search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • போக்குவரத்து நெரிசலால் பொது மக்கள் அவதி
    • அடிக்கடி வாகனங்கள் விபத்து ஏற்படுவதாக புகார்

    ஜோலார்பேட்டை:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு காற்றாலை ஏற்றிக்கொண்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு லாரி ஒன்று வந்தது. கடந்த 6 நாட்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளி தண்ணீர் பந்தல் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டது.

    போக்குவரத்துக்கு இடை யூறாக, காற்றாலையுடன் லாரி நிற்ப்பதால், அங்கு அடிக்கடி வாகனங்கள் விபத்து ஏற்படுகிறது.

    சில சமயங்களில் சர்வீஸ் சாலை வழியாக லாரி உள்ளிட்ட வாகனங்கள் வரும்போது, கடந்த செல்ல வழி இல்லாமல் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.

    இது குறித்து காற்றாலை ஏற்றி வந்த லாரி டிரைவரிடம் விசாரித்த போது, கர்நாடக மாநிலத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய இடத்தில் சாலை பணிகள் நடை பெறுவதால் எங்களால் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம்.

    சாலை சீரமைக்கப்பட்ட பிறகு தான் எங்களுக்கு அனுமதி கிடைக்கும். இதனால் வேறு வழியின்றி இதே இடத்தில் நிற்க வேண்டிய சூழல் உள்ளது என்றார். எனவே அதிகாரிகள் சர்வீஸ் சாலையில் நிற்க்கும் லாரியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • சத்துணவு பற்றாக்குறையாக வழங்குவதாக புகார்
    • சத்துணவு அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வள்ளிபட்டு கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

    இந்த பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக கலைவாணி என்பவர் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கு சரிவர மதிய உணவு வழங்குவதில்லையாம். மேலும் உணவு பட்டியலை மாற்றி மதிய சத்துணவு பற்றாக்குறையாக வழங்கு வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இந்த நிலையில் நேற்று 449 மாணவர்களுக்கு அரசு வழங்கியுள்ள மதிய உணவுபட்டியல் படி சாதம், சாம்பார், முட்டையுடன் கூடிய உருளை கிழங்கு பொரியலுடன் உணவு சமைக்க வேண்டும்.

    ஆனால் அதனை மாற்றி கலவை சாதம், முட்டை மற்றும் உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவற்றை மாணவர்களுக்கு பற்றாக்கு றையாக சமைத்து வழங்கியுள்ளனர்.

    அந்த உணவு மாணவர்க ளுக்கு பற்றவில்லை. இதனால் சிலர் மதிய உணவு சாப்பிட வீடுகளுக்கு சென்றனர்.

    இதனால் அதிர்ச்சடைந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியில் ஒன்று திரண்டனர். மாணவர்களுக்கு பற்றாக்குறைவாக ஏன் உணவு சமைக்கிறீர்கள்? என கேட்டு பள்ளியை முற்றுகை யிட்டனர்.

    மேலும் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் சத்துணவு அமைப்பாளரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஒன்றிய குழு தலைவர் சங்கீதாபாரி, துணைத்தலைவர் பூபாலன், ஒன்றிய கவுன்சிலர் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருநா வுக்கரசு ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரசம் பேசினார். அப்போது அரிசி மற்றும் பருப்பில் வண்டுகள், பூச்சுகள் நிறைந்து கிடந்தது.

    மேலும் முட்டைகளை சரியாக வேக வைக்காமலேயே மாணவர்களுக்கு வழங்கு வதாக அடுக்கடுக்கான குற்ற சாட்டுகளை முன்வைத்து பொதுமக்கள், அவர்களுடனும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் சத்துணவு வழங்க பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறையை ஒன்றிய குழு தலைவர் சங்கீதாபாரி உள்ளிட்டோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சமையல் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறையில் சென்று பார்த்தபோது காலி அரிசி மூட்டைகளுக்கு நடுவே 2 அரிசி மூட்டைகள் மறைத்து பதுக்கி வைக்கபட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இந்த மூட்டை குறித்து கேள்வி எழுப்பிய போது தனக்கு தெரியாது என்று சத்துணவு அமைப்பாளர் அலட்சியமாக பதில் அளித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஒன்றிய குழு தலைவர் சங்கீதா அவரை எச்சரித்ததோடு, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சத்துணவு அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுகொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோவிலில் சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்
    • ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ஏ- கஸ்பா பகுதியில் பெரிய ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆஞ்சநேயர் சனிபகவானை காலில் மிதித்தபடி காட்சி அளிக்கிறார். இங்கு வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தால் சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.

