search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • ஆலங்காயத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
    • காவாபட்டறை அருகே பஸ் வரும்போது எதிரே பைக்கில் வந்த அருள்குமார், பிரவீன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த முல்லை நிம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேஷ் என்பவரது மகன் பிரவீன் (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருள்குமார் (24). இருவரும் நண்பர்கள். திருப்பத்தூரில் யோகா பயிற்சி பெற்று வந்தனர்.

    வாலிபர்கள் 2 பேரும் தினமும் பைக்கில் யோகா பயிற்சி மையத்திற்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல யோகா பயிற்சி மையத்துக்கு பிரவீனும், அருள்குமாரும் பைக்கில் இன்று காலை சென்று கொண்டிருந்தனர்.

    ஆலங்காயத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

    காவாபட்டறை அருகே பஸ் வரும்போது எதிரே பைக்கில் வந்த அருள்குமார், பிரவீன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருள்குமார், பிரவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் போக்குவரத்தை சீர் செய்து விபத்து ஏற்படுத்திய அரசு பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து கண்டக்டர், டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வங்கி அதிகாரிகள் திருப்பத்தூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • நள்ளிரவில் ஏ.டி.எம். உடைத்து பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் ரெயில் நிலைய சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இங்கு மக்கள் அவ்வப்போது பணம் எடுப்பதோடு, டெப்பாசிட் செய்கின்றனர்.

    இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை அருகே உள்ள சோமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சக்திவேல் (வயது 24) நேற்று நள்ளிரவு காட்பாடியில் இருந்து ரெயிலில் திருப்பத்தூருக்கு வந்தார். ஏ.டி.எம். மையத்தில் புகுந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கினார்.

    மேலும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருடினார். அப்போது ஹைதராபாத்தில் உள்ள அந்த வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.

    இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் திருப்பத்தூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் ரோந்து பணியில் இருந்த போலீசார் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது எந்திரத்தை உடைத்து பணம் திருடி கொண்டிருந்த சக்திவேலை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    நள்ளிரவில் ஏ.டி.எம். உடைத்து பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 17 வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் சிக்கினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் மீது பாலியல் புகார் எழுந்தது.
    • கற்பழிப்பு வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை குற்றவாளியாக அறிவித்து காத்மாண்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேன். சுழற்பந்து வீரரான அவர் 17 வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் சிக்கினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் மீது பாலியல் புகார் எழுந்தது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

    கற்பழிப்பு வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை குற்றவாளியாக அறிவித்து காத்மாண்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அவருக்கான தண்டனை விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேன் மீதான தண்டனை விவரம் வருகிற 10-ந்தேதி அறிவிக்கப்படுகிறது. அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    23 வயதான அவர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

    • தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை அதன் டிரைவர் இடது பக்கமாக திடீரென திருப்பினார்.
    • பரந்தாமன் அவரது மனைவி காவேரி மற்றொரு மகள் இளவரசி ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பெரியகம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மனைவி காவேரி. தம்பதியினரின் மகள்கள் கார்த்திகா ஸ்ரீ (வயது 9), பேரரசி (6), இளவரசி.

    ஆங்கில புத்தாண்டையொட்டி ஆம்பூரில் உள்ள பெரிய ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பரந்தாமன் முடிவு செய்தார். அதன்படி பரந்தாமன் தனது மனைவி மற்றும் மகள்களுடன் பைக்கில் ஆம்பூர் நோக்கி சென்றார்.

    அப்போது ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை அதன் டிரைவர் இடது பக்கமாக திடீரென திருப்பினார்.

    அப்போது பரந்தாமன் சென்ற பைக் லாரியில் மோதியது. அனைவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

    அப்போது கார்த்திகா ஸ்ரீ, பேரரசி ஆகியோர் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    பரந்தாமன் அவரது மனைவி காவேரி மற்றொரு மகள் இளவரசி ஆகியோர் காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

    தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் லாரி சக்கரத்தில் சிக்கி இறந்த 2 சிறுமிகளின் பிணத்தையுய் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    புத்தாண்டையொட்டி கோவிலுக்கு சென்றபோது 2 சிறுமிகள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தபடி சந்திரபாபு நாயுடு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
    • 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஜோலார்பேட்டை:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர முன்னாள் முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தில் உள்ள தன்னுடைய சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இந்நிலையில் நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தார். தமிழக பொதுமக்கள் பூங்கொத்து கொடுத்து மலர் தூவி தலைப்பாகை சூடி வரவேற்றனர். மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தபடி சந்திரபாபு நாயுடு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வெடிக்காமல் இருந்த மீதமுள்ள 2 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் தமிழருவி. இவர் வாணியம்பாடி பஸ் நிலையத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பேக்கரியில் ஒரு ஊழியர் மற்றும் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்தனர். திடீரென மது பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி, அதனை பற்ற வைத்து பேக்கரியில் வீசினர். அதில் ஒரு பாட்டில் மட்டும் வெடித்து சிதறியது. இதில் கடையில் தீ பிடித்து எரிந்தது. கடையில் இருந்த பொருட்கள் தீயில் கருகியது. மேலும் தீ மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதனை கண்ட ஊழியர் அதிர்ச்சி அடைந்து தீயை அணைக்க முயன்றார். அப்போது அவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. மர்ம கும்பல் கடைக்குள் புகுந்து ஊழியரை மிரட்டி தாக்க முயன்றனர். அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சுதாரித்து கொண்ட மர்ம கும்பல் அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் வாணியம்பாடி டவுன் போலீசாருக்கும் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கடையில் மேலும் தீ பிடிக்காமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அங்கு வெடிக்காமல் இருந்த மீதமுள்ள 2 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசி, ஊழியரை மிரட்டி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • பெற்றோர் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை பாத்திரத்தில் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த தண்ணீர் பந்தலை சேர்ந்தவர் பூபதி, கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி புத்திப்பிரியா என்ற மனைவியும், 2 வயதில் மிதுளாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

    நேற்று மிதுளாஸ்ரீ வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அருகில் சில்வர் தண்ணீர் பாத்திரம் இருந்தது. இந்த சில்வர் பாத்திரத்திற்குள் சிறுமி இறங்கினாள். அப்போது எதிர்பாராத விதமாக மிதுளாஸ்ரீ உள்ளே மாட்டிக் கொண்டார்.

    பாத்திரத்தில் இருந்து வெளியே வர முடியாமல் கதறி அழுதது. அழுகுரல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், குழந்தை சில்வர் பாத்திரத்திற்குள் மாட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் குழந்தையை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து பெற்றோர் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில், நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பாத்திரத்தில் மாட்டியிருந்த குழந்தையின் தலையை வெளியே எடுக்க முயன்றனர்.

    பின்னர் கட்டிங் எந்திரத்தைகொண்டு பாத்திரத்தை இரண்டாக வெட்டி பிளந்து சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

    வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை பாத்திரத்தில் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கி கணக்கில் இருந்து பணம் மும்பை ஏ.டி.எம். கார்டை வைத்து எடுத்தது தெரிய வந்தது.
    • சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த வாலூரை சேர்ந்தவர் தசரதன் (வயது 35). இவர் வெலக்கல் நத்தம் பகுதியில் செல்போன் சர்வீஸ் மற்றும் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் ஜெயபால் (47). டெய்லர். இவரும், வாலிபர் ஒருவரும் தசரதன் செல்போன் கடைக்கு பைக்கில் வந்தனர்.

    அப்போது தசரதனிடம் வாலிபர் தனக்கு அவசரமாக ரூ.20 ஆயிரத்தை கூகுள் பே அல்லது ஜி பேயில் அனுப்புமாறும் கையில் பணத்தை தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

    இதனை நம்பிய தசரதன் ஆன்லைன் மூலம் ரூ.20 ஆயிரத்தை வாலிபர் சொன்ன எண்ணுக்கு அனுப்பி வைத்தார்.

    பின்னர் பணத்தை தசரதன் கேட்டார். அதற்கு அந்த வாலிபர் அருகே உள்ள ஏ.டி.எம்-மிற்கு சென்று பணத்தை எடுத்து வந்து தருவதாக கூறினார். இதனால் ஜெயபாலை செல்போன் கடையில் அமர வைத்துவிட்டு வாலிபர் பணத்தை எடுத்து வருவதாக கூறி விட்டு சென்றார்.

    வெகு நேரமாகியும் வாலிபர் வராததால் ஜெயபால், நான் சென்று பார்த்து வருகிறேன் என்று தசரதனிடம் கூறிவிட்டு சிறிது தூரம் சென்றார். சந்தேகம் அடைந்த தசரதன் கத்தி கூச்சலிட்டார். அப்போது அங்கிருந்து ஓட்டம் பிடித்த ஜெயபாலை அருகே இருந்த வியாபாரிகள் விரட்டி பிடித்தனர்.

    பின்னர் ஜெயபாலிடம் விசாரித்தபோது, தன்னுடன் வந்த வாலிபர் யார் என்பது எனக்கும் தெரியாது. நான் மது குடிக்க வந்தேன். அங்குதான் அந்த வாலிபரை சந்தித்தேன்.

    மேலும் அந்த வாலிபர் எனக்கு ஒரு குவாட்டர் வாங்கி தருகிறேன் என்று கூறி என்னுடன் வாருங்கள் என்று இங்கே அழைத்து வந்தார். நானும் மது பழக்கத்தால் குவாட்டருக்கு ஆசைப்பட்டு வந்தேன். என்னை அடகு வைத்து மாட்டி விட்டு சென்றுவிட்டார் என்று புலம்பினார்.

