search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • மன்னார்குடி- திருத்துறைப்பூண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
    • சொகுசு காரை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    மன்னார்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வைரவபுரம் பகுதியை சேர்ந்த அரபாத் (வயது 28), ஆறுமுகம் (50), செல்வராஜ் (55) ஆகிய 3 பேரும் சொகுசு காரில் மன்னார்குடிக்கு வந்துள்ளனர்.

    பின்னர், அந்த காரில் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கீழப்பாலம் அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் சென்றபோது சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த 4 ஆடுகளை பிடித்து தங்கள் காருக்குள் வைத்து கடத்திவிட்டு வேகமாய் சென்றனர்.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மன்னார்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதி மக்களின் உதவியுடன் சொகுசு காரை கண்டறிந்து அதில் இருந்த 4 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பல ஆண்டுகளாக ஆடு திருடுவதை வழக்கமாக வைத்துள்ளது தெரியவந்தது.

    பட்டப்பகலில் ஆடுகள் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 21 வகையான சீர்வரிசை பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.
    • கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    கோட்டூர் அடுத்த ஆதிச்சபுரத்தில் குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா கோட்டூர் ஒன்றிய தலைவர் மணிமேகலை தலைமையில், கோட்டூர் வட்டார திட்ட அலுவலர் அபிநயா முன்னிலையில் நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தாம்பூலம், குங்கும சிமிழ், புடவை, வெற்றிலை, பாக்கு, பூ, வளையல், பழங்கள் உள்பட 21 வகையான சீர்வரிசை பொருட்களை 100 கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார்.

    விழாவில் தாய்பால் கொடுப்பதன் அவசியம் குறித்தும், கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் குறித்தும் கர்ப்பிணிகளுக்கு எடுத்துரைக்க ப்பட்டது.

    இதில் டாக்டர் பிரியங்கா, மேற்பார்வையாளர்கள் தமிழ்செல்வி, சுசீலா, விஜயா, திட்ட உதவியாளர் பிரபு, அலுவலக உதவியாளர் அருண்ராஜ், கோட்டூர் வட்டார அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை பணியாளர் கவிதா தொகுத்து வழங்கினார்.

    முடிவில் பணியாளர் கனகா நன்றி கூறினார்.

    • தட்டாங்கோவில் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
    • திருடப்பட்ட பொக்லைன் எந்திரத்தை விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த விக்கிரபாண்டியம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்.

    இவர் பொக்லின் எந்திரம் வைத்து வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில், இவர் கடந்த 13-ந் நாட்களுக்கு முன்பு தட்டாங்கோவில் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    இரவு நேரம் ஆனதால் பொக்லைன் எந்திரத்தை அதே சாலையில் நிறுத்தி விட்டு வீடு திரும்பினார்.

    பின்னர், மறுநாள் காலை வந்து பார்த்தபோது பொக்லைன் எந்திரத்தை காணவில்லை.

    இதனை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    தொடர்ந்து, அருகில் தேடிபார்த்து விட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் பொக்லைன் எந்திரம் குறித்து விசாரித்தார்.

    தொடர்ந்து, இதுகுறித்து தினேஷ் கோட்டூர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் கோட்டூர் போலீசார் தனிப்படை அமைத்து பொக்லைன் எந்திரத்தை திருடி சென்றவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட பொக்லைன் எந்திரம் திருவிடைமருதூர் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த காளீஸ்வரனின் உதவியுடன் விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோட்டூர் போலீசார் திருவிடைமருதூர் பகுதியில் மறைத்து வைத்திருந்த பொக்லைன் எந்திரத்தை கைப்பற்றி அதனை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

    மேலும், திருட்டில் ஈடுபட்டதாக ஜெயசீலன், செய்யது சம்சுல்குதா, விக்னேஷ், காலிஸ்வரன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    திருட்டு சம்பவம் நடந்த 10 நாட்களில் மர்மநபர்களை பிடிக்க விரைந்து செயல்பட்ட கோட்டூர் தனிப்படை போலீசாரை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • பேரிடர் தொடர்பு எண் 1077-ஐ செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு, பேரிடர் பயிற்சியாளர் திருத்துறைப்பூண்டி பாலம் செந்தில்குமார் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    எனவே தாலுகா வாரியாக மண்டல நிவாரண அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

    தாலுகா, ஒன்றியம், நகராட்சி வாரியாக பேரிடர் பொறுப்பு அலுவலர்களை நியமித்து 24மணி நேர பணியாக இருக்க வேண்டும். அவர்களின் தொலைபேசி எண்ணையும் வெளியிட வேண்டும்.

