search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலகிரி மலை பாதையில் மரம் முறிந்து விழுந்தது
    X


    கோப்புப்படம்

    ஏலகிரி மலை பாதையில் மரம் முறிந்து விழுந்தது

    • சூறை காற்றுடன் மழை.
    • போக்குவரத்து பாதிப்பு.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. 14 கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலையில் தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இது சுற்றுலா தலம் என்பதால் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இதனால் இரவு நேரங்களிலும் பகல் நேரத்தில் மலைச் சாலையில் வாகனங்களின் போக்குவரத்து இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சூறைக் காற்று வீசியதால் 9 வது கொண்டை ஊசி வளைவு மலைச்சாலையில் சாலையோரம் இருந்த பெரிய மரத்தின் கிளை முறிந்து சாலையில் விழுந்தது. மேலிருந்து கீழே வரும் வாகனங்களும் கீழிருந்து மேலே வரும் வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர் இதுகுறித்து தகவலறிந்த ஏலகிரி மலை போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் துணைத்தலைவர் திருமால், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் விழுந்து கிடந்த மரத்தை சுமார் அரை மணி நேரம் போராடி வெட்டி அகற்றினர்.

    அதன்பிறகு அணிவகுத்து நின்ற வாகனங்களின் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. மேலும் சாலையோரத்தில் வாகனங்கள் செல்வதற்காக தற்காலிகமாக நேற்று இரவு மரங்களை வெட்டி அகற்றி சீரமைத்தனர்.

    இன்று காலை திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சூறைக்காற்றுடன் மழை சாலையில் இருந்த மரம் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×