search icon
என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • சிறப்பு ரெயில் 2 ஏசி பெட்டிகள், 10 பொதுப் பெட்டிகள் உள்பட 18 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
    • நாளை மாலை 3.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு பெங்களூர் செல்கிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் கோடை விடுமுறையையொட்டி பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு விடுமுறையை கழிப்பதற்காக சென்று வருகின்றனர்.

    இதனையொட்டி அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தென்னக ரெயில்வே சார்பிலும் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நெல்லையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. 06045 மற்றும் 06046 ஆகிய எண்களுடன் இயங்கும் இந்த சிறப்பு ரெயில் 2 ஏசி பெட்டிகள், 10 பொதுப் பெட்டிகள் உள்பட 18 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

    வாரந்தோறும் புதன்கிழமை நெல்லையில் இருந்து பெங்களூருக்கும், மறுநாள் காலை பெங்களூரில் இருந்து புறப்பட்டு அதே நாளில் நெல்லைக்கும் வந்தடையும் வகையில் இந்த ரெயிலுக்கான கால அட்டவணை தயாரிக்கப் பட்டுள்ளது. நாளை (புதன்கிழமை) நெல்லையில் இருந்து தனது பயணத்தை தொடங்கும் இந்த ரெயில் அடுத்த மாதம் 12-ந்தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமை இயக்கப்படுகிறது.

    நாளை மாலை 3.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு பெங்களூர் செல்கிறது. இதேபோல் மறு மார்க்கமாக நாளை மறுநாள் இயக்கத்தை தொடங்கி வருகிற 13-ந் தேதி வரை பெங்களூரில் இருந்து நெல்லைக்கு இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    அதன்படி நாளை மறுநாள் பெங்களூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மாலை 6.28 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைகிறது. இந்த ரெயிலானது நெல்லையில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரு மாநிலம் எலகங்கா வரை இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

    • கன்னடியன் கால்வாய் பகுதியில் அதிகபட்சமாக 9.8 மில்லி மீட்டர் மழை பெய்தது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் ஒரு மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    மாநகரில் சில நாட்களாக பெய்த மழையால் மேலப்பாளையம், சேவியர் காலனி விரிவாக்க பகுதியான பிரைட்காலனியில் உள்ள ராஜா நகரில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. அங்குள்ள 4-வது தெருவில் சாக்கடை நீருடன் சேர்ந்து மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் அதனை அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று 51.10 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.20 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 63.81 அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 62.80 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரு அடி உயர்ந்துள்ளது.

    கன்னடியன் கால்வாய் பகுதியில் அதிகபட்சமாக 9.8 மில்லி மீட்டர் மழை பெய்தது. சேரன்மகாதேவி, களக்காடு, அம்பை, ராதாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான நாலுமுக்கில் அதிகபட்சமாக 11 மில்லி மீட்டர், ஊத்து எஸ்டேட்டில் 10 மில்லி மீட்டரும், காக்காசியில் 7 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 5 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இதற்கிடையே நெல்லை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான சிவப்பு மழை எச்சரிக்கை விலக்கப்பட்டு ஆரஞ்சு நிற எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி நகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று பகலில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்த நிலையில் இன்று அதிகாலை வரையிலும் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிக பட்சமாக 11.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    செங்கோட்டை, ஆய்க்குடியில் தலா 5 மில்லி மீட்டரும், அணை பகுதிகளான ராமநதி மற்றும் கடனாவில் தலா 2 மில்லி மீட்டரும், குண்டாறு அணையில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம், சங்கரன்கோவில், சிவகிரி, புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் ஒரு மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சூரன்குடி பகுதியில் 6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • சமீபத்தில் கூட தீபக் ராஜாவிற்கும், மற்றொரு தரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் சிவகுருமுத்துசாமி. இவரது மகன் தீபக்ராஜா(வயது 30).

