என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தூத்துக்குடி
- மாடசாமி முகம், கை பகுதியில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
- கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சையா, இவரது மகன் மாடசாமி (வயது38).
இவர் சொந்தமாக வேன் வைத்து தனியார் நிறுவனத்திற்கு பணியாளர்களை ஒப்பந்தம் அடிப்படையில் ஏற்றி, இறக்கி வந்துள்ளார். மாடசாமிக்கு திருமணமாகி மகாதேவி என்ற மனைவியும், மதிவர்ஷன், மகாஸ்ரீ என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மாடசாமி நேற்று காலையில் வெளியே சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே மூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாடசாமி இருசக்கர வாகனம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாடசாமி உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது சுடுகாட்டில் எரியூட்டும் இடத்தில் மாடசாமி முகம், கை பகுதியில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கொலை செய்தது யார்? எதற்காக அவரை கொலை செய்தனர்? முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு எதுவும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆனி வருஷாபிஷேகம் நடைபெற்றது.
வருஷாபிசேகத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் கோவில் மகா மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதேபோல் குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு எடுத்து வரப்பட்டு காலை 10.15 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு புனித நீர் உற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசத்திற்கும் வருஷாபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளியம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.
விழாவில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து விமர்சித்தும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் வகையிலும் பேசுகிறார்.
- தலைவரின் கண் அசைவுக்காகத்தான், கட்சி தொண்டர்கள் பொறுமை காக்கிறார்கள்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது,
மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த சீமானின் பேச்சை திமுக வன்மையாக கண்டிக்கிறது. தலைவர் கலைஞர் குறித்து தமிழ் மக்கள் நன்கு அறிவர்.
தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர். இளைஞர்களுக்காக முதல் தலைமுறை பட்டதாரி திட்டம், கல்வி கடன் ரத்து, நுழைவு தேர்வு ரத்து, கணினி கல்வி வளர்ச்சி என அவர் கொண்டு வந்த திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
அவரை பற்றி இழிவாக பேசுவதை திமுக கண்டிக்கிறது. கட்சி தலைவர் என்பவர், ஆதரவாளர்களோ நிர்வாகிகளோ தவறாக பேசும் போது கண்டிக்க வேண்டும். மாறாக தலைவர் கலைஞர் குறித்து பேசும் போது இவர் சிரித்து கொண்டு இருக்கிறார். அவர் வழி நடத்த தெரியாத நிலையில் இருக்கிறார்.
நமக்கு முன்பாக ஒன்று பேசுகிறார். பின்பு அந்த கருத்தை மாற்றி பேசுகிறார். கலைஞர் ஓய்வின்றி உழைப்பவர் எனவும், ஆளுமை எனவும் கலைஞர் மறைவின் போது தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார். தற்போது வேறு விதமாக பேசுகிறார்.
திமுக தொண்டர்களை பொறுத்தவரையிலும், தற்போதைய தலைவரின் கண் அசைவுக்காகதான் காத்திருக்கிறார்கள். பொறுமையாக இருக்கிறார்கள். ஆளுங்கட்சியில் இருக்கிறோம். முதலமைச்சராக தலைவர் பொறுப்புடன் இருக்கிறார். ஆகவே பொறுமையாக இருக்கிறோம்.
அவதூறு குற்றச்சாட்டு சொல்லும் போது கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை., 'சீமான் கட்சியைச் சேர்ந்த துரைமுருகன் சாதி பேரை சொல்லி இழிவாக பேசுகிறார்' என, அருண் என்பவர் புகார் அளித்ததன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
ஆனால் கருத்துரிமை பறிக்கப்படுவதாக சீமான் சொல்கிறார். பட்டியலின பட்டியலில் 15வது இடத்தில் அந்த சொல் இருப்பது சீமானுக்கும் தெரியும். திரைப்படத்தில் இந்த சொல்லை பயன்படுத்தியதற்காக சீமான் சில ஆண்டுகளுக்கு முன்பு வருத்தம் தெரிவித்ததை அனைவரும் அறிவார்கள். ஆனாலும் வாய்க்கு வந்தது போல் பேசி இருக்கிறார்கள். மீண்டும் அதே கருத்தை பேசி கைது செய்து பாருங்கள் என சீமான் பேசுவது, ஒரு தலைவருக்கான பண்பு இல்லை.
சாதி, மத ரீதியிலான பிரச்சினைகளை உருவாக்கும் வகையில் சீமானின் பேச்சு இருக்கிறது. "நாமெல்லாம் தேவனுடைய பிள்ளைகள் என நினைக்கிறோம். ஆனால் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் ஆகி நீண்டகாலம் ஆகி விட்டது" என ஒரு அறிக்கையில் பழி சொல்லி பேசி இருக்கிறார்.
துாய்மை பணியாளர்கள் எல்லாம் தெலுங்கில் இருந்து வந்தவர்கள் என பேசி இருக்கிறார். தமிழ், தமிழ்குடி என பேசும் இவர்கள் எப்படி சாதி பெயர் சொல்லி இழிவாக பேசுகிறார்கள்? சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் வகையில் அவர் பேசுவதை திமுக கண்டிக்கிறது.
இன்று ஒன்று பேசுகிறார். அடுத்தாண்டு மாற்றி பேசுகிறார். ஆகையால் அவரது மனநிலையை சோதித்து கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட முறையில் தவறான சொற்களை பயன்படுத்தி சீமான் பேசுவது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் வகையில் அமைகிறது. இது ஏற்கதக்கதல்ல. நடைமுறைக்கு சாத்தியமில்லாததை அடுக்கு மொழியில் பேசி தமிழ் சமுகத்தை தவறாக வழி நடத்த முயற்சிக்கிறார்.
கட்சி நடத்த எங்கிருந்து அவர் பணம் வாங்குகிறார் அனைவருக்கும் தெரிய வாய்ப்புள்ளது. இலங்கை தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தி உலகளவில் நன்கொடையை பெற்று வருகிறார்.
தமிழ்நாட்டில் திமுக எதிர்ப்பை காட்டிக் கொள்வதற்காக திமுகவையும், தலைவரையும் அவதூறாக பேசுவதாக தெரிகிறது. சீமான்
நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும். அரசியல் அரைவேக்காடுத்தனமாக பேசக்கூடாது. அரசியல் முதிர்ச்சி இல்லாத தலைவராக தெரிகிறார்.
பச்சோந்தி போல் ஒருநாள் ஒரு கருத்தை ஆதரித்தும், பின்பு எதிர்த்தும் பேசி வருகிறார். சீமான் அரசியல் தலைவருக்கே
தகுதியானவர் அல்ல. எங்களது தலைவர் குறித்து பேச அவருக்கு அருகதை கிடையாது எனவும் கூறினார்.
- கலைஞர் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுவது தலைவருக்கான அழகல்ல.
- மாற்றி மாற்றி பேசும் சீமான் தனது மனநிலையை பரிசோதித்து கொள்வது நல்லது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 70 ஆண்டுகள் தமிழ்நாட்டில் இருந்த சிறந்த ஆளுமை என கலைஞரை புகழ்ந்த சீமானே இப்போது கலைஞர் குறித்து அவதூறாக பேசுகிறார்.
* அடுக்குமொழியில் பேசி தமிழ் சமூகத்தை சீமான் தவறாக வழிநடத்துகிறார்.
* கருத்துரிமை என்கிற பெயரில் உண்மைக்கு புறம்பாக பேசுவதை ஏற்க முடியாது.
* கலைஞர் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுவது தலைவருக்கான அழகல்ல.
* சீமான் ஒரு அரசியல் அரைவேக்காடு, பச்சோந்தி.
* இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை சாத்தானுடைய பிள்ளைகள் என சீமான் பேசியிருந்தார்.
* சட்டம், ஒழுங்கு பிரச்சனை, சாதி, மத ரீதியான பிரச்சனை உருவாக்குவதாகவே அவரது பேச்சு உள்ளது. அவரது பேச்சை திமுக வன்மையாக கண்டிக்கிறது.
* மாற்றி மாற்றி பேசும் சீமான் தனது மனநிலையை பரிசோதித்து கொள்வது நல்லது என்று கூறினார்.
- போலீசார் தொடர்ந்து தடுத்து நிறுத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
- கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து அவ்வப்போது பீடி இலைகள், மஞ்சள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதனை போலீசார் தொடர்ந்து தடுத்து நிறுத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இன்று அதிகாலை 2 மணி அளவில் கடற்கரை ஓரமாக சந்தேகத்திற்கிடமான முறையில் லோடு ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
போலீசார் வருவதை கண்டதும் வாகனத்தில் இருந்தவர்கள் லாரியை நிறுத்திவிட்டு கீழே குதித்து தப்பி ஓடினர். போலீசார் சோதனை செய்ததில், வாகனத்தில் 30 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் 1500 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.
அதனை இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் அவர்கள் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ரூ. 20 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் கைப்பற்றி வாகனத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கடந்த மே மாதம் தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் பீடி இலைகள், அதற்கு முன்பு வேம்பார் கடற்கரையில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் என அடுத்தடுத்து ரூ.1 கோடியை 40 லட்சம் மதிப்புள்ள பீடி இலை கடத்தல்களை 'கியூ' பிரிவு போலீசார் கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலவருக்கு தங்க காசு மாலையை உபயமாக வழங்குவதாக கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு வேண்டியிருந்தார்.
