search icon
என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • 2047-ல் இந்த நாடு வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக வேண்டும். என்றால் செலவினத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

    திருச்செந்தூர்:

    பாரதிய ஜனதா மத்திய மந்திரி எல்.முருகன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

    அப்போது புரோகிதர்கள் முன்னிலையில் எதிரிகளை வலுவிழக்கச் செய்யும் சத்ரு சம்ஹார யாகம் மற்றும் பூஜை செய்தார் .

    தொடர்ந்து கோவிலில் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, குரு பகவான், சத்ரு சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட சன்னதியில் வழிபட்டார். பின்னர் அவர் இரும்பு ஆர்ச் பகுதியில் பா.ஜ.க. புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று உறுப்பினர்களை சேர்த்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பொறுப்பேற்று முதல் 100 நாட்களில் 15 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை வழங்கி உள்ளார். நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு மட்டுமே ரூ.3 லட்சம் கோடி அளவிற்கு பிரதமர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

    அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பெண்கள் பெயரில் 3 கோடி வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முத்ரா கடன் ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள 11 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் பி, சி நகரங்களில் எப்.எம். ரேடியோ அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரெயில்வே திட்டத்திற்கு மட்டும் ரூ.6,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 2047-ம் ஆண்டு நாம் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது உலக நாடுகளுக்கு வழிகாட்டும் நாடாக, உலகிற்கே தலைமை வகிக்கும் நாடாக, வல்லரசு நாடாக மாறும் வகையில் இந்த 100 நாட்களில் மிகப்பெரிய சாதனைகளை பாரத பிரதமர் செய்துள்ளார்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வருவதற்காக கல்வியாளர்கள், நீதிபதிகள், துணை வேந்தர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டு திட்டம் வரையறை தயாரிக்கப்பட்டுள்ளது.

    2047-ல் இந்த நாடு வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக வேண்டும். என்றால் செலவினத்தை கட்டுப்படுத்த வேண்டும். தேர்தலில் அதிக செலவினங்கள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு நாட்டின் வளர்ச்சிக்காக ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமான ஒன்று. அது காலத்தின் கட்டாயமானதாகும்.

    பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் ஏற்றுக்கொள்வதாக கையெழுத்திட்டது தமிழக அரசு. மத்திய அரசு வழங்கக்கூடிய நிதிக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அந்த நிதி வழங்கப்படும்.

    தமிழக முதலமைச்சர் முதலீட்டை ஈர்க்க வெளிநாடு சென்று வந்ததை பற்றி கேள்வி எழுப்பாமல் இருப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேர்ந்து நடத்தக்கூடிய நாடகம் தான் மது ஒழிப்பு மாநாடு.

    தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போது மத்திய வெளியுறவுத்துறை துரிதமாக செயல்பட்டு தமிழக மீனவர்களை மீட்டுக்கொண்டு வருகிறது. மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க ஜி.பி.எஸ். கருவிகள் போன்றவற்றை வழங்கி உள்ளோம். மீனவர்கள் ஆழ் கடலில் மீன் பிடிக்க மானியத்துடன் கூடிய பெரிய மீன்பிடி படகுகளை வழங்கி உள்ளோம். மீனவர்களுக்கு கடல் பாசி பூங்கா கொண்டு வந்துள்ளோம்.

    தொடர்ந்து மீனவர் நலனுக்காக தொடர்ந்து இந்த ஆட்சி பாடுபட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் உடனடியாக இலங்கை அரசிடம் இருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆன பின் தமிழகத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வர முடியும்?

    தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின்பு டாஸ்மாக் கடை எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கூறிய தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த பின்பு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது. கிராமங்களில் அங்கன்வாடி மையம் பள்ளிக்கூடம் இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் உங்களை வரவேற்கிறேன் என்கின்ற விளம்பரங்கள் இருக்கின்றன.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

    வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவருடன் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், மகளிரணி மாநில பொதுச்செயலாளர் நெல்லையம்மாள், பாராளுமன்ற பொறுப்பாளர் விவேகம் ரமேஷ், பா.ஜ.க. நகர தலைவர் நவ மணிகண்டன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • குற்றம் சாட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
    • பெயர்க்குழப்பம் காரணமாக செய்தி ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில,

    தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த 06.09.2024 அன்று வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலராக குற்றம் சாட்டப்பட்டுள்ள மு.கண்ணன் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.

