search icon
என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • சித்ரா பவுர்ணமி முடிந்து 23-ந்தேதி மாலை முதல் திருவண்ணாமலையில் இருந்து திரும்பி வர வசதியாகவும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • பொதுமக்கள், பக்தர்கள் சிறப்பு சேவைகளை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலையில் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ள சித்ரா பவுர்ணமி திருவிழாவினை முன்னிட்டு நெல்லை, வள்ளியூர், திசையன்விளை, பாபநாசம், தென்காசி, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேரில் காண்பதற்காக செல்வார்கள்.

    இதனால் தேவைக்கேற்ப சிறப்பு சேவையாக கூடுதல் பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் நெல்லை மற்றும் தூத்துக்குடி மண்டலம் மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த இடங்களில் இருந்து 22-ந்தேதி காலை முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கவும், அதேபோல் சித்ரா பவுர்ணமி முடிந்து 23-ந்தேதி மாலை முதல் திருவண்ணாமலையில் இருந்து திரும்பி வர வசதியாகவும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    எனவே பொதுமக்கள், பக்தர்கள் இந்த சிறப்பு சேவைகளை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
    • புகாரின் பேரில் உவரி போலீசார், சத்யா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா நேற்று ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உவரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் உவரி போலீசார், சத்யா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மாவட்டம் தோறும் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை தமிழகத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிறார்.

    நெல்லை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

    இதனை ஒட்டி தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மாவட்டம் தோறும் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நாளை மறுநாள் தமிழகத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிறார். அவர் அன்றைய தினம் நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

    இந்த பிரசாரத்தின் போது நெல்லை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களை சேர்ந்த பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாளை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார்.

    இதனையொட்டி நெல்லை மாநகர் முழுவதும் நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் 13-ந்தேதி காலை 6 மணி வரை 2 நாட்கள் நெல்லை மாநகர பகுதி முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும்.
    • தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் விடுமுறையை ஒட்டி படை எடுப்பார்கள்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும்.

    இந்த காலகட்டங்களில் பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்து பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    குறிப்பாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் விடுமுறையை ஒட்டி படை எடுப்பார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படும்.

    அதன்படி இந்த ஆண்டும் கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில்களை தென்னக ரெயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் வாரம் தோறும் வியாழக்கிழமை சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் வெள்ளிக் கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக் கோட்டை, விருதுநகர் வழியாக நெல்லை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு ஆடுகளும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் முதல் விலை போனது.
    • கொங்கு ரக கிடாக்கள் 2 சுமார் ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கால்நடை சந்தையாக மேலப்பாளையம் கால்நடை சந்தை இருந்து வருகிறது. தென் மாவட்டங்களை பொறுத்தவரை எட்டயபுரம் கால்நடை சந்தைக்கு அடுத்தபடியாக இந்த மேலப்பாளையம் சந்தையில் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது.

    இங்கு வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நெல்லை சுற்று வட்டார பகுதிகள், ஆலங்குளம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆடுகளை விவசாயிகளும், வியாபாரிகளும் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை மற்றும் சித்திரை மாதத்தில் கோவில் திருவிழாக்கள் அதிகம் இருப்பதால் மேலப்பாளையம் சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

    இன்று அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களும், பொதுமக்களும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை வாங்கி சென்றுள்ளனர் என்று வியாபாரிகள் கூறினர். இதனால் ஆடு விற்பனையானது சுமார் ரூ.3 கோடி அளவுக்கு இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஒவ்வொரு ஆடுகளும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் முதல் விலை போனது. கொங்கு ரக கிடாக்கள் 2 சுமார் ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ரம்ஜான் பண்டிகை நெருங்குவதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் சந்தை பகுதியில் குவிந்தனர். இதனால் அந்த சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வது குறித்து ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார பயண திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட தென் மண்டல பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற 12-ந்தேதி நெல்லை மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

    இதனை ஒட்டி பாளை பெல் மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை தமிழக நிதி அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று காலை பார்வையிட்டார். அப்போது அவருடன் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற 12-ந் தேதி நெல்லையில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி என்பது உறுதியாக இருந்தாலும் ராகுல் காந்தியின் வருகை அவரது வெற்றியை மேலும் வலுப்படுத்தும்.

    ராகுல் காந்தியின் வருகைக்கு ஒரு நாள் முன்போ அல்லது அதற்கு அடுத்த நாளோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வது குறித்து ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவரது பிரசார பயண திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

    அடுத்த மாதம் 1-ந்தேதி மத்திய அரசின் கேபினட் செயலாளர் தலைமையில் வரும் 100 நாட்களுக்கான அரசு திட்டங்கள் குறித்த ஒரு கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பானது. இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையத்திடம் தான் புகார் அளிக்க வேண்டும்.

    தி.மு.க.வின் வக்கீல் அணியும் இது போன்ற தகவல்களை உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு அளித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதற்கென பிரத்தியேக வார்-ரூம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கமாக ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெறும் நிலையில் பண்டிகை, திருவிழா நேரங்களில் ரூ. 6 முதல் ரூ. 7 கோடி வரை விற்பனை நடைபெறும்.
    • மேலப்பாளையம் வாரச்சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் கொண்டுவரப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட மேலப்பாளையத்தில் கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது.

    ஆடு, மாடுகளுடன், கோழி, கருவாடு உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்படுவதால் தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றாக இது திகழ்கிறது.

    ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாடு விற்பனையும், செவ்வாய்கிழமைகளில் ஆடு விற்பனையும் நடைபெற்று வருகிறது.

    இந்த சந்தையில் விற்பனைக்கு வரும் ஆடு, மாடுகளை வாங்க நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது ஆடு, மாடுகளை சந்தைக்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்கின்றனர். இந்த சந்தையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் உட்பட முக்கிய பண்டிகை காலங்களில் ஆடு, மாடு விற்பனை அதிகளவில் காணப்படும். வழக்கமாக ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெறும் நிலையில் பண்டிகை, திருவிழா நேரங்களில் ரூ. 6 முதல் ரூ. 7 கோடி வரை விற்பனை நடைபெறும்.

    இந்நிலையில் ரம்ஜான் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் இன்று மேலப்பாளையம் சந்தையில் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளுடன் திரண்டனர்.

    இதற்காக மேலப்பாளையம் வாரச்சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் கொண்டுவரப்பட்டது. அவற்றை வாங்க ஏராளமான வியாபாரிகள், பொது மக்களும் குவிந்தனர்.

    • நயினார் நாகேந்திரன் உள்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு.
    • விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக புகார்.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பிரதான கட்சியான பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நேற்று ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை. இந்நிலையில் நேற்று ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம், இருக்கன்துறை உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் அவர் நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக தகவல் அறிந்த பறக்கும்படை அதிகாரி தினேஷ்குமார் பழவூர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மொத்தம் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே தாக்கல்.

    நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    தேர்தல் செலவு கணக்குகளை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கணக்கு தாக்கல் செய்ய தவறினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே செலவு கணக்கை முழுமையாக தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • எந்தவிதமான வாக்குறுதியும் நிறைவேற்றாமல் எப்படி ஓட்டு கேட்க பா.ஜனதாவினர் வருகிறார்கள் என்று தெரியவில்லை.
    • பண மதிப்பிழப்பு செய்தது வேடிக்கையான ஒன்று.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லைக்கு வரும் ராகுல் காந்தி ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலமாக பெல் பள்ளி மைதானத்திற்கு வந்து சேர்கிறார். அப்போது ரோடு-ஷோ நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.

    நெல்லை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஓட்டல்களில் பறக்கும் படை சோதனை மற்றும் ரெயில் நிலையத்தில் சிக்கிய ரூ.4 கோடி விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவார்கள். அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்ய மாட்டார்கள்.

    சாதாரண வேட்பாளர்களை, நோஞ்சான் வேட்பாளர்களை தான் துன்பப்படுத்துவார்கள். அதுதான் பா.ஜ.க.வின் ஸ்டைல்.

    எந்தவிதமான வாக்குறுதியும் நிறைவேற்றாமல் எப்படி ஓட்டு கேட்க பா.ஜனதாவினர் வருகிறார்கள் என்று தெரியவில்லை. இதனால் தான் தற்போது ஓட்டு கேட்க வரும்போது பா.ஜ.க.வினர் கூனி குறுகி போய் நிற்கின்றனர்.

    பண மதிப்பிழப்பு செய்தது வேடிக்கையான ஒன்று. தமிழர்களின் உரிமைகளை பா.ஜ.க பறித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பா.ஜ.க.வுடன் கொல்லைப்புறமாக அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    பா.ஜ.க.வினரின் சர்வாதிகாரம் மேலோங்கி நிற்கிறது. பாசிசம் ஒழிய வேண்டும். ஜனநாயகம் மலர வேண்டும். சர்வாதிகாரம் வீழ வேண்டும். அதற்கு இந்த தேர்தல் பதில் சொல்லும் என்று நம்புகிறோம். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்காளர்கள் பூர்த்தி செய்த பின்னர் படிவங்களை உதவி தேர்தல் அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டது.
    • முதற்கட்டமாக இன்றும், நாளை மறுநாளும் (8-ந் தேதியும்) தபால் வாக்குகள் பெறும் பணி நடக்கிறது.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குச் சாவடிக்கு நேரில் வந்து வாக்கு அளிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம் என்ற விபரத்தை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதையடுத்து கடந்த மாதம் 20-ந் தேதி முதல் 5 நாட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களும் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று அவர்களது விருப்பத்தை கேட்டனர். மேலும் வீட்டிலிருந்தே வாக்களிக்க விரும்புபவர்களுக்கு 12 டி விண்ணப்ப படிவத்தை வழங்கினர். அதனை வாக்காளர்கள் பூர்த்தி செய்த பின்னர் படிவங்களை உதவி தேர்தல் அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டது.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரை 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,521 மூத்த குடிமக்கள், 1146 மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தனர்.

    அந்த வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடி வாக்களிக்கும் விதமாக அவர்களிடம் தபால் வாக்குகளை பெறும் பணி நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் தொடங்கியது. தபால் வாக்குச்சீட்டு வழங்குவதற்கு மண்டல அலுவலர்கள் தலைமையிலான வாக்குச்சாவடி குழு அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்த மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களிடம் வாக்குகளை பெற்றனர். பின்னர் அதனை அந்த பெட்டியில் போட்டு சீல் வைத்தனர். இந்த பணிகள் அனைத்தும் நுண் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. முதற்கட்டமாக இன்றும், நாளை மறுநாளும் (8-ந் தேதியும்) தபால் வாக்குகள் பெறும் பணி நடக்கிறது.

    இதனையொட்டி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் இன்று காலை 7 மணிக்கு தொகுதி முழுவதும் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகத்தில் இருந்தும் தனி வாகனத்தில் தேர்தல் ஊழியர்கள் அடங்கிய குழு புறப்பட்டு சென்றது. அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை பெற்று தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பணியானது நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானூர், சேரன்மகாதேவி, அம்பை, நெல்லை, பாளை, நாங்குநேரி, வள்ளியூர், திசையன்விளை, ராதாபுரம், ஆலங்குளம், கடையம் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் இருந்து இன்று தொடங்கியது.

    இந்த பணியில் மண்டல அலுவலர் தலைமையில் மண்டல உதவியாளர், சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலான காவல்துறையினர், உதவியாளர், நுண்பார்வையாளர், வீடியோகிராபர் ஆகிய 6 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேற்கண்ட 2 நாட்களிலும் தபால் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு வாய்ப்பாக வருகிற 10-ந் தேதி மீண்டும் இதே போல் ஊழியர்கள் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு சென்று வாக்கை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த பணிகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. முன்னதாக அனைத்து தாலுகா அலுவலகங்களில் இருந்தும் தபால் வாக்குகளை பெறுவதற்காக எடுத்து செல்லும் பெட்டி அரசியல் கட்சியினரின் முன்னிலையில் திறந்து காண்பிக்கப்பட்டது.

    • சோதனையானது சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக இன்று காலையும் தொடர்ந்து வருகிறது.
    • சோதனையில் கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அரசியல் கட்சியினர் மூலம் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக அரசு ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்கள் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்துள்ளதாகவும், அதனை அரசியல் கட்சியினருக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் வருவமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் டெண்டர்களை எடுக்கும் அரசு ஒப்பந்ததார் ஆர்.எஸ்.முருகன் என்பவருக்கு சொந்தமான நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணத்தில் அவரது பண்ணை வீட்டில் நேற்று மதியம் வருமானவரித்துறை அதிகாரிகள் 6 பேர் குழுவினர் சோதனையை தொடங்கினர்.

    தொடர்ந்து பாளை பெருமாள்புரத்தில் உள்ள ஆர்.எஸ்.முருகனின் அலுவலகத்திலும், என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இதில் என்.ஜி.ஓ. காலனி வீட்டில் சுமார் 2 மணி நேரம் மட்டுமே சோதனை நடத்தப்பட்ட நிலையில், விஜயநாராயணம் பண்ணை வீட்டில் இன்று காலை வரையிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையானது சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக இன்று காலையும் தொடர்ந்து வருகிறது. சோதனையில் கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பெருமாள்புரம் அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு 11 மணி வரையிலும் சோதனை நடத்தப்பட்ட நிலையில் அதன் பின்னர் வருமான வரித்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதே நேரத்தில் அந்த அலுவலகத்தை வருமான வரித்துறையினர் தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளனர்.

    அங்கு அதிகாரி ஒருவர் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேறு யாரும் அந்த அலுவலகத்திற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் தற்போது அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.

    ×