    மாவட்ட கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி பேரிடர் தொடர்பு எண் 1077 ஐ செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    பேரிடர் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மெதுவாக வீட்டின் உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்திருந்த ஜெயலட்சுமியின் கழுத்தில் கத்தி வைத்து அவர் அணிந்திருந்த தங்கநகைகளை பறித்தனர்.
    • அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் கொள்ளையர்களை விரட்டி சென்று தேடினர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 30). இவரது கணவர் சஞ்சய் காந்தி. இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சஞ்சய் காந்தி வெளிநாட்டில் இருப்பதால் ஜெயலட்சுமி குழந்தையை வைத்துக்கொண்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு துணையாக அவரது மாமனார் வைரக்கண்ணு (82) வந்து தங்குவது வழக்கம்.

    இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் ஜெயலட்சுமி மற்றும் அவரது மாமனார் இருவரும் வீட்டில் டி.வி பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வீட்டின் பின்பக்கம் வழியாக முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.

    மெதுவாக வீட்டின் உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்திருந்த ஜெயலட்சுமியின் கழுத்தில் கத்தி வைத்து அவர் அணிந்திருந்த தங்கநகைகளை பறித்தனர். இதனை கண்ட அவரது மாமனார் வைரக்கண்ணு அதனை தடுக்க முயன்றார். அப்போது மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வைரக்கண்ணு வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கொள்ளையர்களை நோக்கி வீசினார்.

    இதனால் பயந்த கொள்ளையர்கள் பெண்ணிடம் இருந்து பறித்த நகைகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு அலறிஅடித்து தப்பி சென்றனர். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் கொள்ளையர்களை விரட்டி சென்று தேடினர். ஆனால் அவர்கள் அதற்குள் தப்பி விட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) திருவாரூர் சரவணன், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) எடையூர் ஆனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், புஷ்பநாதன் மற்றும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி சோதனை செய்தனர். அதன் அடிப்படையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக திருத்துறைப்பூண்டி அடுத்த கச்சனம் அம்மனூர் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (26), அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (22), விளத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக்ராஜா, கச்சனம் பகுதியை சேர்ந்த சினநேசன் (23) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வீட்டில் புகுந்த கொள்ளையர்களை துணிச்சலுடன் அரிவாளை கொண்டு விரட்டிய முதியவரின் வீரதீர செயலை கண்டு அனைவரும் வியந்தனர். கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
    • நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் அ.தி.மு.க. மாவட்ட செயல்வீரர்- வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.

    கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் திருவாரூர் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான இளவரசன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

    இந்த கூட்டத்தில், தமிழக அரசு மேட்டூர் அணை நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து இவைகளை கணக்கில் கொள்ளாமல் முன்கூட்டியே தண்ணீரை திறந்து விட்டு அதனால் நீர் மேலாண்மை குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் குளறுபடியான நீர் மேலாண்மை செயலை கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரமாக செயல்பட்டு அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

    நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி மையம் வாரியாக பூத் கமிட்டி அமைப்பது என்றும், அதில் மகளிர் அணி, இளைஞர் இளம் பெண்கள் பாசறை யினர் உள்ளிட்டோருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவது என தீர்மானங்கள் நிறைவே ற்றப்பட்டன.

    இதில் அமைப்பு செயலாளர்கள் சிவா.ராஜமாணிக்கம், கோபால், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள், ஒன்றியச் செயலாளர்கள் மணிகண்டன், செந்தில், பாஸ்கர், தமிழ்ச்செல்வன், நகரச் செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலா, புறத்திலா?
    • முன்னதாக எடையூர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் 11-வது ஆண்டு நவராத்திரி பெருவிழா ஆறாவது நாள் ஆன்மிக பட்டிமன்றம் நடைபெற்றது.

    ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலா, புறத்திலா? என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர், திரைப்பாடல் ஆசிரியர், டிவி புகழ் அகடவிகட நடுவர் கலைமாமணி நாகை நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலே என்ற தலைப்பில் அன்னலெட்சுமி, பிரபாகரன், வர்ணனி ஆகியோரும், ஆன்மீகம் பெரிதும் பெருகியது புறத்திலே என்ற தலைப்பில் டிவி புகழ் பழனி, தமிழாசிரியர் சாகுல் ஹமீது, ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமை தாங்கினார்.