    இவர் நேற்று மதியம் நெல்லை-திருச்செந்தூர் ரோட்டில் பாளை கே.டி.சி.நகர் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட வந்தார். அப்போது ஓட்டலில் இருந்து வெளியே வந்த அவரை 6 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச்சென்றது.

    தகவல் அறிந்த பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா, உதவி கமிஷனர் பிரதீப் ஆகியோரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் புளூட்டோ வரழைக்கப்பட்ட நிலையில் அது திருச்செந்தூர் சாலையில் சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றுவிட்டது.

    இந்த சம்பவம் குறித்து பாளை போலீசில் தீபக்ராஜாவின் அண்ணன் முத்துக்குமார் அளித்த புகாரின்பேரில் மர்ம நபர்கள் 6 பேர் தீபக்ராஜாவை கொலை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொலை சம்பவத்தை நிகழ்த்திய கும்பல் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் நிறுவன தலைவர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளராக இருந்த தீபக் ராஜாவுக்கு அவரது உறவினர் மகள் ஒருவருடன் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது.

    இந்நிலையில் நேற்று அவர் தனது வருங்கால மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்துள்ளார். அப்போது அவர் தனது நண்பர்களை கே.டி.சி.நகர் தனியார் ஓட்டலுக்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். பின்னர் அவர்களை சாப்பிட சொல்லிவிட்டு தனது வருங்கால மனைவியுடன் அங்கிருந்து புறப்பட்டபோது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இதுதொடர்பாக அந்த ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கும்பல் அவரை சரமாரி வெட்டிக்கொலை செய்து விட்டு சிவப்பு நிற காரில் தப்பியதும், அந்த காருக்கு பின்னால் சில மோட்டார் சைக்கிளில் ஒரு கும்பல் தப்பிச்செல்வதும் தெரியவந்தது. இதனால் அந்த சாலையில் உள்ள மற்ற கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது அந்த கும்பல் நெல்லை-குமரி நான்குவழிச்சாலை வழியாக காரில் தப்பிச்சென்றது தெரியவந்து.

    இதையடுத்து நான்குவழிச்சாலையில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள 15-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அந்த கும்பல் கன்னியாகுமரி சென்று அங்கிருந்து கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாமா? அல்லது போலீசாரின் கவனத்தை திசை திருப்பிவிடுவதற்காக குமரி நோக்கி சென்றுவிட்டு பாதி வழியில் திரும்பி கிராமங்கள் வழியாக தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளுக்கு தப்பி சென்றிருக்கலாமா? என்ற கோணத்தில் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட தீபக்ராஜா மீது தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் குண்டு வீசி இரட்டைக்கொலை, முறப்பநாடு, தாழையூத்து, மூன்றடைப்பு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள், மதுரை மாவட்டத்தில் ஆயுதங்கள் பயன்படுத்திய வழக்கு என சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. அவரது பெயரை ரவுடிகள் பட்டியலில் வைத்து கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    சமீபத்தில் கூட தீபக் ராஜாவிற்கும், மற்றொரு தரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சமூக ரீதியில் அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாமா? அல்லது முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்திருக்கலாமா? என்று தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சம்பவம் நடந்த நேரத்தில் ஓட்டலுக்கு சாப்பிட வந்த சிலரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்யும் வரை தீபக்ராஜா உடலை பெற்றுக்கொள்ள போவதில்லை என்று அவரது உறவினர்கள் தமிழர் விடுதலை களம் ராஜ்குமார் தலைமையில் நேற்று அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை அருகே திருச்செந்தூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கொலையாளிகளை கைது செய்யும்வரை அவரது உடலை பெற்று கொள்ளப்போவதில்லை என கூறினார். தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக தீபக் ராஜா உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். 

