search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • முகாமில் புதிதாக விண்ணப்பிக்க வந்த வாக்காளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
    • புதிய வாக்காளர்களுக்கு காமராஜ் எம்.எல்.ஏ. வாழ்த்துகளை தெரிவித்தார்.

    திருவாரூர்:

    நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பனங்குடி, மாப்பிள்ளைக்குப்பம், ஆணைக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை முகாம் தொடர்பாக அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகளின் செயல்பாடுகளை கட்சியின் மாவட்டச்செயலாளரான முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார்.

    அப்போது 1.1.2024 இல் 18 வயது நிரம்புகின்ற இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு வாக்காளர் சேர்க்கை முகாம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பதை கட்சியினரிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

    மேலும் வாக்காளர் சேர்க்கை முகாமில் புதிதாக விண்ணப்பிக்க வந்த இளம் வாக்காளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

    புதிய வாக்காளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

    இந்நிகழ்வின் போது நன்னிலம் ஒன்றியச் செயலாளர் இராம. குணசேகரன், நன்னிலம் நகரச் செயலாளர் பக்கிரிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • வீட்டில் எவ்வித அனுமதியும் இன்றி பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் பதுக்கி வைத்திருந்த பட்டாசு மூட்டைகளை பறிமுதல் செய்து கார்த்தி என்பவரை கைது செய்தனர்.

    நீடாமங்கலம்:

    தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை கடைகளுக்கு பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அரசு அனுமதி இன்றி பட்டாசுகளை குடோன் மற்றும் வீடுகளில் பதுக்கி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே நல்லூர் கிராமத்தை சேர்ந்த கார்த்தி (வயது 26) என்பவரது வீட்டில் எவ்வித அனுமதியும் இன்றி பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ரங்கராஜன் தலைமையில், சிறப்பு தனிப்பிரிவு போலீஸ் அறிவழகன் உள்பட போலீசார் நேற்று மாலை திடீரென அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

    வீட்டில் நடத்திய சோதனையில் 8 மூட்டைகளில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் ஆகும். பின்னர், போலீசார் பதுக்கி வைத்திருந்த பட்டாசு மூட்டைகளை பறிமுதல் செய்து கார்த்தி என்பவரை கைது செய்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மனவேதனை காரணமாக அய்யப்பன் விஷம் குடித்தார்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    திருவாரூர்:

    முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது32). கடந்த சில நாட்களாக கடும் மனஉளைச்சலில் இருந்த அவர் கடந்த 30-ந்தேதி விஷம் குடித்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அய்யப்பன் இறந்தார். இதுகுறித்து அய்யப்பன் சகோதரி மகேஸ்வரி முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அய்யப்பனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்களுக்கு மின் விபத்து நேராமல் ஊழியர்கள் செயல்படவேண்டும்
    • அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

    திருவாரூர்:

    திருவாரூர் மின் பகிர்மான வட்டம் மன்னார்குடி நகர உப கோட்டத்தின் சார்பில் மின்வாரிய ஊழியர்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி முகாம் நகர உதவி செயற்பொறியாளர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் கூறுகையில், பணியின் போது மின் விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக பணியாளர்கள் எர்த்ராடு கண்டிப்பாக பணியின்போது பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பு சாதனங்களை முறையாக பயன்படுத்தாத ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இயற்கை இடற்பாட்டால் மின் கம்பி கள் அறுந்து விழுந்தாலோ, மின் கசிவுகள் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த இடத்தில் மின்சாரத்தை துண்டித்து பொதுமக்களுக்கு மின் விபத்து நேராமல் விரைந்து ஊழியர்கள் செயல்படவேண்டும். மழை நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க போதிய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    முடிவில் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இதில் பிரிவு பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தினமும் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை பயணிகள் டிக்கெட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
    • இந்த முன்பதிவு மையம் ஞாயிற்றுகிழமைகளில் செயல்படாமல் உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அகல ரெயில் பாதை ஏற்படுத்தப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில்களில் அப்பகுதி மக்கள்பயணம் செய்ய ஏதுவாகரெயில் நிலையத்தில் முன்பதிவு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த மையத்தில் பயணிகள் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

    மேலும், இங்கு தட்கல் ரெயில் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த முன்பதிவு மையம் ஞாயிற்று கிழமைகளில் செயல்படாமல் உள்ளது.

    இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளா கின்றனர்.

    எனவே, பயணிகளின் நலன் கருதி ஞாயிற்றுகி ழமைகளிலும் முன்பதிவு மையத்தை திறக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது.
    • மழை சம்பா, தாளடி சாகுபடிக்கு போதுமானதாக இல்லை.

    மன்னார்குடி:

    மன்னார்குடி பகுதியில் உள்ள கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பூதமங்கலம், மரக்கடை, குடிதாங்கிச்சேரி, திருராமேஸ்வரம், ஓவர்ச்சேரி, தண்ணீர்குன்னம், பழையனூர், வடபாதிமங்கலம், நாகங்குடி, பூந்தாழங்குடி, ஓகைப்பேரையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று கூத்தாநல்லூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

    இதேபோல், நீடாமங்கலம் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி நின்றது.

