீட்டர் அதாவது சுமார் 47 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த கோடை காலத்தில் பதிவான அதிகபட்ச மழை அளவு இதுவாகும். அதே நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நெல்லையின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை வனப்பகுதியிலும் நேற்று மாலையில் தொடங்கி இன்று காலை வரையிலும் பலத்த மழை பெய்துள்ளது.

    நாலுமுக்கில் 10.3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மாஞ்சோலையில் 43 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 66 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 78 மில்லி மீட்டரும் என கனமழை பெய்துள்ளது.

    • அணையின் நீர்மட்டம் நேற்று 52.45 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 5 அடி அதிகரித்து 57.30 அடியானது.
    • ராதாபுரத்தில் 10 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 5 மில்லிமீட்டரும், அம்பையில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கோடை மழை வழக்கத்தைவிட அதிகமாக பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரையிலும் கனமழை பெய்து வருகிறது. பிரதான அணை யான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இன்று காலை நிலவரப்படி 5 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 52.45 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 5 அடி அதிகரித்து 57.30 அடியானது.

    சேர்வலாறு அணையில் இன்று காலை வரை 28 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணையின் நீர்மட்டம் 64.27 அடியாக இருந்த நிலையில் தொடர் மழையால் இன்று ஒரே நாளில் சுமார் 8 அடி அதிகரித்து 72.34 அடியானது. இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 85 அடியை எட்டியுள்ளது. கொடுமுடியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நேற்று அந்த அணையின் நீர்மட்டம் 10 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 5 அடி உயர்ந்து 15.25 அடியை எட்டியுள்ளது.

    நெல்லை மாவட்டம் முழுவதும் பெய்யும் இந்த கோடை மழையினால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான இடங்களில் நெல் சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் கன்னடியன் கால்வாய் பகுதியில் 17 மில்லிமீட்டரும், களக்காட்டில் 12.4 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 6.6 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    ராதாபுரத்தில் 10 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 5 மில்லிமீட்டரும், அம்பையில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    இன்று காலையில் மாநகரில் ஒரு சில இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. தொடர்ந்து வெயில் அடித்த நிலையில் மீண்டும் விட்டு விட்டு சாரல் அடிக்க தொடங்கியது. பாளையில் 5.4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடனா அணை நீர்மட்டம் 2 அடி அதிகரித்து 35 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி அதிகரித்து 46.50 அடியாகவும் உள்ளது.

    மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்தது. இன்றும் காலை முதலே பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், மணியாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக மணியாச்சியில் 40 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கயத்தாறு, கடம்பூர், கழுழுமலை, சாத்தான்குளத்தில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. குலசேகரன்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதிகளிலும் சாரல் தொடர்ந்து வருகிறது.

    • கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • 5 பேர் கும்பலை பிடித்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் பகுதியை சோ்ந்தவர் சிவகுருமுத்துசாமி மகன் தீபக்ராஜா (வயது 30). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும், ரவுடி பட்டியலில் சேர்த்து போலீசார் கண்காணித்து வந்தனர்.

    இவர் கடந்த 20-ந் தேதி தனது வருங்கால மனைவி மற்றும் அவரின் நண்பர்களுடன் நெல்லை- திருச்செந்தூர் சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட வந்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த 6 பேர் கும்பல் கண்இமைக்கும் நேரத்தில் தீபக்ராஜாவை வெட்டிக்கொலை செய்தனர்.

    இதனையடுத்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே 5 பேர் கும்பலை பிடித்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் துணை போலீஸ் கமிஷனர் ஆதர்ஷ் பசேரா விசாரணை நடத்தினார்.

    முதற்கட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பக்கப்பட்டியில் நடந்த கொலை சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக இந்த கொலை அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. அந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டது தீபக்ராஜா என்பதால் அவரை மர்மகும்பல் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

    அவர்களிடம் நேற்று 2-வது நாளாக விசாரணை நடந்தது. அந்த விசாரணையின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் மேலும் 8 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள். தனிப்படை போலீசார் அவர்கள் இருக்கும் இடங்கள் குறித்து தகவல் சேகரித்து வருகிறார்கள். விரைவில் அவர்களையும் பிடித்து விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்நிலையில் தீபக் ராஜா கொலை வழக்கில் சரவணன், ஐயப்பன், தம்பன், ஐயப்பன் ஆகிய 4 பேரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் மீது கொலை வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்ட நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • போலீசார் 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

    நெல்லை:

    சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக கேரள மாநிலம் குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

    நேற்று காலை சென்னையில் இருந்து வழக்கம் போல் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயிலில் கார்டுக்கு முந்தைய முன்பதிவில்லா பெட்டியில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு நேற்று இரவு ரெயில் வந்தபோது அந்த முன்பதிவில்லாத பெட்டியில் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த சிலர் அதில் ஏறியுள்ளனர். அப்போது அவர்களுக்கும், ரெயிலில் ஏற்கனவே பயணித்த கேரளாவை சேர்ந்த பயணிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    அந்த ரெயில் நெல்லை சந்திப்பில் இருந்து 9 மணி அளவில் மீண்டும் புறப்பட்டது. அப்போது அவர்கள் இடையே தகராறு முற்றியதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதைக்கண்ட சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் நெல்லை மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இருபுறத்தில் கேட் மூடப்பட்டு இருந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வந்ததும், ரெயிலில் இருந்து 4 பேர் இறங்கினார்கள்.

    அதில் 2 வாலிபர், 2 இளம்பெண்கள் ஆகியோரும் திருச்சூரை சேர்ந்த நடன கலைஞர்கள் என்பதும், அவர்கள் கோவில்பட்டியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மதுபோதையில் சொந்த ஊருக்கு ரெயிலில் புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் ரெயிலை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இதுகுறித்து போலீசார் 4 பேரிடமும் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருவர் தீபக்ராஜா கொலை சம்பவத்தில் நேரடியாக தொடர்புடையவர் என்பதும், மற்ற 4 பேரும் சம்பவத்திற்கு உடந்தையாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
    • பிடிபட்ட 5 பேரையும் தனிப்படையினர் தனித்தனியாக அழைத்து சென்று பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் பகுதியை சோ்ந்த தீபக்ராஜா (வயது 30). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதால், ரவுடி பட்டியலில் சேர்த்து தொடர்ந்து அவரை போலீசார் கண்காணித்து வந்தனர்.

    இவர் கடந்த 20-ந்தேதி தனது வருங்கால மனைவி மற்றும் அவரது தோழிகளுடன் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட வந்தபோது அங்கு பதுங்கி இருந்த 6 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் தீபக் ராஜாவை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

    இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் நாங்குநேரி மற்றும் சேரன்மகாதேவியை சேர்ந்த 5 பேரை பிடித்தனர். அவர்களிடம் துணை போலீஸ் கமிஷனர் ஆதர்ஷ் பசேரா இன்று 2-வது நாளாக துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்.

    அதில் ஒருவர் தீபக்ராஜா கொலை சம்பவத்தில் நேரடியாக தொடர்புடையவர் என்பதும், மற்ற 4 பேரும் சம்பவத்திற்கு உடந்தையாக இருப்பதும் தெரியவந்துள்ளது. எனினும் அவர்கள் கூலிப்படையாக செயல்பட்டார்களா? இதில் பின்னால் இருந்து இயக்கிய முக்கிய புள்ளிகள் யார்? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுவரையிலான விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த வடிவேல் முருகன் கொலை செய்யப்பட்டதற்கு பழிதீர்க்கும் விதமாகவே இந்த கொலை சம்பவத்தை கும்பல் நிகழ்த்தியிருப்பது தெரியவந்துள்ளது. எனினும் பல்வேறு கேள்விகளுக்கு முழுமையாக விடை கிடைக்காத நிலையில், வேறு சில கோணங்களிலும் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தில் மொத்தம் 12 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் மேலும் 7 பேர் கும்பலை தனிப்படையினர் தேடி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து இந்த கொலையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள் என போலீசார் தெரிவித்தனர். பிடிபட்ட 5 பேரையும் தனிப்படையினர் தனித்தனியாக அழைத்து சென்று பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே கொலையாளிகளை முழுவதுமாக கைது செய்த பின்னரே தீபக் ராஜா உடலை பெற்றுக்கொள்வோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில் இன்று 4-வது நாளாக அவர்கள் உடலை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    • ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதியான முடிவை போலீசாரால் எடுக்க முடியவில்லை.
    • நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த 2-ந்தேதி உவரி அருகே உள்ள கரைசுத்துபுதூரில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மாயமானார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் 4-ந்தேதி காலையில் அவரது வீட்டின் பின்னால் இருக்கும் அவரது தோட்டத்தில் உடல் எரிக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமார் பிணமாக மீட்கப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக மர்ம மரணம் என உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தனிப் படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவரது மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என்பதை உறுதிப்படுத்த முடியாத அளவுக்கு மர்மம் நீடித்து வந்தது.

    இந்நிலையில் சி.சி.டி.வி. காட்சி பதிவுகள், சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த பல்வேறு தடயங்களின் அடிப்படையில் போலீசாரும் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்கள் என பலதரப்பட்டவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வந்தனர்.