    இதனால் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிரபல நடிகை ஷகிலா தனது குடும்பத்துடன் வந்து சாமிதரிசனம் செய்தார்.

    மேலும் விளக்கேற்றி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். நடிகை ஷகிலாவை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது
    • பக்தர்கள் சாமி தரிசனம்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அடுத்த வடகரை ஊராட்சியில் உள்ள ஸ்ரீ தண்டு மாரியம்மன், ஸ்ரீ எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா இன்று நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை சிறப்பாக அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத, கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி தாலுகா, ஆத்தூர் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பனந்தோப்பு பகுதியில் உள்ள ஆற்றின் இரு பக்கமும், ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    ஆறுகளை பாதுகாக்கவும், நிலத்தடி நீரை தேக்கி வைக்கும் நோக்கத்தில் முதல் கட்டமாக, 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பனை விதை நடும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மண்புழு தயாரிப்பது குறித்து செயல் விளக்கம்
    • வேளாண்மை துறை சார்பில் நடந்தது

    ஜோலார்பேட்டை:

    திரும்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஊராட்சிக்கு உட்பட்ட நிலாவூர் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் இயற்கை விவசாயம் செய்வது குறித்து பயிற்சி கூட்டம் நடந்தது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கண்ணகி தலைமை தாங்கினார்.

    ஜோலார்பேட்டை வட்டார உதவி இயக்குனர் வேல்முருகன், உதவி வேளாண்மை அலுவலர் அனிதா, திட்ட ஒருங்கிணைப்பாளர் சத்யபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் அலுவலர் ராஜா வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் கலந்து கொண்டு பேசினார். விவசாயிகள் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரசாயனம் மற்றும் பூச்சி கொல்லி கலப்பில்லதா இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு மண்புழு தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    • வாலிபர் கொலை செய்து புதைப்பு
    • கையில் ‘ஜே’ என ஆங்கிலத்தில் பச்சை குத்தியுள்ளார்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா அருகே உள்ள பலக்கல்பாவி முருகன் கோவில் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் கடந்த 21-ந் தேதி சிலர் ஆடு மேய்க்க சென்றனர். அப்போது அங்கு கால்கள் மட்டும் தெரிந்த நிலையில் பிணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அவர்கள் இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்து புதைக்கப்பட்ட வாலிபர் உடலை மீட்டனர்.

    அதனை தொடர்ந்து தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    கொலை செய்யப்பட்ட வாலிபரின் முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு இருந்தது. கழுத்து, மார்பு, வயிறு பகுதிகளில் கத்தியால் குத்தி கிழிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வாலிபரின் மர்ம உறுப்பும் சேதப்பட்டிருந்தது. இதனால் அவரை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து பிணத்தை புதைத்திருப்பது தெரியவந்துள்ளது.

    கொலைகளைப் பிடிக்க துணை போலீஸ் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. கொலை செய்யப்பட்டவர் இடது கையில் 'ஜே' என ஆங்கில வார்த்தையால் பச்சை குத்தியுள்ளார்.

    போலீசார் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில போலீஸ் நிலையங்களில் காணாமல் போன ஆண்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இறந்தவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. அதன்படி இறந்தவரின் விவரத்தை கண்டறிவதோடு மற்றும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.

    மேலும் கொலை செய்யப்பட்டவரின் புகைப்படம் மற்றும் அடையாளங்களை குறிப்பிட்டு போலீசார் துண்டு பிரசாரம் விநியோகம் செய்துள்ளனர்.

