search icon
என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • மீனவர்களின் படகுகள் வலைகள் சேதம் அடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
    • மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவொற்றியூர்:

    மிச்சாங் புயலினால் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது எண்ணூர் முகத்து வாரம் பகுதியில் எண்ணெய் கழிவுகள் கலந்தது. இதில் மீனவர்களின் படகுகள் வலைகள் சேதம் அடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த திருச்சிணாங்குப்பம், ஒண்டிக்குப்பம், நல்ல தண்ணி ஓடை குப்பம், திருவொற்றியூர் குப்பம், பலகை தொட்டி குப்பம், கே.வி.கே.குப்பம், பெரிய காசி கோவில் குப்பம், இந்திரா காந்தி குப்பம்.

    புதுநகர் குப்பம், நடுக்காசி கோவில் குப்பம், ஓடை குப்பம் உள்ளிட்ட 12 மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கூறி பெண்கள் உள்பட சுமார் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பட்டினத்தார் கோவில் அருகில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் உள்பட ஏராளமனோர் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேல், உதவி கமிஷனர் சிதம்பர முருகேசன், போக்குவரத்து உதவி கமிஷனர் சீனிவாசன், தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ. இப்ராஹிம், மீன்வளத்துறை இணை இயக்குனர் இந்திரா, திருவொற்றியூர் தாசில்தார் சவுந்தர்ராஜன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் எண்ணூர் முகத்துவார கடல் பகுதியில் மீன் பிடித்து வரும் நெட்டுக்குப்பம், தாளங்குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம், காட்டுக்குப்பம், சிவன் படை வீதி குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவி போதாது, கூட்டுறவு சங்கத்தில் உள்ள ஆண், பெண் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், மீன்பிடி படகுகளுக்கு ரூ.70 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் இன்று காலை பெண்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட னர். அப்போது எண்ணெயில் சேதம் அடைந்த படகு மற்றும் வலைகளை சாலையின் நடுவே போட்டனர்.

    மறியல் போராட்டம் காரணமாக சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரிகள் சரக்குகளோடு விரைவுச் சாலையில் வரிசையாக நிற்கின்றன. மேலும் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. எண்ணூர் விரைவு சாலையில் திருவொற்றியூரில் இருந்து எண்ணூர் வரை செல்லும் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    • கனரக வாகனங்களால் பொது மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.
    • கனரக வாகனங்களுக்கு சாலையில் தனிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி - பஞ்செட்டி - திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக மீஞ்சூரை அடுத்த வல்லூர் சந்திப்பில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களால் பொது மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.

    இதனையடுத்து வல்லூர் சந்திப்பில் இருந்து மணலி, எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு சாலையில் தனிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சரக்கு பெட்டக வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தனி வழித்தடத்தை ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொது மக்களின் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் துறைமுகம் நோக்கி செல்லும் சரக்கு வாகனங்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்கு வரத்து நெரிசல் குறையும். சாலை யோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் அதிவேகமாகவும், சாகசங்கள் செய்தபடியும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துக்களை குறைக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் சாலை தடுப்புகளில் ஒளிரும் பட்டைகளை ஓட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் 100 கன அடி மட்டும் திறக்கப்பட உள்ளது.
    • செம்பரம்பாக்கம் ஏரியில் 3220 மில்லியன் கன அடி நீரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருவள்ளூர்;

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.

    இதன் மொத்த கொள்ளளவு, 3231 மில்லியன் கன அடி, நீர்மட்டம் 35 அடி ஆகும். பருவமழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் மதகுகள் வழியே வெளியேற்றப்பட்டு வந்தது.

    தற்போது மழை நின்றதால் நீர்வரத்து ஏரிக்கு குறைந்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 200 கன அடி நீர் மட்டும் வந்து கொண்டு இருக்கிறது.

    ஏரியில் தற்போது 3058 மில்லியன் கன அடி நீர் உள்ளது. நீர்மட்டம் 34.73 அடியாக (மொத்தம் உயரம் 35 அடி) உள்ளது. ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் 100 கன அடி மட்டும் திறக்கப்பட உள்ளது.

