search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • மன்னார்குடி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • நுண்ணுயிர் உரமானது மிக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமை ச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா இருவார விழாவின் ஒரு பகுதியாக திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மன்னார்குடியில் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் தலைமை தாங்கினார்.

    மன்னார்குடி நகர்மன்ற உறுப்பினர் திருச்செல்வி அமிர்தராஜ் முன்னிலை வகித்தார்.

    சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு திடக்கழிவு மேலாண்மை மற்றும் நுண்ணுயிர் உரம் தயாரித்தல் குறித்து விளக்கி பேசுகையில்:-

    மன்னார்குடி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதிலிருந்து பெறப்படும் நுண்ணுயிர் உரமானது பொது மக்கள் பயன்பாட்டிற்கு மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் அலுவலர்கள் திருலோ கச்சந்தர், கனகதுர்கா, பயிற்றுனர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மணிப்பூர் கலவரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
    • சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நீடாமங்கலம்:

    மணிப்பூர் கலவரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமையில் ஆலங்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செயலாளர் வேலவன், ஒன்றிய செயலாளர் விஜய், ஒன்றிய பொருளாளர் அருண்குமார், முன்னாள் மாவட்ட பொருளாளர் இளங்கோவன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெயராஜ், தினேஷ்குமார், ஸ்ரீதர், ஜோதிபாசு, அஜித்குமார் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • ராஜேஷ் மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார்.
    • மன வேதனை அடைந்த ராஜேஷ், சம்பவத்தன்று இரவு பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் இருந்தார்.

    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஏரி வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மகன் ராஜேஷ் (வயது 27) தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். பின்னர் தான் வாங்கிய கடன் தொகை முழுவதையும் அவர் திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜேஷுக்கு கடன் கொடுத்த ஆன்லைன் நிதிநிறுவனம் மேலும் கடன் தொகை பாக்கி உள்ளதாக கூறி உள்ளது.

    மேலும் அவரது செல்போனில் இருந்த அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு விடுவதாக ராஜேஷை தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ராஜேஷ் சம்பவத்தன்று இரவு வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் இருந்தார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ராஜேஷ் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் வலங்கைமான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மணிப்பூரில் கலவரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திருவாரூர்:

    மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கலவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கலவரத்தின் உச்சகட்டமாக பெண்கள் வன்கொடுமை தாக்குதலுக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

    அதன் வெளிப்பாடாக இரண்டு பெண்கள் பாலியல் துன்புறுத்தல்கள் செய்த கும்பல் அதனை சமூக வலைத்தளத்திலும் பரவச் செய்துள்ளது.

    இத்தகைய சம்பவத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

    அந்த வகையில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் எதிரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி சார்பில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழகச் செயலாளருமான பூண்டி கலைவாணன் தலைமையில் 2000த்திற்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டு மணிப்பூரில் நடைபெற்று வரும் அநீதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட வீடியோ பதிவில் உள்ள அனைவரும் கைது செய்ய வேண்டும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசு இத்தகைய சம்பவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் உள்ளிட்ட கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    • 20 இடங்களிலில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
    • சி.சி.டி.வி. கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் இயக்கி வைத்தார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆவூரில், பொதுமக்கள் நலன் கருதி காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்களின் உதவியால் 20 இடங்களிலில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    புதிதாக பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் இயக்கி வைத்தார்.

    தொடர்ந்து, கோவிந்தகுடி ஊராட்சியில் புறக்காவல் நிலையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் திறந்து வைத்தார்.

    விழாவில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தமிழ்மாறன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பரசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், கணேசன் மற்றும் சிறப்பு காவலர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம்.
    • தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்து றைப்பூண்டி நகர பா.ஜனதா கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் நகர தலைவர் ஐயப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாநில செயற்குழு ரஜினி கலைமணி, இளசுமணி, மாவட்ட பிரிவு இமயவர்மன், முன்னாள் தலைவர் பாலாஜி, நகர நிர்வாகிகள் கந்தன் ஸ்ரீதர், பாரத், பிரேம் உள்ளிட்ட மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான உள்ளிக்கோட்டை, கண்டிதம்பேட்டை, வல்லான்குடிகாடு, கீழ திருப்பாலக்குடி, மேலதிருப்பாலக்குடி, மகாதேவபட்டினம், தளிக்கோட்டை, கண்ணாரப்பேட்டை, இடையர்நத்தம், ஆலங்கோட்டை, பரவாக்கோட்டை, துளசேந்திரபுரம், பைங்காநாடு ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு தடுக்க வேண்டும், அத்தியாவசியப் பொருட்கள், மின் கட்டணம், சொத்து வரி, வாகனப் பதிவுக் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வுகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் பாஜகவினர் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூர் நெய்விளக்கு தொகுப்பு பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக நகர தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தின் , விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், உள்ளிட்ட கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தின் பொழுது தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு மாலை அணிவித்து, ஊதுபத்தி கொளுத்தி பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ க மாவட்டத் தலைவர் பாஸ்கர், நகர துணை தலைவர் முறுக்கு பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • விவசாயிகள் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற் கொண்டுள்ளனர்.
    • தண்ணீர் இல்லாததால் மேற்கொண்டு செலவு செய்தாலும் நெற்பயிர்கள் வளர்ந்து பலன் கொடுக்குமா என தெரியவில்லை

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சியில் பரப்பாகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமமானது அரிச்சந்திரா ஆற்றில் இருந்து பிரியும் ராசன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறக்கூடிய கிராமமாகும்.