    இறந்தவர் யார்? என்று தெரிந்த பிறகே அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • பொக்லைன் எந்திரம் பறிமுதல்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி, அம்பலூர், கொடையாட்சி, உதயேந்திரம், சி.வி.பட்டறைபகுதிகளில் தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் வாணியம்பாடி அடுத்த தேங்காய்பட்டறை பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கடத்தப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு புகார் வந்தது.

    அவரது உத்தரவின்பே ரில் வாணியம்பாடி தாசில்தார் மோகன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அளிக்கப் பட்ட வீட்டுமனை பகுதிக்கு அருகே 10 அடி ஆழம் வரையில் தோண்டப்பட்டு அதிலிருந்து மணல் கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தாசில்தார் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டார்.

    அப்போது டிரைவர் பிரகாசம் மற்றும்துறையேரி பகுதியை சேர்ந்த வி.சி.அன்பரசு, அவரது தம்பி சிவக்குமார் ஆகியோர் பொக்லைன் எந்திரத்தை ஏன் பறிமுதல் செய்கிறாய் என கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தாசில்தார் வந்த ஜீப்பை தடுத்து நிறுத்தி போக விடாமல் தடுத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரத்தை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் ஆகியோருடன் இணைந்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தார்.

    மேலும் அன்பரசு, சிவக்குமார் மற்றும் டிரைவர் பிரகாசம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேவஸ்தா னம் கிராம நிர்வாக அலுவலர் மீரா வாணி யம்பாடி தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • 600 மரக்கன்றுகள் நடபட்டது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் வேர்கள் அறக்கட்டளை சார்பில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் தொடக்க விழா இன்று நடந்தது.

    மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்று சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    வேர்கள் அறக் கட்டளை தலைவர் வடிவேலு சுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் முதற்கட்டமாக புன்னை, மாமரம், நாவல், பாதாம், புங்கன், மயில்கொன்றை, மகோகனி, தென்னை, வேங்கை உட்பட 600 மரக்கன்றுகள் நடபட்டது. இதில் சப்-கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான மனுக்கள் பெறப்பட்டது
    • மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது.

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசினார். சப்- கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் இனியன் வரவேற்றார். இதில் ஏராளமான மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

    மேலும் மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மாற்று திறனாளிகளிடமிருந்து அனைத்துத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான மனுக்கள் பெறப்பட்டது.

    கண் மருத்துவ பிரிவு, காது-மூக்கு-தொண்டை, எலும்பு மூட்டு சிகிச்சை, குழந்தை நலப்பிரிவு, மன நோய் பிரிவு உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    • வேலை முடிந்து வீடு திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பி கஸ்பா அன்னை வாசுகி தெருவை சேர்ந்தவர் ஜெகஜீவன் ராம் (வயது 65). இவர் சேலூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வேலு தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரி ஜெகஜீவன் ராம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெக ஜீவன் ராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில்வே மேம்பாலம் விரைவில் கட்டி முடிக்க வேண்டும்
    • பொதுமக்கள் வலியுறுத்தி

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பச்சூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

    இதில் ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி - மல்லானூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பச்சூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இதனால் பச்சூர் ரெயில்வே மேம்பாலம் வழியாக பொதுமக்கள் செல்ல தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் ரெயில் தண்டவாளத்தைக் கடக்க மிகவும் அவதிப்படுகின்றனர்.

    மேலும் பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவர்கள் ஆபத்தான முறையில் ரெயில் தண்ட வாளத்தை கடந்து செல்லும் சுழல் உள்ளது.

    சில சமயங்களில் மாண வர்கள் சைக்கிள்களுடன் தண்டவாளத்தை கடக்கும் போது திடீரென ரெயில் வந்துவிடுகிறது. இதனால் மாணவர்கள் பயத்துடனே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

    அதேபோல் பச்சூரில் ரெயில் நீண்ட நேரம் நிற்பதால், ரெயில் பெட்டிகளுக்கு இடையே உள்ள கப்ளிங் மீது ஏறியும், பெட்டிகளின் அடியில் புகுந்தும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

    எனவே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடியும் வரை, பள்ளி மாணவர்கள் சிரமமின்றி தண்ட வாளத்தை கடந்து செல்ல மாற்று பாதை பாதை அமைத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதியதாக கட்டப்பட்ட வரும் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×