    • 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் 67.45 அடி மட்டுமே நீர் இருப்பு இருந்தது. ஆனால் இன்று 85. 40 அடியாக நீர் இருப்பு உள்ளது.
    • மாவட்டத்திலும் அதே போல் வறண்ட கால நிலை இருந்தாலும் அவ்வப்போது சற்று இதமான காற்று வீசியது.‌

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை குறித்த எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ள நிலையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு மாஞ்சோலை, மணிமுத்தாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று மதியத்தில் இருந்து இன்று பிற்பகல் வரையிலும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் இன்று காலை நிலவரப்படி மழை எதுவும் பெய்யவில்லை. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51.30 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85.40 அடியாகவும் இருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 62.86 அடியாக உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 176 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 254 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் 67.45 அடி மட்டுமே நீர் இருப்பு இருந்தது. ஆனால் இன்று 85. 40 அடியாக நீர் இருப்பு உள்ளது. பாபநாசம் அணை பகுதியில் நீர்மட்டம் இன்று 51.30 அடியாக இருந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு இதே நாளில் 25 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதியளவு அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    மாநகரப் பகுதியில் வறண்ட வானிலையே காணப்பட்டது. மாவட்டத்திலும் அதே போல் வறண்ட கால நிலை இருந்தாலும் அவ்வப்போது சற்று இதமான காற்று வீசியது. வெயில் தாக்கம் இல்லாததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    தென்காசி மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்தாலும் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கணிசமான அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் இதமான காற்று வீசி வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும், வாகன ஓட்டிகளும் நிம்மதியடைந்துள்ளனர். கருப்பா நதி அணையின் நீர்டிப்பு பகுதியில் 4.5 மில்லி மீட்டரும், அடவிநயினார் பகுதியில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. விளாத்திகுளத்தில் 40 மில்லி மீட்டரும், கோவில்பட்டியில் 31 மில்லி மீட்டரும் மழை பெய்தது. எட்டயபுரம், வைப்பாறு, சூரங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. கடம்பூர், கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சாத்தான் குளம், திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன் பட்டினத்தில் வறண்ட வானிலையே நிலவியது. தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான சாரல் அடித்தது.

    • மற்ற 2 குழுக்கள் நெல்லை மாநகர் பகுதிகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் மற்றும் தீயணைப்பு துறையில் பேரிடர் பயிற்சி பெற்ற வீரர்களும் தயார்படுத்தப் பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, களக்காடு தலையணை உள்ளிட்ட பிரதான சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்கும், நீர் நிலைகளில் பொது மக்கள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை வெள்ள பாதிப்படையும் பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த உதவி கமிஷனர் முத்துகிருஷ்ணன் தலைமையில் 90 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வர வழைக்கப்பட்டுள்ளனர்.

    அதிவிரைவாக செல்லும் பைபர் படகுகள், வெள்ள பாதிப்புகளில் சிக்கி உள்ளவர்களை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள், மரங்கள் அறுவை எந்திரங்கள், ஜெனரேட்டர்கள், மருந்து உபகரணங்கள் என அதிநவீன உபகரணங்களுடன் வந்துள்ள மீட்பு படையினர் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

    மாவட்டத்தில் ஏதேனும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ளும் விதமாக இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான இந்த குழு கண்காணித்து வருகிறது.

    இந்த குழுவின் செயல் பாடுகளை இன்று தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் உதவி கமிஷனர் முத்து கிருஷ்ணன் ஆய்வு செய்தார். தொடர்ந்து கடந்த ஆண்டுகளில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு மேற்கொண்டு ஒரு குழுவை சேர்ந்த அதிகாரிகள் அனைத்து வகை உபகரணங்களுடன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி அடிவாரத்திற்கும், மற்ற 2 குழுக்கள் நெல்லை மாநகர் பகுதிகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    மாநகர் பகுதியில் உள்ள குழுவினர் பாதிப்பு குறித்த தகவல் கிடைக்கப்பெற்றால் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பேரிடர் கட்டுப்பாட்டு மைய உதவி எண்களும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் தவிர்த்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையில் பேரிடர் பயிற்சி பெற்ற வீரர்களும் தயார்படுத்தப் பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் வெள்ள பாதிப்பு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியை செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
    • வானிலை மையம் சிகப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