    இந்நிலையில், இங்குள்ள விவசாயிகள் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற் கொண்டுள்ளனர்.

    மேட்டூர் அணை கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி திறக்கப்பட்டது. அதன் பின்னர் அரிச்சந்திரா ஆற்றில் ஒருமுறை தான் தண்ணீர் வந்தது. தொடர்ச்சியாக தண்ணீர் வராததால் ராசன் வாய்க்காலிலும் தண்ணீர் குறைந்தளவே இருந்தது.

    இந்நிலையில், நேரடி தெளிப்பு மூலம் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர்கள் முளைத்து தண்ணீரின்றி கருகத் தொடங்கின. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

    இந்நிலையில், செல்வம் என்கிற விவசாயி தனக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.10 ஆயிரம் செலவு செய்து குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ளார். தற்போது தண்ணீர் இல்லாததால் மேற்கொண்டு செலவு செய்தாலும் நெற்பயிர்கள் வளர்ந்து பலன் கொடுக்குமா என தெரியவில்லை என கருதி சாகுபடி செய்யப்பட்ட வயலில், டிராக்டரை கொண்டு உழவு செய்து முளைத்து தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களை அழித்தார்.

    எனவே, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • நன்னிலத்தில் புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • நன்னிலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

     திருவாரூர்

    நன்னிலத்தில் பொது சுகாதார துறை மற்றும் பள்ளி கல்வி துறை இணைந்து புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தை நன்னிலம் பேரூராட்சி மன்றத்தலைவர் ராஜசேகர் தொடங்கி வைத்தார். இதில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொது சுகாதார துறை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீதர், முதல் நிலை சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் அன்பழகன்,

    சுகாதார ஆய்வாளர்கள் ஹட்சன், மிதுன், கீர்த்திவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

    • ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோ பாலசுவாமி கோவிலில் செங்கமல த்தாயார் ஆடிப்பூர பிரம்மோட்சவம் கடந்த 14 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. இதன் ஒவ்வொரு தினமும் இரவு செங்க மலத்தாயார் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார்.

    இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மாலை நடைபெற்றது. தேரில் சர்வ அலங்கா ரத்துடன் எழுந்தருளிய செங்கமலத்தாயார் பக்த ர்களுக்கு காட்சியளித்தார்.

    பின்னர் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் பலர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். யானை செங்கம்மா முன்னேவர தேர் கம்பீரமாக ஆடி அசைந்து வந்தது. செங்கமலத்தாயார் எந்த ஒரு உற்சவத்தின் போதும் கோவிலின் ராஜகோபுரத்தைவிட்டு வெளியில் செல்வது கிடையாது என்பதால் இவர் படிதாண்டா பத்தினி என பக்தர்களால் வணங்க ப்படுகிறார். எனவே தாயாரின் பிரமாண்ட தேரோட்டமும் கோவிலின் உள் பிரகார த்திலேயே நடைபெறுவது சிறப்பாகும்.

    அதேபோல பாரம்ப ரியமாக மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 91வது ஆண்டாக தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் கோவிலின் 4 பிரகாரங்கள் வழியாக சுற்றி நிலைக்கு வந்தது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு செங்கமல தாயாரை தரிசனம் செய்தனர்.

    • பெண் போலீசிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் சற்குணத்தை கைது செய்தனர்

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 22 வயதுடைய பெண் போலீஸ் ஒருவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அந்த பெண் போலீஸ் பணி நிமித்தமாக தஞ்சைக்கு சென்று விட்டு இரவு பஸ்சில் திருவாரூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றும் சற்குணம் (வயது 32) என்பவர் அந்த பெண் போலீசை செல்போனில் தொடர்பு கொண்டு கொரடாச்சேரி பஸ் நிறுத்தத்தில் இறங்குமாறும், அங்கு இருந்து மோட்டார் சைக்கிளில் தான் அழைத்து செல்வதாகவும் கூறியுள்ளார்.

    தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரர் அழைத்து செல்வதாக கூறியதால், கொரடாச்சேரிக்கு பஸ் வந்ததும் பெண் போலீஸ் பஸ்சில் இருந்து இறங்கி சற்குணத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    கொரடாச்சேரியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தண்டலை கிராமம் அருகே சென்றபோது சற்குணம், பெண் போலீசிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீஸ், சற்குணத்திடம் இருந்து தப்பிச்சென்று அவருடன் பணிபுரியும் மற்றொரு போலீஸ்காரரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரிடம், அந்த பெண் போலீஸ் புகார் கொடுத்தார். அதன் பேரில் உரிய விசாரணை நடத்தப்பட்டது.

    இதையடுத்து பெண்ணை துன்புறுத்துதல், பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்கொடுத்தல், பெண்ணை தாக்குதல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் கொராடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் சற்குணத்தை கைது செய்தனர்

    ×