search icon
என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • பாஜக தனது வெறுப்பு அரசியலை தமிழகத்தில் புகுத்த பார்க்கிறது.
    • பாராளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவிலிருந்து பாஜக ஆட்சி அகற்றப்படும்.

    திருச்சி:

    திருச்சியில் இன்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

    இந்தியாவில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு, பெண்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு பா.ஜ.க. ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. உப்பு சத்தியாகிரகத்தை பற்றி, இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களை பற்றி மோடியும், அண்ணாமலையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    பாஜக தனது வெறுப்பு அரசியலை தமிழகத்தில் புகுத்த பார்க்கிறது. இதனை ஒரு நாளும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஜாதி, மத அரசியலை இந்திய மக்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ் இன துரோகி அண்ணாமலை தான். கர்நாடக எம்.பி. தமிழர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்திய போது அதற்கு அண்ணாமலை பதில் ஏதும் சொல்லாமல் இருப்பது ஏன்?தமிழகத்தின் உரிமை எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி நிச்சயம் குரல் எழுப்பும். காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழக அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். ஒரு நாளும் உரிமையை விட்டுக் கொடுக்காது. இந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவிலிருந்து பாஜக ஆட்சி அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாளை மறுநாள் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி வருகை தருகிறார்.
    • முக்கிய இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர்பட்டியில் உள்ள தனியார் மைதானத்தில் நாளை மறுநாள் (15-ந்தேதி) பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி வருகை தருகிறார். இதனை முன்னிட்டு நெல்லை மாவட்ட காவல்துறை சார்பாக வாகன தணிக்கை, தங்கும் விடுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடமான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    அதேபோல் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரசார கூட்டத்திற்கு கலந்து கொள்ள வரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களில் அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர்பட்டி பகுதியை சுற்றியுள்ள சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதனால் அங்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பேக்கிரி ஊழியர்கள் ராகுல் காந்தியுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தமிழகத்தில் முதற்கட்டமாகவும், ஒரேகட்டமாகவும் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நெல்லையில் பிரசாரம் மேற்கொண்டார்.

    நெல்லை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களைச் சேர்ந்த பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார். ராகுல் காந்தியுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொண்டார்.

    முன்னதாக, பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழியில் காரை நிறுத்திய ராகுல் காந்தி, சாலையை கடந்து பேக்கிரி ஒன்றுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக இனிப்புகளை வாங்கினார்.

    பிறகு, பேக்கிரி ஊழியர்கள் ராகுல் காந்தியுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

    தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ராகுல் காந்தி, தான் வாங்கிய இனிப்பை வழங்கி மகிழ்ந்தநார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

    • தமிழ்நாட்டின் கலாசாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை ஈர்த்துள்ளது.
    • எனவேதான் பாரத் ஜோடோ யாத்திரையை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினேன் என்றார்.

    நெல்லை:

    நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

    தமிழ்நாட்டு மக்களை என்றும் அன்போடி நேசிக்கிறேன். தமிழ்நாட்டின் கலாசாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை ஈர்த்துள்ளது.

    எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேனோ, அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டை பார்ப்பேன். தமிழ்நாடு இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது.

    பெரியாரைப் போன்ற பேராளுமைகளை தமிழ்நாடு கொடுத்துள்ளது. காமராஜர், கருணாநிதி போன்றோரையும் இந்த மண் தந்துள்ளது. எனவேதான் பாரத் ஜோடோ யாத்திரையை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினேன்.

    தமிழக விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராடியபோது மத்திய அரசு அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

    இந்தியாவில் உள்ள மற்ற எந்த மொழிகளை விட தமிழ் ஒன்றும் குறைந்தது இல்லை. தமிழ் என்பது மொழி அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை.

    தமிழ் மொழி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்பதை தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே பார்க்கிறேன்.

    மத்தியில் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவோம்.

    ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவோம்.

    அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்.

    பிரதமர் மோடி மீனவர்களை மறந்துவிட்டார். விவசாயிகளைப் போல மீனவர்களும் முக்கியமானவர்களே.