    எடையூர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார். சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு செயலர் ஜெயப்பிரகாஷ், ஒருங்கிணைப்பபாளர் முனைவர் துரை ராயப்பன், ஆலோசகர் மருத்துவர் பாண்டியன், சர்வாலய உழவாரப்பணி குழுவை சேர்ந்த பாபு என்ற குமரவேல், முருகன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோவில் ஊழியர் ராஜ்மோகன், நிசாந்த், அண்ணா துரை, மணி, மணிவண்ணன், குருக்கள் ஹரிஹரன், வினோத், ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

    வருகிற அக் 24 ஆம் தேதி வரை அணைத்து நிகழ்ச்சிகளையும் சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு மற்றும் நவராத்திரி விழாக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

    • ெதாடர்ந்து மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டது.
    • நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ெதாடர்ந்து மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டது.

    பின்னர் உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையையொட்டி குருதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திருமக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்தனர்.
    • வெடியில் சேர்க்கப்படும் மூல பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

    மன்னார்குடி:

    சிவகாசி உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் நேர்ந்த வெடி விபத்துக்களில் பலர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அனிதா ரோஸ்லின் மேரி வருவாய் கோட்டாசியர் கீர்த்தனா மணி உள்ளிட்ட அதிகாரிகள் மன்னார்குடி திருமக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலைகளை நேரில் ஆய்வு செய்தனர்.

    அப்போது வெடியின் தரம், ஆபத்துகால முன்னெச்சரிக்கை பணிகள்,வெடியில் சேர்க்கப்படும் மூல பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். மன்னார்குடி வட்டசியர் கார்த்திகேயன் தீயனைப்பு துறை அதிகாரி சீனிவாசன், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தேஷனாமூர்த்தி வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • பட்டாசு கடை மற்றும் குடோன்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
    • உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரிப்பு விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

    நீடாமங்கலம்:

    கடந்த சில நாட்களில் தமிழகத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் குடோன்களில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிர் இழந்தனர். இதையடுத்து பட்டாசு தயாரிக்கும் இடங்களின் பாதுகாப்பு குறித்து தமிழகம் முழுவதும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதி பட்டாசு கடை மற்றும் குடோன்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    தொடர்ந்து, வலங்கைமான் பகுதியில் உள்ள 12 நாட்டு வெடிகள் உற்பத்தி கடைகள் மற்றும் தீபாவளிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 48 பட்டாசு கடைகள் மற்றும் அக்ரஹாரம், உப்புக்கார தெரு, கீழத்தெரு, வடக்கு அக்ரஹாரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு அனுமதிக்கப்பட்ட சட்ட விதிகளின் படி உரிய ஆவணங்களுடன் வெடி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறதா? பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளனவா? உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரிப்பு விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

    சோதனையில் விதி முறைகளை மீறி பல லட்சம் மதிப்பு வெடி பொருட்கள், பட்டாசுகள் இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. இவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும், அனுமதி க்கப்பட்ட அளவை விட அதிக அளவு வெடிபொருட்கள் வைத்திருந்ததாக 9 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • பெரும்பாலான மரங்கள் விழுந்து விட்டது.
    • தற்போதைய சூழலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் இணைந்து நடப்பாண்டு 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்ட த்தினை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில், ஆணையர் மல்லிகா, பொறியாளர் பிரதான் பாபு, பாலம் தொண்டு நிறுவனச்செ யலாளர் செந்தில்குமார் முன்னிலையில், கலெக்டர் சாருஸ்ரீ மரக்கன்றை வழங்கி தொடங்கி வைத்தார் .

    இதுகுறித்து கவிதா பாண்டியன் கூறும்போது கஜா புயலின்போது நகரத்திலிருந்த பெரும்பாலான மரங்கள் விழுந்து விட்டது. இதனால் தற்போதைய சூழலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் காற்று மாசுவை குறைத்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும், நகரை பசுமையாக்கவும், காடுகளின் பரப்பளவை 33 சதவீதமாக மாற்றும் வகையிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

    இதில் நிழல் தரும் மரங்களான புங்கன், வேம்பு, சரக் கொன்றை, இலுப்பை மற்றும் பூங்காக்களில் முள் இல்லா மூங்கில் போன்ற மரங்கள் நடப்படும், இப்பணியில் தன்னார்வலர்கள், சேவை அமைப்புகள், என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.

    நிகழ்ச்சியில் நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

    • சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
    • குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜெயக்குமார் நேற்று பதவி ஏற்றார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டம், விவசாயம் சார்ந்த மாவட்டம். இங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கும் மிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் அந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் நடப்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக உருவாக்கப்படும்.

    பொதுமக்கள் எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்க 9363495720 இந்த தொலைபேசியின் மூலமாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் புகார் தெரிவிப்பவரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்தார்.

    ×