    இந்த மழை சம்பா, தாளடி சாகுபடிக்கு போதுமானதாக இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதனால் சம்பா, தாளடி பணிகளில் பம்பு செட் வசதி உள்ளவர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.

    • மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.
    • நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் சூழலியம்மன், மூலவர் குருபகவான்.

    கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ் வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டடது.

    மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.

    உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் குரு தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக் கப்பட்டது.

    இதேபோல் நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில் திரளா பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • புகையிலை விற்ற கடைக்கு சீல் வைத்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கடைவீதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் கர்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், சப்-இன்ஸ் பெக்டர்கள் சந்தோஷ், ஹரி மற்றும் அலுவலர்கள் கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.

    அப்போது மேலராஜ வீதியில் சண்முகம் என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

    அதைதொடர்ந்து புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.

    இதையடுத்து நீடாமங்கலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ரிகள் எச்சரித்தனர் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • மழைகாலங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
    • குடிநீர் பிரச்சினையை தீர்க்க குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை கட்ட வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    உதயமார்தாண்டபுரம் ஊராட்சியில் நேற்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாச்சிகுளம் கிளை செயலளார் அலாவுதீன் தலைமையிலான நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:-

    உதயமார்தாண்டபுரம் ஊராட்சிக்கு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அனுமதி கிடைத்து அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையை ஊராட்சி நிர்வாகம் விரைவாக எடுக்க வேண்டும்.

    வரும் மழைகாலங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    ஊராட்சியில் உள்ள அனைத்து இணைப்பு சாலைகளை விரைந்து முடிக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை கட்ட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    • நெல் மூட்டைகள் தேக்கமடைவது முழுவதுமாக தவிர்க்கப்படும்

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப க்கழகம் மூலமாக 21 வேகன்களில் 1000 டன் நெல் மூட்டைகள் ஈரோடு க்கு அனுப்பி வைக்க ப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று செய்தியாளரிடம் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் பொது ச்செயலாளர் இளவரி தெரிவித்ததாவது:-

    சரக்கு கொட்டகை பயன்பாட்டிற்கு வருவதற்கு பெரிதும் துணை நின்ற ரெயில்வே அதிகாரி ஹரிக்குமார், அவர்களுக்கும் திருச்சி கோட்ட மேலாளருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    மேலும் திருத்துறைப்பூண்டியில் ரயில் தலைப்பு (வேகன்) கொண்டு வர பெரு முயற்சி எடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    வேகன் இயக்கம் மூலம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைவது முழுவதுமாக தவிர்க்கப்படும், கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    மேலும் லாரி உரிமை யாளர்கள் சங்கத்தின் சார்பில் சில நியாயமான கோரிக்கைகள் வைக்கப்படுகிறது. அவர்களின் நியாயமான கோரிக்கை அரசின் கவனத்திற்கு சார்பில் கொண்டு செல்லப்படும் என்றார்.

    • புதிதாக பஸ் நிலையம் அமைப்பதற்கு விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கண்காணிக்க கமிட்டி அமைக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, துணை தலைவர் ஜெயபிரகாஷ், நகராட்சி நியமன குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் உறுதிமொழி தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் மேலாளர் சீதாலட்சுமி, சுகாதாரத்துறை ஆய்வாளர் கருப்புசாமி, வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் செயல்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து பேசினர்.

    அதனைத் தொடர்ந்து, நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பேசுகையில்:-

    திருத்துறைப்பூண்டி நகரில் நடைபெற்று வரும் 128 சாலைகள் பணிகள், 110 சாலை சேவை பணிகள் முடிந்துள்ளது. மேலும், ரூ.7 கோடியில் பஸ் நிலையம் புதிதாக அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை ஏற்பாடுகளை கண்காணிக்க விரைவில் கமிட்டி அமைக்கப்படும் என்றார்.

    • ஒற்றுமை தின ஓட்டம் நடைபெற்றது.
    • முடிவில் பயிற்றுனர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தேசிய ஒற்றுமை தினம் மற்றும் தூய்மையே சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ் தலைமை தாங்கினார்.

    ஸ்கார்டு செயலாளர் பாபுராஜன் முன்னிலை வகித்தார்.

    தேசிய ஒற்றுமை தினத்தில் நாம் அனைவரும் விருப்பு வெறுப்புகளை கடந்து முன்னேற்ற பாதையில் செல்லவும், தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை காக்க வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பின்னர், ஒற்றுமை தின ஓட்டம் நடைபெற்றது.

    முன்னதாக மக்கள் கல்வி நிறுவன பயிற்றுநர் சத்தியகலா அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் பயிற்றுனர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் கனகதுர்கா, பயிற்றுனர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×