    கடந்த 15-ந் தேதி முதல் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிக கனமழை பெய்யும் என வானிலை மையம் சிகப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 21, 22-ந் தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகள் மட்டுமின்றி அணைப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இன்று காலை வரை அதிகபட்சமாக கொடுமுடியாறில் 45 மில்லி மீட்டரும், கடம்பூரில் 43 மில்லி மீட்டரும்,பாபநாசத்தில் 38 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் சேர்வலாறு, மணிமுத்தாறு, களக்காடு, தென்காசி, ஆய்க்குடி, ராதா புரம், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, நம்பி ஆறு, அடவிநயினார், கயத்தாறு, கழுகுமலை, கோவில்பட்டி, எட்டயபுரம், காடல்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

    தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே மணிமுத்தாறு, தலையணை, மாஞ்சோலை, நம்பிகோவில், பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தடை மறு உத்தரவு வரும்வரை தொடரும்.

    தாமிரபரணி ஆறு, கடனாநதி, சிற்றாறு, நம்பி ஆறு, அனுமன் நதி உள்ளிட்ட ஆறுகள், ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் மற்றும் தற்காலிக நீர்நிலைகளுக்குள் செல்ல வேண்டாம். மேலும் கால்நடைகளையும், வாகனங்களையும் அங்கு கொண்டு செல்ல வேண்டாம் என நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேலும் கடற்கரை யோரங்களில் அலையின் சீற்றம் அதிகம் இருக்கும் என்பதால் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண் டுள்ளார்.

    கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே பேரிடர் மீட்புபடையினர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் ஆயுதப்படை மைதானத்தில் முகாமிட்டு உள்ளனர்.

    வருவாய் துறையினரும் தயார் நிலையில் இருக்கவும், நீர் நிலைகள், குளங்கள், தாமிரபரணி ஆறு ஆகியவற்கை கண்காணிக்க வும் நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப் பட்டாலோ, மின்வயர்கள் அறுந்து கிடந்தாலோ உடனடி யாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட பேரிடர் மேலாண்மை உதவி மையத்தையும், தீயணைப்பு மையத்தையும் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.

    குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகளிலும், அணைக்கட்டு பகுதிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் தென்காசி மாவட்டத்தில் கனமழை மற்றும் அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கை யுடனும், பாதுகப்புடனும் இருக்கவும் கலெக்டர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மழையினால் பாதிப்பு ஏற்பட்டால் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்1077, 04633-290 548 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • சிறுத்தையை பிடிக்க இரும்புக்கூண்டு வைக்கும் இடத்தை தேர்வு செய்தனர்.
    • சிறுத்தையின் நடமாட்டத்தை அறிந்து அதனை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வேம்பையாபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது வீட்டில் கட்டிப்போட்டிருந்த ஆட்டை, வனப்பகுதியில் இருந்து இறங்கிய சிறுத்தை வேட்டையாடி தூக்கிச் சென்றது.

    இதேபோல் வி.கே.புரம் அருகே அனவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து என்பவரது வீட்டில் இருந்த ஆட்டையும் சிறுத்தை கடித்து தாக்கியது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாபநாசம் வனச்சரகர் சத்தியவேல் தலைமையிலான வனத்துறையினர் தீவிர ஆய்வு செய்து அந்த 2 இடங்களிலும் மோப்பநாய் 'நெஸ்' மூலமாக மோப்பம் பிடித்து சிறுத்தை வந்த வழியாக பின்தொடர்ந்து சென்றனர்.