    மாறாக திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்த து.கண்ணன் என்பவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு அளிக்கப்பட்ட து.கண்ணன் என்பவருக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பெயர்க்குழப்பம் காரணமாக செய்தி ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டுள்ளனர்.

    • வடபகுதியில் அதிகாலை சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்தனர்.
    • கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசார் வருவதை தெரிந்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடற்கரை பகுதி வழியாக பீடி இலை மூட்டைகள் இலங்கைக்கு படகு மூலம் கடத்த இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ் குமார் மற்றும் காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் கடற்கரைப் பகுதியில் நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திரேஸ்புரம் கடற்கரை வடபகுதியில் அதிகாலை சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது அதில் 30 கிலோ எடை கொண்ட 42 பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் மினி லாரி மூலம் பீடி இலை மூட்டைகளை கொண்டு வந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்றது தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசார் வருவதை தெரிந்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதனைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைதான ரூபிநாத் கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவி ஐ.ஏ.எஸ். என்று கூறி பல்வேறு காரியங்களை சாதித்து வந்துள்ளார்.
    • பல சலுகைகளை அவர் பெற்றுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பெண் உள்பட 2 பேர் வந்தனர்.

    அப்போது அங்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானை சந்தித்த அந்த பெண், தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், உத்தரபிரதேசம் மாநில கல்வித்துறையில் உதவி செயலாளராக இருப்பதாகவும் கூறினார். புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னிடம் பணம் வாங்கி கொண்டு, அதனை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகார் தெரிவித்தார்.

    அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூலம் விசாரணை நடத்தியதில் அந்த பெண் போலி ஐ.ஏ.எஸ். என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த பெண் நெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்த மங்கையர்கரசி (வயது 44) என்பதும், உடந்தையாக வந்தவர் தாழையூத்தை சேர்ந்த ரூபிநாத்(42) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து சிப்காட் போலீசார் மங்கையர்கரசி, ரூபிநாத் ஆகிய 2 பேர் மீதும் அரசு ஊழியர் போல் நடித்து அரசு ஊழியரை ஏமாற்றி பணி செய்ய வைத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். ரூபிநாத்தை தூத்துக்குடி பேரூரணி சிறையிலும், மங்கையர்கரசியை நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும் அடைத்தனர்.

    இதனிடையே கைதான மங்கையர்கரசி குறித்து தற்போது பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளது. மங்கையர்கரசியின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து நெல்லைக்கு வந்துள்ளார்.

    இங்கு சிறிதுகாலம் கல்லூரி பேராசிரியராக பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் தாழையூத்தை சேர்ந்த ரூபிநாத்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    தாழையூத்து பகுதியில் மெட்ரிக்குலேசன் பள்ளி நடத்தி வரும் ரூபிநாத், பா.ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட வெளிநாடுவாழ் தமிழர் நலன் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்திற்கு மங்கையர்கரசி சென்றுள்ளார். அப்போது நான் உத்தரபிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். எனது கணவர் ரூபிநாத்துக்கு துப்பாக்கி உரிமம் கேட்டிருந்தேன்.

    துப்பாக்கி உரிமம் தொடர்பாக அளித்த மனுவை தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை விசாரிக்க வேண்டாம் என்றும், உடனடியாக அனுமதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடம் தெரிவித்துள்ளார். மேலும் கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமியிடம் நான் ஐ.ஏ.எஸ். என்று சொல்லியும் துப்பாக்கி உரிமத்திற்கு ஒவ்வொரு ஆவணங்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், உளவுப்பிரிவு போலீசாரிடம் மங்கையர்கரசி குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். அதில் அவர் போலி ஐ.ஏ.எஸ். என தெரியவந்த நிலையில், நேற்று அவர் தூத்துக்குடியில் சிக்கிவிட்டார்.

    இதையடுத்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி, இந்த சம்பவம் தொடர்பாக மங்கையர்கரசி மற்றும் ரூபிநாத் மீது ஆள்மாறாட்டம் செய்தல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கைதான ரூபிநாத் கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவி ஐ.ஏ.எஸ். என்று கூறி பல்வேறு காரியங்களை சாதித்து வந்துள்ளார். ஒப்பந்தங்கள் எடுத்தல், பள்ளிக்கு சலுகைகள் பெற்றுக்கொள்ளுதல் என பல சலுகைகளை அவர் பெற்றுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • ஜி.பி.முத்து தகாத வார்த்தைகளால் வீதியில் நின்று பேசியதாக கூறப்படுகிறது.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வெங்கடாசலபுரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் யூடியூபர் ஜி.பி.முத்து மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமானதாகும்.