    உலகின் எந்த சக்தியாலும் தமிழை தொட்டுப் பார்க்க முடியாது என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது.
    • தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நெல்லையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    நெல்லை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களைச் சேர்ந்த பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார். ராகுல் காந்தியுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மதுரை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி நெல்லை வந்தடைந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • ராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்தையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    • ராகுல் காந்தி வருகையின் காரணமாக இன்று போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது.

    நெல்லை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக இன்று தமிழகம் வருகிறார்.

    நெல்லையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார். அப்போது நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய 8 தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்து பேசுகிறார்.

    இதற்காக மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மாலை 4 மணிக்கு பாளை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஹெலிபேடு தளத்தில் வந்திறங்குகிறார்.

    பின்னர் ராகுல்காந்தி அங்கிருந்து காரில் ஏறி பொதுக்கூட்டம் நடைபெறும் பாளை ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே அமைந்து உள்ள பெல் பள்ளி மைதானத்திற்கு செல்கிறார். தொடர்ந்து பொதுக்கூட்ட மேடைக்கு சென்று காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசுகிறார்.

    முன்னதாக அவர் ஹெலிபேடு தளத்தில் இருந்து கார் மூலம் பொதுக்கூட்ட மேடை வரையிலும் ரோடு-ஷோ செல்கிறார்.

    இதையொட்டி சாலையின் இருபுறமும் தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் நெரிசல் ஏற்படாமல் இருக்க சாலை ஓரம் இருபுறங்களிலும் கம்புகள் கட்டப்பட்டுள்ளது.

    ராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்தையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    ராகுல் காந்தி பொதுக்கூட்டத்திற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வேன்கள், கார்களில் இன்று காலை முதலே நெல்லையில் குவியத் தொடங்கினர். இதனால் நெல்லை மாநகரம் போக்குவரத்தால் ஸ்தம்பித்தது. பாளை -திருச்செந்தூர் சாலை முழுவதும் விழாக்கோலம் பூண்டது.

    ராகுல் காந்தி வருகையின் காரணமாக இன்று போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில் பல்வேறு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம் மற்றும் டவுன் வழியாக வரும் வாகனங்கள் பாளை மார்க்கெட் வழியாக சீவலப்பேரி சாலையில் வந்து திம்மராஜபுரம் பெருமாள் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதேபோல் குமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி வழியாக வரும் வாகனங்கள் சாந்திநகர், ரகுமத் நகர் சாலையில் வந்து திம்மராஜபுரம் பெருமாள் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மேலும் தாழையூத்து, சங்கர்நகர் வழியாக வரும் வாகனங்கள் மாவட்ட நீதிமன்றம்- சாந்திநகர் வழியாக திம்மராஜபுரம் கோவில் மைதானத்திற்கும் வந்து நிறுத்தப்பட்டிருந்தது.

    ராகுல் வருகையையொட்டி பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பாதுகாப்பு முன்எச்சரிக்கை காரணங்களுக்காக பைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

    பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திலும், திருச்செந்தூர் சாலையின் இருபுறத்திலும் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் பறந்தன.

    மேடை அமைந்திருந்த பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் முழு உருவ பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

    • தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படும் என்ற நம்பிக்கை இல்லை.
    • நெல்லை தொகுதிக்கு ராகுல் காந்தி வருவதை தேர்தல் திருவிழாவாக பார்க்கிறோம்.

    நெல்லை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., இன்று மாலை பாளையங்கோட்டையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இதையொட்டி காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை தரிசித்து வந்துள்ளேன். முருகப்பெருமான் எப்படி பாசிச சக்திகளை சூரசம்காரம் செய்தாரோ அதேபோல் சூரசம்காரம் செய்ய வேண்டி தரிசனம் செய்து முடித்துள்ளோம்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., இன்று மாலை 4 மணி முதல் 4.50 மணி வரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் அங்கிருந்து கோவை செல்கிறார். அங்கே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் சேர்ந்து பிரசாரத்தில் பங்கேற்க உள்ளார்.

    இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணியின் வெற்றி எழுச்சி மிக்க ஒன்றாக அமைந்துள்ளது. தினந்தோறும் 25, 50 என வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர் நாளுக்கு நாள் இறங்கி கொண்டே போகிறது என்று மாம்பழத்தை ஒப்பிட்டு பேசியுள்ளார். இந்த பேச்சு எங்களுக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது. மோடியின் ஆட்சியில் அதிகாரிகளாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்களே அவருக்கு எதிராக பேசி வருகிறார்கள்.

    தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படும் என்ற நம்பிக்கை இல்லை. ரூ.4 கோடி பிடிபட்ட பிறகும் ஒரு வாரம் கடந்த நிலையிலும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை அதிகாரிகள் கும்பகர்ணன் போல் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    எங்கள் வேட்பாளரிடம் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை. மக்கள், தொண்டர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து தான் பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு சொந்தமாக வண்டி கூட இல்லை.

    ரஜினிகாந்த் கர்நாட காவில் பிறந்து தமிழகத்தில் வந்து நடித்து வருகிறார். பக்கத்து மாவட்டத்தில் இருந்து வந்து போட்டியிடுபவரை இறக்குமதி வேட்பாளர்கள் என்கிறீர்கள். அவர் இறக்குமதி வேட்பாளர் இல்லை. அவர் தென் இந்தியா முழுவதும் மிகவும் பரிச்சயமான வேட்பாளர்.

    அவர் ஒரு மத போதகர். இந்தியா முழுவதும் உள்ள மக்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்பவர். ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்துக்குமான தேர்தல் இப்போது நடக்கிறது.

    நெல்லை தொகுதிக்கு ராகுல் காந்தி வருவதை தேர்தல் திருவிழாவாக பார்க்கிறோம். அவரது வருகை மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊருக்குள் கரடி புகுந்துள்ளதால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர்.
    • உடனடியாக கரடியை பிடிக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் இன்று காலை திடீரென கரடி ஒன்று புகுந்துள்ளது. தொடர்ந்து இந்த கரடி செய்வதறியாமல் கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள தெருக்களில் ஓடியது.

    இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்து கொண்டு அங்கும், இங்குமாக ஓடினர். அப்போது கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 57) பெண்ணை அந்த கரடி தாக்கி உள்ளது.

    இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த பெண் அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் என சுமார் 30 க்கும் மேற்பட்டோர் கல்லிடைக்குறிச்சி பகுதியில் கரடியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊருக்குள் கரடி புகுந்துள்ளதால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர். எனவே உடனடியாக அந்த கரடியை பிடிக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதற்கிடையே கரடி ஊருக்குள் புகுந்து பொது மக்களை விரட்டிய காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    • நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
    • நெல்லை பிரகடனம் என்ற பெயரில் இந்த பொதுக்கூட்டம் நடக்கிறது.

    நெல்லை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நெல்லையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்று தென் மாவட்டங்களில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

    இதனையொட்டி பாளை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள பெல் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் பொதுக்கூட்ட மேடையை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். தென் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார்.

    சிவகங்கை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார். நெல்லை பிரகடனம் என்ற பெயரில் இந்த பொதுக்கூட்டம் நடக்கிறது.


    தேசத்தில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக் கிறது. இந்தியா கூட்டணி எழுச்சியோடு வெற்றி வாகை சூட போகிறது. அதன் முன்னோட்டமாக தான் நாளை மாலை நெல்லையில் பிரசாரம் செய்ய இருக்கிறோம்.

    நாளை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். ஹெலிகாப்டர் இறங்கும் ஜான்ஸ் கல்லூரி மைதானம் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரை வாகன பிரசாரம் செய்ய வாய்ப்பு உள்ளது. ரோடு-ஷோவுக்கு வாய்ப்பு இல்லை. ஆனாலும் சாலையின் இரு புறங்களிலும் திரளான மக்கள் வந்து ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு வழங்குவார்கள்.

    பிரதமர் மோடி தமிழகத்தில் பேசும் ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும் இந்தியா கூட்டணியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார்.