    பின்னர் சிறுத்தையை பிடிக்க இரும்புக்கூண்டு வைக்கும் இடத்தை தேர்வு செய்தனர். அதன்படி வேம்பையாபுரம், அனவன்குடியிருப்பு பகுதிகளில் நடமாடிய சிறுத்தையை பிடிப்பதற்காக அங்கு 2 இடங்களில் கூண்டுகளை வைத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இரவில் கூண்டுகளில் ஆடுகளை கட்டி வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை அறிந்து அதனை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் வேம்பையாபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் நேற்று நள்ளிரவில் சிறுத்தை சிக்கியது. இதுகுறித்து அம்பை கோட்ட இணை இயக்குனர் இளையராஜா கூறுகையில், சிறுத்தை ஆக்ரோஷாக இருக்கிறது. அதனை மாஞ்சோலை வனப்பகுதியின் மேலே உள்ள அப்பர் கோதையாறு பகுதியில் கொண்டு சென்று விடுவதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். தொடர்ந்து அந்த பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


    • அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • குழுவினர் இன்று மழை பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    நெல்லை:

    தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்ய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை, தலையணை, நம்பிகோவில், மணிமுத்தாறு அருவி பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மேலும் 5 நாட்களுக்கு நெல்லையில் கனமழை, தென்காசியில் மிக கனமழைக்கான எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் மழையால் சேதங்கள் ஏற்பட்டால் உடனே மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் 90 பேர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு நேற்று வந்தனர். இவர்கள் பாளை ஆயுதப்படை மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்காக ரப்பர் படகு மற்றும் மரங்கள் விழுந்தால் அதை அகற்ற தேவையான உபகரணங்கள், ஜெனரேட்டார்கள் உள்ளிட்டவைகளையும் கொண்டு வந்துள்ளனர். இந்த குழுவினர் இன்று மழை பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    இதனையொட்டி இன்று காலை முதலே அவர்கள் தங்களுக்கு தேவையான உபகரணங்களை பிரித்து எடுத்துக்கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு புறப்பட்டனர்.

    • 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
    • 1,500 நாட்டு படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    இந்திய வானிலை ஆய்வு மையம் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரையிலும் பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக மாவட்டத்தில் கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, உவரி, கூத்தன்குழி, பஞ்சல், தோமையர்புரம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் சுமார் 1,500 நாட்டு படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • கைதிகள் அனைவரும் சாப்பாடு வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
    • போலீசார் பேரின்பராஜ் மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    நெல்லை:

    பாளை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

    இங்கு அடிக்கடி கைதிகளுக்குள் மோதல் நடப்பதும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு கைதிகள் அனைவரும் சாப்பாடு வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது விசாரணை கைதியான நெல்லையை சேர்ந்த பேரின்பராஜ் என்பவருக்கும், சக கைதிகளான முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்த ராஜூ மகன் மணிகண்டன், அத்தாள நல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால், தூத்துக்குடி டி.வி.கே. நகரை சேர்ந்த பரத் விக்னேஷ் ஆகியோர் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த ஜெயில் வார்டன்கள் உடனடியாக அங்கு வந்து அவர்களை பிடித்து சென்றனர்.

    இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) முனியாண்டி பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் பேரின்பராஜ் மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர்களை துணை விடுதி காப்பாளர் டாக்டர் கண்ணன் பாடு தட்டிக்கேட்டுள்ளார்.
    • மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் விசாரணை நடத்தி வருகின்றார்.

    நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் 4ம் ஆண்டு பயிலும் மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்ததாக தகவல் வௌியாகியுள்ளது.

    ராகிங் தொடர்பாக சம்பந்தப்பட் மாணவர்களை துணை விடுதி காப்பாளர் டாக்டர் கண்ணன் பாடு தட்டிக்கேட்டுள்ளார்

    இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், டாக்டர் கண்ணன் பாபுவின் கார் மீது பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராகிங், தாக்குதல் தொடர்பாக மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் விசாரணை நடத்தி வருகின்றார்.

    • தமிழகம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.
    • தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தமிழகம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40-45 கி.மீ முதல் அதிகபட்சமாக 55 கி.மீ வரை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    எனவே, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    ×