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பேபி கால்வாய் மூலம் 6 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதேபோல் புழல் ஏரியில் 3018 மில்லியன் கன அடி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3220 மில்லியன் கன அடி நீரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 5 சபைகளில் முதல் சபையான ரத்தின சபையாக திகழ்கிறது.
    • ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது நடராஜபெருமானின் 5 சபைகளில் முதல் சபையான ரத்தின சபையாக திகழ்கிறது. இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா வருகிற 26-ந் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக திருவா லங்காடு கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களின் வசதிக்காக கோயில் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    விழாவையொட்டி வருகிற 26-ந்தேதி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு ரத்ன சபாபதி பெருமாள் கோவில் வளாகத்தின் பின்புறத்தில் உள்ள தல விருட்சத்தின் கீழ் அபிஷேகம் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

    அதைத்தொடர்ந்து விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்குகிறது. நடராஜருக்கு நெல்லிப்பொடி, வில்வப்பொடி, பால், தேன் மற்றும் பழங்கள் என 33க்கு மேற்பட்ட வகையான அபிஷேகங்கள் விடிய விடிய மறுநாள் காலை வரை நடைபெறும்.

    இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சிறப்பு அலங்கா ரத்தில் மகா தீபாராதனை நடைபெறும்.

    பின்னர் 27-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு, கோபுர தரிசனம், பகல், 12 மணிக்கு, அனுக்கிரக தரிசனமும் 28-ந் தேதி காலை, 9 மணிக்கு, சாந்தி அபிஷேகமும் நடை பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், செயல் அலுவலர் ரமணி, மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • கடலில் தேங்கி உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • எண்ணெய் கழிவு கலந்த இடத்தில் பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    திருவொற்றியூர்:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கழிவு கலந்தது. இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளிலும் எண்ணெய் படலம் படர்ந்து பொது மக்களுக்கு பல்வேறு உடல் ரீதியான பிரச்சினையும் ஏற்பட்டது. எண்ணூர் முகத்துவார பகுதி மற்றும் கடலில் தேங்கி உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி இன்று காலை எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டார்.

    அவர் எண்ணூர் சிவன் படை குப்பம், கமலாம்பாள் நகர் பகுதிகளில் எண்ணெய் கழிவு கலந்த இடத்தில் பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    • வருகிற 24-ந்தேதி வரை தடை விதித்து கோவில் இணை ஆணையர் ரமணி உத்தர விட்டு உள்ளார்.
    • பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது.

    திருத்தணி:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடந்த 4-ந் தேதி இரவு திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் 12 மீட்டர் நீளத்திற்கு திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் வாகனங்கள் சென்றால் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளதால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மலை கோவிலுக்கு வாகனங்கள் செல்ல வருகிற 24-ந்தேதி வரை தடை விதித்து கோவில் இணை ஆணையர் ரமணி உத்தர விட்டு உள்ளார். இதனால் பக்தர்கள் அனைவரும் சரவண பொய்கை மலை படிக் கட்டுகள் வழியாக மட்டுமே சென்று சாமி தரிசனம் செய்து வருகி றார்கள். மலைப்பாதையில் வாகனங்கள் மேலே செல்லாதவாறு போலீசார் இரும்பு தடுப்பு கள் அமைத்து உள்ளனர். சேதம் அடைந்த மலைப் பாதை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் வேக மாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மலைப்பாதை சீரமைப்பு பணிகளை அமைச்சர் காந்தி, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது.

    ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் தீபா, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன், நகர மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவர் சாமி ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
    • கொசு உற்பத்தி ஆகி சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளன.

    மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

    பல்வேறு கடைகளில் ஓரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சாலையோரம் கொட்டப்படுவதால் அவை அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. காக்களூரில் உள்ள மதுக் கடை அருகே பிளாஸ்டிக் கப் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அகற்றப்படாமல் மாதக்கணக்கில் குவியல், குவியலாக உள்ளன. இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தி ஆகி சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    மேலும் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் சேர்ந்து விடுவதால் கடும் சவாலாக மாறி உள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கடல் நீரின் தன்மையை அறிய தண்ணீரை பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.
    • எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கழிவு பரவியது. கடலில் மிதந்து வரும் இந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி இன்னும் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே இந்த எண்ணெய் கழிவு பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதிகளான அரங்கம்குப்பம், வைர வன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதிகளுக்கும் பரவியது.

    ஏராளமான மீன்களும் இறந்து கரை ஒதுங்கின. இதுபற்றி அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து கடலில் மிதந்து வரும் எண்ணெய் கழிவு குறித்து ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரின் தன்மையை அறிய தண்ணீரை பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.

    இதற்கிடையே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி லிவிங்ஸ்டன் மற்றும் வருவாய்த்துறை, மீன்வளத்துறை அலுவலர்கள் நேரடியாக வந்து பழவேற்காடு கடல் பகுதி, பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது துரை. சந்திரசேகர் எம்.எல்.ஏ., மீஞ்சூர் ஒன்றியக் குழு சேர்மன்ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் பிரபு சங்கர் கூறும்போது, பழவேற்காடு கடல்பகுதியில் ஒதுங்கிய எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது இங்குள்ள மீன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதன் முடிவு வந்த பின்னர் மீனவர்கள் மீன் பிடிப்பது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

    ஆய்வின் போது பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கெத் பல்வந்த், வட்டாட்சியர் மதிவாணன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மிச்சாங் புயல் எச்சரிக்கையில் இருந்தே கடந்த 20 நாட்களுக்கு மேலாக பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    • பீரோவில் இருந்த நகைகளை பார்த்தபோது 25 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளுர் அடுத்த கைவண்டூர் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். அரசு பள்ளி ஆசிரியர். நேற்று காலை வீட்டில் இருந்த அனைவரும் கதவை பூட்டி விட்டு வெளியே சென்றனர். மாலையில் மூத்த மகன் வினோலியன் என்பவர் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிய அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் ரொக்கம், 2 லேப்-டாப் ஆகியவை கொள்ளை போய் இருந்தது.

    சென்னை, வடபழனி, அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆஷா. இவர்களது மகன் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    ஆஷா நேற்று விஷேச நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்வதற்காக குடும்பத்துடன் புறப்பட்டார். அப்போது பீரோவில் இருந்த நகைகளை பார்த்தபோது 25 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன. கடந்த செப்டம்பர் மாதம் ஆஷா வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறவினர்கள் 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிகிறது. அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • கிராமமக்கள் கியாஸ் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.
    • மத்திய அரசின் மானியம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்று கூறியதாக தெரிகிறது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் கியாஸ் நிறுவன ஏஜென்சியில் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றி உள்ள 61 ஊராட்சிகளை சேர்ந்த கிராமமக்கள் கியாஸ் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கியாஸ் நிறுவனத்தினர் ஆதார் விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்காவிட்டால் கேஸ் பதிவு செய்ய முடியாது, மத்திய அரசின் மானியம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்று கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் ஆதார் விபரங்களை பதிவிட நேற்று ஒரே நேரத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் குவிந்தனர். மேலும் யாருடைய பெயரில் கியாஸ் இணைப்பு உள்ளதோ அவர்கள் வரவேண்டும் என்று கூறியதால் முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    மேலும் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதில் முதியோர்,பெண்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இதனால் அப்பகுதியில பரபரப்பு ஏற்பட்டது. ஆதார் இணைப்பு குறித்து கியாஸ் நிறுவனம் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அனல் மின் நிலையத்தில் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
    • தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனல் மின் நிலையங்களை விட இது மிகப் பெரியது.

    தமிழ்நாட்டில் எண்ணூர், நெய்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் தற்போது புதிதாக அனல் மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையம் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

    இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் புதிய அனல் மின் நிலையம் ரூ.6,500 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அனல் மின் நிலையத்தில் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதன் கட்டுமான பணிகள் தற்போது முடிந்து அனல் மின் நிலையம் செயல்பட தயாராக உள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனல் மின் நிலையங்களை விட இது மிகப் பெரியது. இதன் கட்டுமானப் பணியை விரைந்து முடித்து 2019-ம் ஆண்டிலேயே மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டோம். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாகவும் இந்த அனல் மின் நிலைய கட்டுமானப் பணியை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

    தற்போது கொதிகலன் நீர் அழுத்த சோதனை, துணை கொதிகலன் எரியூட்டும் சோதனை, கொதிகலன் நீர் வெளியேற்ற முடியாத பகுதியில் நீர் அழுத்த சோதனை ஆகிய முக்கிய பணிகள் முடிக்கப்பட்டது. தற்போது கட்டுமானப் பணி முடிந்து செயல்பாட்டுக்கு வர தயாராக உள்ளது.

    இந்த அனல் மின் நிலையத்துக்கு ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து நிலக்கரி பெறப்பட உள்ளது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் எண்ணூர், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்கள் வழியாக கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட உள்ளது. தெலுங்கானா மாநிலம் சிங்கனேரி சுரங்கத்தில் இருந்து பெறப்படும் நிலக்கரி, ரெயில் மூலம் எடுத்து வரப்படும். இந்த அனல் மின் நிலையம் அடுத்தமாதம் (ஜனவரி) திறக்கப்பட்டு மின் உற்பத்தி உடனடியாக தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கடல் சிப்பிகளை சேகரிக்க சென்ற பெண்கள் தார் உருண்டைகள் கரை ஒதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த இடங்களில் தண்ணீரை சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையின் போது எண்ணெய் கழிவுகள் கொசஸ்தலை ஆற்று நீரிலும், மழை வெள்ளத்திலும் கலந்ததால் எண்ணூர், மணலி திருவொற்றியூர் பகுதிகளை சேர்ந்த மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணெய் கழிவுகள் எண்ணூரில் இருந்து 26 கி.மீ.தொலைவில் உள்ள பறவைகள் சரணாலயமான பழவேற்காடு ஏரியிலும் பரவியுள்ளன.

    இதனால் பழவேற்காடு ஏரி அருகே உள்ள பல கடற்கரை கிராமங்களில் கடந்த 2 நாட்களாக தார் உருண்டைகள் கரை ஒதுங்கி வருகின்றன. கடற்கரை பகுதியில் கடல் சிப்பிகளை சேகரிக்க சென்ற பெண்கள் தார் உருண்டைகள் கரை ஒதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பழவேற்காடு அருகேயுள்ள கோரைக் குப்பம், வைரவன் குப்பம், அரங்கக் குப்பம், கூனங் குப்பம், பழைய சாத்தங்குப்பம் மற்றும் பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதிகளிலும் தார் உருண்டைகள் காணப்படுகின்றன. இந்த தார் உருண்டைகள் அதிக அளவில் உள்ளன. மேலும் பழவேற்காடு ஏரிப்பகுதியிலும் சில இடங்களில் எண்ணெய் கழிவுகள் மிதந்துள்ளன.

    இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த இடங்களில் தண்ணீரை சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர். மேலும் தார் உருண்டைகளையும் சோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் முடிவு இன்று வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படு கிறது. மேலும் அதிகாரிகளும் இந்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்கள்.

    மேலும் பழவேற்காடு ஏரியில் உள்ள பறவைகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பே வடக்கே சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு சென்றுவிட்டன. மேலும் இந்த பகுதியில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்துள்ளன.

    இதுகுறித்து மீனவர் சங்கத்தினர் கூறுகையில், 'பழவேற்காடு ஏரிக்கு நீர் வருவதை கண்காணித்து எண்ணெய் பரவாமல் தடுக்க வேண்டும். கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வரத்து குறைந்து ஏரி தூர்ந்து வருகிறது. எனவே ஏரியை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

    ×