    அவரது உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடல் இரும்பு கம்பியால் சுற்றப்பட்டிருந்ததும், முதுகு பகுதியில் கடப்பாக்கல் வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. ஆனால் அதிலும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதியான முடிவை போலீசாரால் எடுக்க முடியவில்லை.

    இதற்கிடையே அவரது டி.என்.ஏ. பரிசோதனை, உடல் எலும்புகள் மாதிரி சேகரிக்கப்பட்டு மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உயர்ரக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் முடிவுகளுக்காக போலீசார் காத்திருந்தபோதும் தொடர்ந்து வேறு பல கோணங்களிலும் தனிப்படையினர் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    இந்நிலையில் 3 வாரம் ஆகியும் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் உலகராணி நியமனம் செய்யப்பட்டு, அவர் இன்று காலை மர்ம மரணம் என வழக்கினை பதிவு செய்துவிட்டு, விசாரணையை தொடங்கினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோவில் உள்ள போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார்.
    • ஒரு வழக்கு தொடர்பாக நாங்குநேரி கோர்ட்டுக்கு வந்துவிட்டு சென்றபோது கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நேற்று அந்த பஸ் நாங்குநேரி நீதிமன்றம் முன்பு உள்ள நிறுத்தத்தில் நின்றபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் அந்த பஸ்சில் ஏறி உள்ளார். இதனை அடுத்து பஸ் கண்டக்டர் அந்த போலீஸ்காரரிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.

    அப்போது அந்த போலீஸ்காரர் அரசு பஸ்சில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து அரசு பஸ்சில் போலீஸ்காரர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என கண்டக்டர் கூறியுள்ளார்.

    ஆனால் அந்த போலீஸ்காரர் டிக்கெட் எடுக்க மறுத்ததோடு, எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள். போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம். நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும் என கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவில் உள்ள போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார். அதன்பேரில் நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சென்னை ஆயுதப்படையில் வேலைப்பார்த்து வரும் விருதுநகரை சேர்ந்த ஆறுமுகபாண்டி என்பது தெரியவந்தது.

    இவர் ஒரு வழக்கு தொடர்பாக நாங்குநேரி கோர்ட்டுக்கு வந்துவிட்டு சென்றபோது கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 11 பேரையும் மீட்டு கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள தெற்கு புலிமான்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 42).

    இவர் இறந்துபோன தனது தந்தை முருகேசனுக்கு திதி கொடுப்பதற்காக தனது தாய், மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் ஒரு ஜீப் வாகனத்தில் இன்று அதிகாலையில் கன்னியாகுமரி புறப்பட்டு சென்றுள்ளார். அதனை உவரி அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஓட்டிச்சென்றார்.

    கூடங்குளம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தோட்டவிளையை கடந்து ஜீப் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த சொகுசு கார் எதிர்பாராதவிதமாக ஜீப்பின் மீது நேருக்கு நேராக மோதியது.

    இதில் ஜீப்பில் பயணித்த விஜயகுமாரின் மனைவி சந்தனகுமாரி (38), விஜயகுமாரின் சகோதரி முத்துச்செல்வி (32) ஆகிய 2 பேருக்கும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

    மேலும் அதில் பயணித்த விஜயகுமார், அவரது தாயார் சரஸ்வதி (60), இளவரசன் (14), சம்போ (8), தமிழ் செல்வி (46), ஹரினி (13), கனிஷ்கா (13), பாக்கியவதி (56), ராஜேந்திரன் (50) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 11 பேரையும் மீட்டு கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே சந்தனகுமாரியும், முத்துச்செல்வியும் பரிதாபமாக இறந்தனர். மற்ற 9 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தீபக்ராஜா உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக்ராஜா (வயது 28).

    பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளரான இவர் மீது 4 கொலை வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது.

    இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் தனது வருங்கால மனைவியுடன் பாளை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட வந்தபோது 6 பேர் கும்பல் அவரை சரமாரி வெட்டிக்கொலை செய்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தூத்துக்குடி கோர்ட்டில் இருந்து போக்சோ வழக்கில் பக்கப்பட்டியை சேர்ந்த வடிவேல் முருகன் என்பவர் விடுதலையான நிலையில் அவர் வாகைகுளம் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது அவரை முன்விரோதத்தால் ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தனர்.

    அதில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு தீபக்ராஜா உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்திய பின்னரே கொலைக்கான காரணம் தெரிய வரும் என்றும், இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதும் தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் கொலையாளிகளை கைது செய்யும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் தெரிவித்து 2-வது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர்.

    இதனால் தீபக்ராஜா உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தற்போது 5 பேர் போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளதால், அவரது உறவினர்களிடம் தீபக்ராஜா உடலை ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×