    இந்த கோவிலில் தூத்துக்குடியைச் சேர்ந்த மகேஷ் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் புரட்டாசி மாத பிறப்பையொட்டி கோவிலுக்கு மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பூஜை வைப்பதற்காக வந்தனர்.

    அப்போது அங்கு வந்த ஜி.பி.முத்து, மகேசை இந்த கோவிலுக்கு இனி நீ பூஜை வைக்கக்கூடாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது மகேஷ் தரப்புக்கும், ஜி.பி.முத்துவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜி.பி.முத்து தகாத வார்த்தைகளால் வீதியில் நின்று பேசியதாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்தவர்களில் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசில் மகேஷ் தரப்பினர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வழக்கு விசாரணை இலங்கை புத்தளம் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
    • தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 மீனவர்களும் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி மகாராஜா. இவர் அந்தோணி தேன் டெனிலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் 20-ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் சர்வதேச எல்லை தாண்டி இலங்கை பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி 22 மீனவர்களை இலங்கையை சேர்ந்த கடற்படையினர் கைது செய்ததுடன், விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீனவர்கள் அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இலங்கை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் மீதமுள்ள 10 மீனவர்களை, நீதிமன்ற காவலில் வைக்கவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை இலங்கை புத்தளம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 10 மீனவர்களில் 3 பேருக்கு உடல்நலக்குறைவு காரணமாக ஆஜராகவில்லை. மீதமுள்ள 7 பேர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி தருவைகுளம் மீனவர்கள் 10 பேருக்கும் ரூ.3.5 கோடி அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தார். இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 மீனவர்களும் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    • நேற்று இரவு கடற்கரையில் தங்கி வழிபாடு செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    அதன்படி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று பவுர்ணமி தினத்தன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் தங்கி அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்துவிட்டு, இன்று காலையில் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    புரட்டாசி மாத பவுர்ணமி என்பதால் நேற்று கோவில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நேற்று இரவு கடற்கரையில் தங்கி வழிபாடு செய்தனர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்காக இலவச பொது தரிசனம் மற்றும் ரூ.100 சிறப்பு தரிசன பாதையில் கூடுதலாக தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    கோவில் வளாகத்தில் பெருந்திட்ட வளாக பணிகள் நடந்துவருவதால் வாகனம் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. அதனால் நகரில் தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் நகர் பகுதி மற்றும் நகரின் எல்லைகளில் ஆங்காங்கே ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டி ருந்தன. அதேபோல் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் வழித் தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் தலை மையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    • பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம்.
    • கடல் அலைகளின்றி குளம் போல் காட்சியளித்தது வருகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. அதேபோல் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியும் கடற்கரை அருகில் அமைந்துள்ளது.

    மேலும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் வழக்கமாக கோவில் கடலானது அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் சுமார் 2 நாட்கள் குறிப்பிட்ட நேரம் வரை கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் நேற்று பவுர்ணமி தினம் என்பதால் இன்று வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலானது நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரப் பதிவரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு சுமார் 50 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்படுகிறது.

    இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. மேலும் கடல் அலைகளின்றி குளம் போல் காட்சியளித்தது வருகிறது . இதனால் புனித நீராட வந்துள்ள ஏராளமான பக்தர்கள் பாறை மீது ஏறி விளையாடி வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது கடல் அலையே இல்லாமல் குளம் போல் காட்சியளிப்பதை பார்த்து பக்தர்கள் 'செல்பி' எடுத்து வருகின்றனர்.

    • சரக்கு பெட்டக முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
    • இது இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம்.

    தூத்துக்குடி துறைமுகத்தில் புதிய சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

    விக்சித் பாரத யாத்திரையில் இது ஒரு முக்கியமான கட்டமாகும்.

    இந்த புதிய தூத்துக்குடி சர்வதேச கொள்கலன் முனையம் இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம். இந்த புதிய முனையத்தின் மூலம், வ.உ.சிரதம்பரனார் துறைமுகத்தின் திறன் விரிவடையும்.

    இது வ.உ.சி துறைமுகத்தில் தளவாடச் செலவுகளைக் குறைக்கும் மற்றும் இந்தியாவின் அன்னிய செலாவணியை காப்பாற்றும்.

    இவ்வாறு அவர் குறி்பபிட்டுள்ளார்.