    தேர்தல் நன்கொடை பத்திர விவகாரம், சி.ஏ.ஜி. அறிக்கை உள்ளிட்ட புகார்கள் மற்றும் அந்த ஊழல் தொடர்பான விளக்கங்களை பற்றி மோடி முதலில் வாயை திறக்கட்டும்.

    ஒரு முறை எங்களை பார்த்து கையை நீட்டுகிறார் என்றால் 4 விரல் அவரைப் பார்த்து இருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நெல்லை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தங்கபாலு, மேலிட பார்வை யாளர் ஸ்ரீ வல்லபிரசாத், மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
    • தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே நெல்லையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

    நெல்லை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேசிய கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் மாவட்டந்தோறும் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடும் பா.ஜனதா வெற்றி முனைப்பில் தீவிர வாக்கு வேட்டை நடத்தி வருகிறது.

    வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடி நேற்று வரை 7 முறை தமிழகத்திற்கு வந்து பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பேசியுள்ள நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பேசி வாக்கு சேகரிப்பதற்காக நெல்லை வருகிறார். அவர் வருகிற 15-ந்தேதி ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வர உள்ளார். இதனையொட்டி நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

    அவர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களிடையே பேச உள்ளார். அவர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே நெல்லையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    இந்நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பேசி வாக்கு சேகரிப்பதற்காக அவர் நெல்லைக்கு மீண்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த பொதுக்கூட்டத்தில் குமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மற்றும் தென்காசி தொகுதி கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரதமர் மோடி பேச உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதனையொட்டி இன்று வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் மேடை அமைப்பதற்காக பூமி பூஜை நடத்தப்பட்டது.

    பிரதமர் மோடி வருகையையொட்டி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அகஸ்தியர்பட்டி தனியார் பள்ளியில் பிரதமர் மோடி வந்திறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்திலும் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை குமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தக்கலையில் வேனில் நின்றபடி பேசுகிறார்.
    • காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    நெல்லை:

    தமிழ்நாட்டிற்கு வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

    இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரசாரத்துக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசின் சாதனைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்து வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசின் குறைகளை சுட்டிக்காட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தேசிய கட்சியான பா.ஜனதா, காங்கிரசும் தங்களுக்கே உரித்தான வழியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் தென் மாவட்டங்களை நோக்கி முக்கிய தலைவர்களின் கண் பார்வை தற்போது விழுந்துள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் போட்டியிடும் அனைத்து கட்சியின் வேட்பாளர்களும் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு கட்சி மேலிட நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து வந்து வாக்கு சேகரிக்கின்றனர்.

    பா.ஜனதாவை பொறுத்தவரை பிரதமர் மோடி நேற்று வரை 7-வது முறையாக தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். அவர் ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே கடந்த மாதம் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி நெல்லை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக அம்பை அகஸ்தியர் பட்டியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதனால் நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இதேபோல் உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (வெள்ளிக்கிழமை) மதுரைக்கு சிறப்பு விமானத்தில் வருகிறார். அங்கிருந்து சிவகங்கை தொகுதிக்கு செல்லும் அமித்ஷா, ரோடு- ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    பின்னர் புதுக்கோட்டையில் உள்ள கோட்டை பைரவர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்யும் அவர் விமானத்தில் மீண்டும் மதுரை செல்கிறார். அங்கு மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் மதுரையில் இரவில் ஓய்வெடுக்கும் அமித்ஷா, நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை தனி விமானத்தில் திருவனந்தபுரம் செல்கிறார்.

    பின்னர் காரில் குமரி மாவட்டம் தக்கலைக்கு செல்லும் அமித்ஷா அங்கு பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து ரோடு ஷோவில் பங்கேற்கிறார். பின்னர் மதியம் 12 மணிக்கு தனி விமானத்தில் திருச்சி செல்கிறார். அங்கிருந்து திருவாரூர் சென்று கார் மூலமாக நாகப்பட்டினம் செல்கிறார். அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும் அமித்ஷா, மீண்டும் திருச்சி வந்து அங்கிருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு மாலை 6 மணிக்கு வந்தடைகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் தென்காசிக்கு புறப்படும் அமித்ஷா, இலஞ்சியில் ராமசாமி பிள்ளை பள்ளி மைதானத்தில் வந்து இறங்குகிறார். அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு தென்காசி பாராளுமன்ற தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து ஆசாத் நகர் முதல் தென்காசி புதிய பஸ் நிலையம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் நடக்கும் ரோடு ஷோவில் பங்கேற்று ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் தூத்துக்குடி புறப்படும் அமித்ஷா, இரவு 8.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதற்காக ஹெலிகாப்டரில் நெல்லை வந்திறங்கும் ராகுல் காந்தி, பொதுக்கூட்ட மேடை வரை ரோடு ஷோவில் ஈடுபடுகிறார்.