- கோவில் உள்துறை கண்காணிப்பாளர் அற்புதமணி, பேஷ்கார் ரமேஷ், பணியாளர் கிட்டு சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருச்செந்தூர்:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியைச் சேர்ந்த போஸ் என்ற பக்தர் தற்போது மதுரை கே.கே.நகரில் வசித்து வருகிறார். அரசு ஒப்பந்ததாரரான இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலவருக்கு தங்க காசு மாலையை உபயமாக வழங்குவதாக கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு வேண்டியிருந்தார்.
இதனை நிறைவேற்றுவதற்காக நேற்று போஸ் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர்கள், ரூ.70 லட்சம் மதிப்பிலான 978 கிராம் எடையுள்ள தங்க காசு மாலையை கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம் வழங்கினர்.
கோவில் உள்துறை கண்காணிப்பாளர் அற்புதமணி, பேஷ்கார் ரமேஷ், பணியாளர் கிட்டு சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 4 மண்டலங்களிலும் தூய்மை தொழிலாளர்களாக பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 4 மண்டலத்தை சேர்ந்த டிரைவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 400-க்கும் மேற்பட்டோர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஒப்பந்த நிறுவனம் வழங்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பாரத டிரைவர் மற்றும் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி டிரைவர்கள், தூய்மை பணியாளர்களை தமிழ்நாடு பணி 1981-ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தமிழக அரசாணை படி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பில்லுடன் நாள் ஒன்றுக்கு 725-ம் ஓட்டுனருக்கு 763-/ம் வழங்க வேண்டும். பி.எப், இ.சி.ஐ. தொழிலாளர்களிடம் பணம் பிடித்தம் செய்வதை முறைப்படுத்த வேண்டும்.
ஊதியம் குறித்த நாளில் ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதிக்குள் வழங்க வேண்டும், உள்ளிட்ட19 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, `கடந்த மாதம் 26-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
ஆனால் கடந்த 5-ந் தேதி அனைத்து மண்டலத்தில் பணிபுரியும் டிரைவர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தில் 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது நிறைய பணியாளர்களுக்கு, குறைவாக சம்பளம் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த செயலை கண்டித்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். இதனால் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் பாதுகாப்பு பணிக்காக 50-க்கும் மேற்ப்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்
தகவல் அறிந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும், 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதை திரும்ப பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதனை ஏற்று அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாக பிரச்சினை காரணமாக போராட்டம் நடைபெற்றது. பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இ .எஸ்.ஐ. , பி.எப். பிடித்தம் கணக்கு காட்டவில்லை என்றனர். அது வழங்கப்படும்.
பணியில் காயம் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வழி வகை செய்யப்படும் என்று கூறிய நிலையில் தொழிலாளர்கள் அதனை ஏற்று கலைந்து சென்றனர் என்றார். அப்போது மேயருடன் துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- ஏராளமான கூட்டம் அலைமோதியதால் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுபமுகூர்த்த நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர்.
அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான கூட்டம் அலைமோதியதால் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் பக்தர்கள் வந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலை ஓரத்திலும், கோவில் அருகில் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் இடத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
- தமிழக தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி உயரவில்லை.
- அரசியலில் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவே சசிகலா ஏதேதோ பேசி வருகிறார்.
கோவில்பட்டி:
சென்னை-நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்லும் என்று ரெயில்வே துறை அறிவிப்பினை வெளியிட்டது. இந்நிலையில் இதற்கு முயற்சி எடுத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சட்டமன்ற அலுவலகத்தில் அ.தி.மு.க. மற்றும் லைன்ஸ் கிளப் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மையப்படுத்தி தான் என்றுமே தமிழக அரசியல் உள்ளது என்பதற்கு அடையாளம் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அவரது புகைப்படத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்து உள்ளதற்கு சான்று. ஜெயலலிதாவை விமர்சித்தவர்கள் எல்லாம் அவரின் பெயர், படத்தை பயன்படுத்துகிற நிலைக்கு வந்துள்ளனர். அரசியல் லாபத்திற்காக அவரது புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளனர்.
டி.டி.வி.தினகரனுக்கும், அ.தி.மு.க.விற்கும் எந்த தொடர்பும் இல்லை. அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே ஜெயலலிதாவின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த முடியும். தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளை பா.ஜ.க. கண்டு கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தான் கூட்டணியை விட்டு வெளியேறினோம். அண்ணாமலைக்காக அல்ல. அண்ணாமலை எல்லாம் எங்களுக்கு பொருட்டே அல்ல.
தமிழக தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி உயரவில்லை. 12 கட்சிகளோடு கூட்டணி வைத்தும் 12 சதவீத வாக்கு வங்கியை கூட பா.ஜ.க.வால் தாண்ட முடியவில்லை. அவ்வப்போது அரசியலில் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவே சசிகலா ஏதேதோ பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 2 பேரும் ஸ்பிக் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
- விசாரணை என்ற பெயரில் ரூ.30 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் சரக பகுதியில் குட்கா புகையிலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் இருந்து பணபேரம் நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு தென் மண்டல ஐ.ஜி. உத்தரவிட்டார். அதன் பேரில் நடந்த விசாரணையின் அடிப்படையில், மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஐ.ஜி. கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வந்த சிவக்குமார் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றி வந்த சந்தனகுமார் ஆகிய 2 பேரும் ஸ்பிக் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அங்கு பணி செய்து வந்த பாரதி நகரை சேர்ந்த சேகர்(வயது40) என்பவரை முறைகேடாக மதுபானம் விற்பனை செய்ததாக கூறி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் ரூ.30 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான குற்றச்சாட்டை தொடர்ந்து சிவக்குமார் மற்றும் சந்தன குமார் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கும் மாற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சுரவணன் உத்தரவிட்டுள்ளார்.
- 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக் பறிமுதல் செய்யப்பட்டது.
- மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க அனுமதி கிடையாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் சில ஓட்டல்கள் மற்றும் சாலை ஓரங்களில் செயல்படும் பானிபூரி உள்ளிட்ட கடைகளில் பழைய கெட்டுப்போன உணவுகளை பயன்படுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி உத்தரவின்பேரில் தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடியில் உள்ள ஒரு உணவகத்தில் பழைய உணவு எண்ணெய் தூய்மைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.
எனவே 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதை பயன்படுத்தி தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய உணவு எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் முன்தயாரிப்பு செய்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த 56 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தியபோது சுகாதாரத்திற்கு கேடு விளைக்கும் வகையில் பழைய பொருட்களை பயன்படுத்திய உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மேலும் மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க அனுமதி கிடையாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள ஜவுளி கடை வளாகம் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள பானி பூரி கடை உள்ளிட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பானிபூரி கடையில் செயற்கை நிறமிகள் ஏதும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை. இருப்பினும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பானிபூரி மசாலா, உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆய்வறிக்கை வந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தெரிவித்தார்.
- மாரிசெல்வத்தின் வீட்டிற்கு சென்ற சிலர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
- போலீசார் மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் களஞ்சியம். இவரது மனைவி கணேஷ்வரி. இவர்களுக்கு 5 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கடைசி மகன் மாரிசெல்வம் என்ற அசால்ட்(வயது 24). மீனவர்.
இந்நிலையில், கடந்த 21-ந் தேதி மாரிசெல்வம் மாயமானார். இதுகுறித்து அவரது சகோதரி மாரீஸ்வரி தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். மேலும் தனது மகனுக்கு 3 சிறுவர்களால் ஆபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று அவரது தாய் கணேஷ்வரி கலெக்டர் அலுவலத்திலும் புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
சந்தேகத்தின் பேரில் மேட்டுப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கடந்த 20-ந் தேதி மாரிசெல்வத்திற்கும், மேட்டுப்பட்டியை சேர்ந்த 4 சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவர் மாரிசெல்வத்தின் செல்போனை உடைத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மாரிசெல்வம் அதில் ஒருவரது செல்போனை பறித்து அதனை கடலில் வீசி உள்ளார்.
இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அன்று இரவு மாரிசெல்வத்தின் வீட்டிற்கு சென்ற சிலர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
மாரிசெல்வம் கடந்த 21-ந் தேதி திரேஸ்புரம் பகுதியில் வந்தபோது 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கும்பல் அவரை சுற்றி வளைத்தது. அவர்களிடம் இருந்து தப்பி ஓடி உளளார். எனினும் அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி செங்கற்களால் தாக்கி உள்ளனர்.
இதில் மயக்கம் அடைந்த அவரை அந்த கும்பல் கை, கால்களை கட்டி அங்கேயே குழி தோண்டி உயிருடன் புதைத்துள்ளனர். இந்நிலையில் மாரிசெல்வம் புதைக்கப்பட்ட இடத்தை அந்த சிறுவன் அடையாளம் காட்டினான்.
கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் புதைக்கப்பட்ட இடத்தில் மாரிசெல்வத்தின் உடல் இன்று தோண்டி எடுக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக போலீசார் மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்