    • மதுவில்லா தமிழகம் என்று ஒரு கோடி கையெழுத்து வாங்கி ஆளுநரிடம் கொடுத்து இருக்கின்றோம்.
    • மது ஒழிப்பை பொறுத்த வரையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் உறுதியாக இருக்கிறார்கள்.

    தூத்துக்குடி:

    நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

    தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை 1-ந்தேதி தொடங்கி தமிழக முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணி வருகிற 15-ந்தேதி முடிவடையும். திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறுகிறார்.

    1999-ம் ஆண்டு முதலே தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனத் தலைவர் மூப்பனார் தலைமையில் ஒரு அணி பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அமைந்த போது இந்த கருத்து வலுவாக அப்போது கூறப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் உரிமை உள்ளது என்று கூறுவதே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் எண்ணம்.

    அதே நேரத்தில் ஒரு இலக்கு இருக்க வேண்டும். என்னவென்றால் கூட்டணியோடு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு பணியாற்ற வேண்டும். இலக்கை நாம் சரியாக முறையாக பயன்படுத்திக் கொண்டால் நிச்சயமாக வருங்காலத்தில் தொண்டர்கள், தலைவர்கள் நினைப்பது போல எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது.

    முழு பூசணிக்காயை எந்த கட்சி வேண்டுமானாலும் சோற்றில் மறைக்க பார்க்கலாம். ஆனால் உண்மை நிலை இதுவாக தான் இருக்க முடியும். ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நினைப்பது இந்த கால அரசியலில் எந்த கட்சி தொண்டர்கள் நினைத்தாலும் அது தவறு கிடையாது.

    மது ஒழிப்பை பொறுத்த வரையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் உறுதியாக இருக்கிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் காலத்தில் இருந்து மதுவில்லா தமிழகம் என்ற கொள்கையை உறுதிப்பட எல்லா கூட்டங்களிலும் பேசிக்கொண்டு இருக்கின்றோம். படிப்படியாக தமிழகத்தில் மது ஒழிப்பு தேவை என்பதை வலியுறுத்திக் கொண்டு இருக்கின்றோம்.

    மதுவில்லா தமிழகம் என்று ஒரு கோடி கையெழுத்து வாங்கி ஆளுநரிடம் கொடுத்து இருக்கின்றோம் என்றால் அது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மட்டும் தான். எனவே பல வழிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்றவை நடத்தி இருக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர். விஜய சீலன், தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம், மாநகர தலைவர் ரவிக் குமார் உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
    • வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தொடர் விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் இன்று அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    அதனால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் வந்த வாகன நெருக்கடியால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆனாலும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு சரி செய்தனர்.

    • கோவில்பட்டி புதுரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
    • ஒவ்வொரு வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் பாடங்கள் நடத்தி அசத்தினார்கள்.

    கோவில்பட்டி:

    தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில் பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக்கூடியதாக மாநில முன்னுரிமையை கொண்டு வந்துள்ள அரசாணை 243-ஐ ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கல்வி மாவட்டத்திலும் போராட்டம் காரணமாக பல பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கோவில்பட்டி புதுரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளது. 250 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியர் உள்பட 8 பேர் பணியாற்றி வருகின்றனர். மேலும் 2 ஆசிரியர்கள் மாற்றுப்பணியாக பணியில் உள்ளனர்.

    ஆசிரியர்களின் போராட்டத்தில் பங்கேற்பதற்காக 8 ஆசிரியர்கள் சென்றுவிட்டனர். தலைமை ஆசிரியர் சுப்பாராயன் என்பவரும் பயிற்சியில் பங்கேற்க சென்றுவிட்டார். இதனால் ஒரு ஆசிரியர் மட்டுமே இருந்ததால், ஆத்திக்கிணறு பள்ளியில் இருந்து மாற்றுப்பணியாக ஒரு ஆசிரியர் வந்திருந்தார். 2 ஆசிரியர்கள் மட்டும் இருந்தனர்.

    இதனால் பெரும்பாலான வகுப்புகளில் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவ-மாணவிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    இருந்தபோதிலும் ஒவ்வொரு வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் பாடங்கள் நடத்தி அசத்தினார்கள். அதாவது, தங்களது ஆசிரியர்கள் கற்பித்த பாடங்களை மாணவ-மாணவிகள் கரும்பலகையில் எழுதிப்போட்டு சக மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்கள். இது மற்ற மாணவர்களிடையே வரவேற்பை பெற்றது.

    ×