    தசரதன் உடனடியாக வங்கிக்கு சென்று வாலிபர் கொடுத்த செல்போன் நம்பரை வைத்து வங்கி கணக்கை பரிசோதித்து பார்த்தார். அப்போது வங்கி கணக்கில் இருந்து பணம் மும்பை ஏ.டி.எம். கார்டை வைத்து எடுத்தது தெரிய வந்தது.

    ஜெயபாலை நாட்டறம் பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். டெய்லரை அடகு வைத்த கில்லாடி திருடனை தேடி வருகின்றனர்.

    சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனதாபுரம், செட்டியப்பனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது.
    • பல்வேறு வீடுகளில் பாத்திரங்கள் உருண்டு ஓடின.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 2 முறை லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

    சரியாக காலை 7.35 மணி மற்றும் 7.42 மணி அளவில் நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்தனர்.

    குறிப்பாக வாணியம்பாடி நியூ டவுன், யாப்பா நகர், பொரபசர் நகர், ஜனதாபுரம், செட்டியப்பனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது.

    அதேபோல் ஆம்பூர் அடுத்த மாதனூர், பாலூர் ஊராட்சி, கருப்பூர் ஊராட்சி உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

    ஆம்பூர் பேட்டையில் கோபி சங்கர் என்பவரது வீட்டில் நில அதிர்வால் விரிசல் ஏற்பட்டது.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம், ராஜாகுப்பம், பல்லக்குப்பம், அணைக்கட்டு அடுத்த குருவராஜபாளையம், ஆசனாம்பட்டு, சின்னப்பள்ளிகுப்பம், தென்புதூர், அரிமலை உள்ளிட்ட பகுதிகளில் காலையில் திடீரென பெரும் சத்தம் கேட்டது.

    கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் குலுங்கின. நாய்கள் சிதறி ஓடியது.கால்நடைகள் மிரண்டன.

    அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியேறி வீதிகளுக்கு ஓடி வந்தனர்.

    சில இடங்களில் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் விழுந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த புவியியல் துறை மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நில அதிர்வு காரணமாக சில வீடுகளில் சிலாப் மீது வைத்திருந்த பொருட்கள் கீழே விழுந்தன. பல்வேறு வீடுகளில் பாத்திரங்கள் உருண்டு ஓடின. இதனால் பயந்துபோய் வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்துவிட்டோம்.

    அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டு வருவதால் அச்சத்தில் உள்ளோம் என தெரிவித்தனர்.

    இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில்:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். பரவலாக நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்களிடமிருந்து தகவல் வரவில்லை என்றார்.

    • வாணியம்பாடி அருகே மீண்டும் அட்டகாசம்
    • வனப்பகுதிக்கு விரட்ட பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக மர்ம விலங்கு ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறுவது தொடர்கதையாக உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதனாஞ்சேரி ஊராட்சியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி வீட்டில் வளர்த்து வந்த 13 ஆடுகளை கடித்து குதறியது. இதில் 10 ஆடுகள் அங்கேயே பலியானது.

    தகவலறிந்து வந்த வாணியம்பாடி வனத்துறை யினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட தோடு, மர்ம விலங்கு நடமாட்டத்தை கண்டு பிடிக்க, அந்த கிராமத்தை சுற்றி ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.

    மேலும் வனத்துறையினர் மர்ம விலங்கை பிடிக்க கூண்டுகள் வைத்து முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு மதனாஞ்சேரி அடுத்த தும்பேரி கிராமத்தில் மர்ம விலங்கு புகுந்தது. அங்கு சம்பத், சின்னகண்ணன், தீர்த்தமலை ஆகியோருக்கு சொந்தமான 6 ஆடுகளை கடித்து குதறியது. அனைத்தும் சம்பவ இடத்திலேயே பலியானது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பொதுமக்களிடம் இருந்து வனவிலங்குகளை பாதுகாக்க முயற்சி செய்யும் வனத்துறையினர் விலங்குகளிடம் இருந்து பொது மக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க வேண்டும். இனியும் காலம் கடத்தாமல் ஆடுகளை கொன்ற மர்ம விலங்கு எது என்பதை கண்டறிந்து அதனை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மர்ம விலங்கு வேட்டையால் ஆடுகள் தொடர்ந்து பலியான சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பால்னாங்குப்பம் அருகே அரசு மது பாட்டிலை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

    பால்னாங்குப்பம் பெருமாள் வட்டத்தை சேர்ந்த புகழேந்தி மனைவி பிரியா (வயது 34) தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    • ஊராட்சி மன்றம் சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் பங்கேற்றனர்

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலை அத்தனாவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏலகிரி மலை ரோட்டரி கிளப் மற்றும் தருமபுரி தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஏலகிரி ஊராட்சி மன்றம் சார்பில் நடந்தது.

    இம்முகாமிற்கு ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    இம்முகாமில் அத்தனாவூர், நிலாவூர், மங்களம், உள்ளிட்ட ஏலகிரி மலை வாழ் மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

    இம்முகாமில் ஏலகிரி மலை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ×