search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணா தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கும் பூண்டி ஏரி
    X

    கிருஷ்ணா தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கும் பூண்டி ஏரி

    • கடந்த ஆண்டு இதே நாளில் 7.132 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
    • பூண்டி ஏரியில் ஷட்டர் பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு தமிழகத்துக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஆக மொத்தம் 12 டி.எம் சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறந்து விடவேண்டும்.

    இன்றைய காலை நிலவரம் படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆறு ஏரிகளிலும் 6.412 டி.எம்.சி. தண்ணீர்(மொத்தம் 13.2 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 7.132 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது இருப்பில் உள்ள தண்ணீரைக் கொண்டு வரும் நவம்பர் மாதம் வரை சென்னையில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்க முடியும். எனினும் பூண்டி ஏரி முழுவதுமாக வறண்டு வருவதால் இனி கிருஷ்ணா நதி நீரை நம்பித்தான் ஏரி உள்ளது. கண்டலேறு அணையில் தற்போது 3 1/2 டி. எம். சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனால் ஆந்திராவில் பலத்த மழை பெய்தால் மட்டுமே கண்டலேறு அணைக்கு போதுமான தண்ணீர் வந்த பின்னர் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட முடியும். இதனால் பூண்டி ஏரி கிருஷ்ணா தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் மொத்த கொள்ளவான 3231 மி.கனஅடியில் வெறும் 74 மி.கனஅடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் எரிக்கு தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரியில் ஷட்டர் பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்து விட்டதால் ஏராளமான மீன்கள் இறந்து மிதக்கின்றன.

    Next Story
    ×