search icon
என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • முட்டைகள் பாதுகாக்கப் பட்டு குஞ்சு பொறித்தும் அவை மீண்டும் கடலில் விடப்பட உள்ளது.
    • ஆமைகள் முட்டையிடும் பருவத்தில் அதனை கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

    பொன்னேரி:

    நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகள் முட்டையிடும் காலம் ஆகும். ஆமை முட்டைகள் 45 முதல் 60 நாட்களில் குஞ்சுபொரித்து விடும். தற்போது சென்னை கடற்கரை மற்றும் பழவேற் காடு கடற்கரை பகுதிகளில் ஏராளமான ஆமைகள் முட்டையிட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பழவேற்காடு பகுதியில் ஆமை முட்டைகளை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் இதுவரை சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்த முட்டைகள் பாதுகாக்கப் பட்டு குஞ்சு பொறித்தும் அவை மீண்டும் கடலில் விடப்பட உள்ளது.

    இதற்கிடையே பழவேற்காடு பகுதியில் முட்டையிட கரைக்கு வரும் ஏராளமான ஆமைகள் இறந்து வருகின்றன. படகுகள் மற்றும் வலைகளில் சிக்கி காயம் அடைந்து அவை இறப்பதாக ஆமைகள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்து உள்ளனர். ஆமைகள் முட்டையிடும் பருவத்தில் அதனை கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ணாமலையின் நடைபயணத்தையொட்டி கும்மிடிப்பூண்டியில் பாரதிய ஜனதா தொண்டர்கள் குவிந்தனர்.
    • ஆவடி மற்றும் மீஞ்சூரில் அண்ணாமலை மீண்டும் நடைபயணத்தை தொடங்குகிறார்.

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை தொடங்கிய அவர் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அண்ணாமலை நடைபயணம் செல்லும் இடங்களில் பாரதிய ஜனதா தொண்டர்கள் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட இடத்தில் நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை அங்கு திரளும் மக்கள் மத்தியில் பேசி வருகிறார். அப்போது பாரதிய ஜனதா அரசின் சாதனைகளை விளக்கி பேசும் அவர் தி.மு.க. அரசுக்கு எதிரான கருத்துக்களையும் கூறி வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அண்ணாமலையின் நடைபயணம் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார களமாகவும் மாறி இருக்கிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் நடைபயணத்தை முடித்து விட்டு அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று தனது பயணத்தை தொடங்கினார்.

    திருத்தணியில் காலையில் நடைபயணத்தை மேற் கொண்ட அவர் மாலையில் திருவள்ளூரிலும் இரவில் ஸ்ரீபெரும்புதூரிலும் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக அவரது நடைபயணம் நடைபெற்றது. இன்று காலையில் அண்ணாமலை கும்மிடிப்பூண்டியில் நடைபயணம் மேற்கொண்டார். கும்மிடிப்பூண்டி ரெட்டைமேடு சந்திப்பில் இருந்து தொடங்கிய நடைபயணம் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

    அண்ணாமலையின் நடைபயணத்தையொட்டி கும்மிடிப்பூண்டியில் இன்று பாரதிய ஜனதா தொண்டர்கள் குவிந்தனர். மாவட்ட நிர்வாகிகளும், பாரதிய ஜனதா கட்சியினரும் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கும்மிடிப்பூண்டி நடைபயணத்தை முடித்து விட்டு அண்ணாமலை அங்கேயே ஓட்டலில் தங்கினார்.

    பின்னர் மாலையில் ஆவடி மற்றும் மீஞ்சூரில் அண்ணாமலை மீண்டும் நடைபயணத்தை தொடங்குகிறார். பொன்னேரி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில் பச்சையம்மன் கோவில் ஆர்ச் பகுதியில் இருந்து மாலை 5 மணி அளவில் தொடங்கும் நடைபயணம் மீஞ்சூர் முப்பாத்தம்மன் கோவில் பகுதியில் நிறைவடைகிறது.

    இதன் பின்னர் இரவு 7 மணி அளவில் ஆவடி சட்ட மன்ற தொகுதியில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். ஆவடி காமராஜர் சிலை அருகில் இருந்து தொடங்கும் நடைபயணம் அங்குள்ள 'டிரெண்ட்ஸ்' ஷோரூம் பகுதி வரை சென்று முடிவடைகிறது.

    இதன் பின்னர் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் அண்ணாமலை நடைபயணத்தை மேற்கொள்கிறார் இதன் முடிவில் சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி திடலில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். இந்த பொதுக் கூட்டம் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது.

    • பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வந்து செல்கிறார்கள்.
    • பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பதே இல்லை.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21-வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பல பூங்காக்கள் முறையான பராமரிப்பு இன்றியும், விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்தும், புதர் மண்டியும், விஷ புச்சிகள் குடியிருக்கும் இடமாகவும் மாறி வருகிறது.

    குறிப்பாக பூந்தமல்லி நண்பர்கள் நகரில் உள்ள நகராட்சி பூங்கா பொது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    இந்த பூங்காவுக்கு தினந்தோறும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வந்து செல்கிறார்கள்.

    ஆனால் இங்கு ராட்டினம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்ட குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் அனைத்தும் உடைந்து கிடக்கின்றன. இதனை குழந்தைகள் ஏக்கத்துடன் பார்த்து செல்கிறார்கள். மேலும் ஏற்கனவே இருந்த குடிநீர், கழிப்பறை வசதிகள் அனைத்தும் இப்போது இல்லை. கழிவறைகள் உடைந்தும், குடிநீர் குழாய் துருபிடித்தும் காணப்படுகிறது. பூங்காவை சுற்றி நடந்து செல்லும் பாதையும் பல இடங்களில் இடிந்து கிடப்பதால் அதில் செல்லும் வயதானவர்கள் அடிக்கடி தடுமாறி விழும் நிலையும் நீடித்து வருகிறது.

    எனவே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நண்பர்கள் நகரில் உள்ள நகராட்சி பூங்காவை முறையாக பராமரித்து குழந்தைகள் விளையாட்டு சாதனங்களை புதிதாக அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    பூந்தமல்லி நகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பதே இல்லை. குறிப்பாக நண்பர்கள் நகரில் உள்ள பூங்காவில் குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் விளையாடும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் முறையான பராமரிப்பு இல்லாததால் குப்பை கழிவுகள், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் விஷ பூச்சிகள் வசிக்கும் இடமாகமாறி வருவதால் பொதுமக்கள் வந்து செல்லவே அச்சம் அடைந்து உள்ளனர்.

    இதனால் பூங்காக்களை பயன்படுத்த தயங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்த அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல் சின்னப்பா நகரில் உள்ள பூங்காவும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
    • கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    திருவொற்றியூர்:

    எண்ணூர் பெரிய குப்பத்தில் தனியார் உரத்தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் மாதம் திடீரென அமோனியா வாயு வெளியேறியது. இதனால் அப்பகுதியை சுற்றி உள்ள பொது மக்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி மயக்கம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இதைத்தொடர்ந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பசுமை தீர்ப்பாயத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


    இந்த நிலையில் உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து எண்ணூரை சுற்றி உள்ள 33 மீனவ கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தினமும் ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்த மக்கள் மீன்பிடிக்க செல்லாமல் தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களது போராட்டம் இன்று 42-வது நாளாக நீடித்தது.

    இதற்கிடையே வாயு கசிவு ஏற்பட்ட உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி எண்ணூர் முதல் தாழங்குப்பம் வரை உள்ள 33 மீனவ கிராம மக்கள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.


    இந்த நிலையில் மீனவ கிராமமக்கள் இன்று காலை திடீரென அன்னை சிவகாமி நகர், தாழங்குப்பம், பெரியகுப்பம், சின்னகுப்பம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மீனவ கிராம மக்கள் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டு வருவதால் பதட்டமான சூழல் ஏற்பட்டு உள்ளது. துணை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அன்னை சிவகாமி நகர் முதல் எண்ணூர் மேம்பாலம் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    உரத்தொழிற்சாலை முன்பும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு உள்ளனர். அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.
    • மலை கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் பணம், நகை, பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.

    திருத்தணி:

    முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திகழும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநி லங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.

    பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற காணிக்கையாக மலை கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் பணம், நகை, பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த பகுதியில் பாதுகாப்புடன் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட திருக்கோவில் ஊழியர்கள் பங்கேற்று, துணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 28 நாட்களில் பக்தர்கள் ரூ.1 கோடியே 31 லட்சத்து 82 ஆயிரத்து 988 ரூபாய் பணம், 711 கிராம் தங்கம், 8 ஆயிரத்து 880 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • கடத்தலில் ஈடுபட்ட கார்த்திக், நிர்மல்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
    • கடத்தலில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள அகூர் ஊராட்சி, நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடமுனி (42). தொழிலாளி. இவர் நேற்று காலை தனது தாய் லட்சுமியுடன் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டுசென்றார். பின்னர் மாடுகளை விவசாய நிலத்தில் கட்டி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    நத்தம் கிராமத்தில் உள்ள கோவில் மண்டபம் அருகே வந்தபோது காரில் வந்த 4 பேர் கும்பல் திடீரென கத்தி முனையில் மிரட்டி வெங்கட முனியை காரில் கடத்தினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் லட்சுமி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த கிராமமக்கள் கடத்தல் கும்பலை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் அவர்கள் கத்தியால் வெட்ட முயன்றனர். இதனால் பயந்து போன பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் கடத்தல் கும்பல் வெங்கடமுனியை காரில் கடத்தி சென்று விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திருவாலங்காடு ஒன்றியம் சந்தான கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வெங்கடமுனியிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், பல முறை பணம் கேட்டு வெங்கடமுனி தராததால் கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி ஆந்திர மாநிலத்திற்கு அழைத்து சென்று இருப்பதும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பின்தொடர்வதை அறிந்த கடத்தல் கும்பல் அங்கிருந்து வேலூர் பகுதிக்கு வந்து இருப்பது தெரியவந்தது. போலீசார் விரட்டிச்சென்று காரில் கடத்தப்பட்ட வெங்கடமுனியை பத்திரமாக மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட கார்த்திக், நிர்மல்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். கடத்தப்பட்ட வெங்கட முனியை 12 மணிநேரத்தில் போலீசார் மீட்டு உள்ளனர். இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரி காஞ்சிபுரம் வந்தார்.
    • அதிகாரிகளுடன் அதிகார பத்திரம் தாமதம் குறித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    திருத்தணி:

    காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ராமேஸ்வரி. இவர் மலேசியாவில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலம் திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை நிர்வகிக்க உரிமை கோரும் அதிகாரத்தை திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு வழங்க ராமேஸ்வரி முடிவு செய்தார்.

    இதற்காக திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தார். இதற்காக அனைத்து சான்றுகளும் பதிவேற்றப்பட்ட நிலையில், காயத்ரிக்கு வழங்கும் அதிகாரம் கோரும் பத்திரத்தை அதிகாரிகள் வழங்காமல் தொடர்ந்து தாமதப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரி காஞ்சிபுரம் வந்தார். அதிகார பத்திரம் குறித்து கேட்டபோது பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் சரிவர பதில் கூறவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த ராமேஸ்வரி திருத்தணி பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தார். அவர் அங்கிருந்த அதிகாரிகளுடன் அதிகார பத்திரம் தாமதம் குறித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சர்வர் பழுது காரணமாக அவருக்கு உரிய அதிகார பத்திரம் வழங்க முடியவில்லை என்றனர்.

    • ரெயில் நிலையத்தில் ரூ.28.82 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
    • நடைமேடை முழுவதும் கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன.

    திருவள்ளூர்:

    சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களை அம்ரித் திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இதில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரூ.28.82 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. நடைமேடை கூரைகளை மேம்படுத்துதல், கூடுதலாக நடைமேடை அமைத்தல், வாகனங்கள் நிறுத்தும் இடம், ரூ.10.13 கோடியில் 3 லிப்ட் மற்றும் நகரும்படிக்கட்டுகளுடன் கூடிய புதிய 12 மீட்டர் நீளம் கொண்ட நடைமேம்பாலம், மேம்படுத்தப்பட்ட தகவல் தரும் திரை, புதிய சி.சி.டி. கேமராக்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

    இதன் ஒருபகுதியாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில் பாதைகளை சீரமைக்க தோண்டப்பட்டது.

    இதனால் நடைமேடை முழுவதும் கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. பணிகளை விரைந்து முடிக்காததால் முதலாவது நடைமேடையில் வந்து நிற்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகள் சென்று ஏறவும், இறங்கவும மற்றும் நடந்து செல்லவும் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். சென்னை-திருப்பதி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்து நிற்கும்போது பயணிகள் பெட்டிகளுடன் ஏறி, இறங்க கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    மேலும் டிக்கெட் கவுண்டர் இடம் முதல் நடைமேடையில் உள்ளதால் கற்குவியலுக்கு நடுவே பயணிகள் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே நடைமேடை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • இடைவேளையில் சேவல்களை தயார் செய்யவும் தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
    • சேவல்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக பறந்து மோதும் காட்சிகள் சுற்றி உள்ள பார்வையாளர்களை ரசிக்க வைத்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளுர் அடுத்த தங்கனூர் கிராமத்தில் தைப்பூ சத்தை முன்னிட்டு வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி கோர்ட்டு அனுமதியுடன் நேற்று தொடங்கியது. இந்த சேவல் சண்டை போட்டியில் ஒரே நேரத்தில் 136 சேவல்கள் மோதின. இதற்காக தனித்தனியாக மோதும் களங்கள் தயார் செய்யப்பட்டு இருந்தன. இடைவேளையில் சேவல்களை தயார் செய்யவும் தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    சேவல்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக பறந்து மோதும் காட்சிகள் சுற்றி உள்ள பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இதனை காண திருவள்ளூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்து இருந்தனர். இதனால் சேவல் சண்டை போட்டி களைகட்டியது.

    நேற்று வரை மொத்தம் 724 சேவல்கள் களத்தில் நேருக்கு நேர் மோதி இருந்தன. தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நூரி, கதர், ஜாவா, யாகூத், கீரி, பீலா, கிளிக்கொண்டை, வெள்ளைக்கொண்டை, முள்ளு சேவல் உள்ளிட்ட பல வகையான சண்டை சேவல்கள் இதில் பங்கேற்றன.

    இன்று 2-வது நாளாக தங்கனூரில் சேவல் சண்டை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே பார்வையாளர்களும் ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதி திருவிழா போல் காட்சி அளித்தது. இன்று 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் மோதுகின்றன. இரண்டு நாட்களில் மொத்தம் 1200-க்கும் மேற்பட்ட சேவல்கள் போட்டியில் பங்கேற்றதாக போட்டியை நடத்தும நிர்வாகிகள் தெரிவித்தனர். இன்று மாலை 5 மணியுடன் சேவல் சண்டை போட்டிகள் முடிந்தன. போட்டியில் வெற்றி பெற்ற சேவல்களுக்கு தங்க காசு மற்றும் சான்றிதழ்,கோப்பைகள், கியாஸ் ஸ்டவ் அடுப்புகள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

    திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் புல்லரம்பாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஏரி நீர் மாசடைந்து வருவதுடன், அதன் கீழே உள்ள மற்ற ஏரிகளும் மாசடையும் நிலை உருவாகி உள்ளது.
    • தாமரை ஏரியை சுற்றி குடியிருப்பு பகுதி இருப்பதால் கழிவு நீர் மற்றும் கழிவுகளை ஏரியில் கொட்ட விடாமல் தடுக்க வேண்டும்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி நகரில் தாமரை ஏரி உள்ளது. இந்த ஏரி 48 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்ப டுகிறது. மேலும் இந்த ஏரி முழுவதும் தாமரை இலைகள் பரவி காணப்படுகிறது. நீர்வளத்துறையினர் இந்த ஏரியை பராமரித்து வருகிறார்கள். கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய நீர் ஆதாரமான இந்த ஏரி மாசடைந்து வருகிறது. இந்த ஏரியில் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு மாசடைந்த குட்டையாக மாறி வருகிறது.

    தாமரை ஏரியின் வடக்கு திசையில் பெத்தி குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட அருண் நகர் உள்ளது. அங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஏரியின் அருகாமையில் ஈஸ்வரன், அய்யாசாமி ஆகிய கோவில்களும் உள்ளன. இங்கு வருபவர்கள் ஏரி தண்ணீரை பயன்படுத்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    அப்பகுதி வாசிகள் தாமரை ஏரியில் கழிவுகளை தொடர்ந்து கொட்டி வருகின்றனர்.

    இதனால் ஏரி நீர் மாசடைந்து வருவதுடன், அதன் கீழே உள்ள மற்ற ஏரிகளும் மாசடையும் நிலை உருவாகி உள்ளது.

    தாமரை ஏரியை சுற்றி குடியிருப்பு பகுதி இருப்பதால் கழிவு நீர் மற்றும் கழிவுகளை ஏரியில் கொட்ட விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழை முழுவதுமாக நின்று விட்டதால் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
    • புழல் ஏரிக்கு 200 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கன அடியும் தண்ணீர் செல்கிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ளது கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. ஏரியின் பாதுகாப்பை கருதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. மழை முழுவதுமாக நின்று விட்டதால் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. போதுமான தண்ணீர் பூண்டி ஏரியில் இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்க வேண்டாம் என்று தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம் தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி ஏரி நீர்மட்டம் 34. 65 அடியாகவும் தண்ணீர் இருப்பு 3.028 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    கிருஷ்ணா தண்ணீர் திறப்பை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பை குறைக்கும் வகையில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் இணைப்பு கால்வாய் வழியாக பூண்டி ஏரியில் இருந்து புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் கால்வாயில் திறக்கப்பட்டு உள்ளது. இதில் புழல் ஏரிக்கு 200 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கன அடியும் தண்ணீர் செல்கிறது. எனவே விரைவில் கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருவள்ளூர்:

    திருத்தணி முருகன் கோயிலில் இன்று தை கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.

    தைகிருத்திகை விழாவையொட்டி அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

    பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி பொது வழியில் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். 100 ரூபாய் கட்டண தரிசனத்தில் 2 மணி நேரம் வரை வரிசையில் சென்று தரிசனம் செய்தனர். திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×