    பின்னர் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்டவர்களை ஆதரித்து அவர் ஆதரவு திரட்டுகிறார்.

    தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை குமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தக்கலையில் வேனில் நின்றபடி பேசுகிறார். பின்னர் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் பேசுகிறார்.

    அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் உதயநிதி நெல்லைக்கு வருகிறார். அவர் நெல்லை தொகுதி வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து நாங்குநேரி பஜார் தெருவில் வேனில் நின்றபடி மக்களிடையே வாக்கு சேகரித்து பேசுகிறார். பின்னர் இரவு 8 மணிக்கு பாளை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில் பொதுமக்களிடையே ஆதரவு திரட்டுகிறார். இரவில் நெல்லையில் தங்குகிறார்.

    பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை காலை 10 மணிக்கு தென்காசி புதிய பஸ் நிலையம் பகுதியில் பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து கடையநல்லூர் மணிக்கூண்டு பெரிய பள்ளிவாசல் பகுதியில் பிரசாரம் செய்யும் அவர் மாலை 4 மணிக்கு சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்கிறார். பின்னர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக நாளை மாலை கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பும், இரவு 7 மணிக்கு மாப்பிள்ளை யூரணியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் முன்பும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜான்சிராணியை ஆதரித்து இன்று மாலை 6 மணிக்கு நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தச்சநல்லூர் சந்தி மறிச்சம்மன் கோவில் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

    அடுத்தடுத்து தலைவர்கள் முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரம் செய்வதால் தென் மாவட்ட தொகுதிகளின் பிரசார களத்தில் அனல் பறக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • நெல்லை மாநகர் முழுவதும் இன்று காலையில் தொடங்கி நாளை மறுநாள் காலை வரையிலும் டிரோன்கள் பறக்கவும் தடை விதித்து கமிஷனர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நெல்லை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாவட்டம் வாரியாக பிரதான கட்சிகளின் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் தேர்தல் நெருங்குவதையொட்டி தென்மாவட்டங்களில் இந்த வாரத்தில் தேசிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கட்சிகளின் நிர்வாகிகள் உற்சாகத்துடன் செய்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களின் இந்த படையெடுப்பால் தென்மாவட்டங்களில் தேர்தல் களம் அனல்பறந்து வருகிறது.

    இந்நிலையில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தென் மாவட்ட பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நாளை (வெள்ளிக்கிழமை) பிரசாரம் செய்கிறார். இதற்காக ஹெலிகாப்டர் மூலம் பிற்பகலில் நெல்லை வரும் ராகுல் காந்தி பாளை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்குகிறார்.

    அங்கிருந்து திறந்த வாகனத்தில் செல்லும் ராகுல் காந்தி ரோடு-ஷோ செல்கிறார். அப்போது அவரை பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்கும்போது கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க அவர் செல்லும் வழியில் பாதுகாப்பு கருதி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பின்னர் அவர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் எதிரே அமைந்துள்ள பெல் பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் உள்ளிட்டவர்களை ஆதரித்து அவர் ஆதரவு திரட்டுகிறார். இந்த கூட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதனையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில் ஹெலிபேடு தளம், அவர் செல்லும் திருச்செந்தூர் சாலை மற்றும் பிரசாரம் நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் நெல்லை மாநகர் முழுவதும் இன்று காலையில் தொடங்கி நாளை மறுநாள் காலை வரையிலும் டிரோன்கள் பறக்கவும் தடை விதித்து கமிஷனர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ×