search icon
என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • பள்ளி வளாகத்தில் சேறும் சகதியுமாக உள்ளது.
    • ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் வடிந்து இருந்தாலும் சேறும்சகதியுமாக காணப்படுகிறது.

    பூந்தமல்லி:

    மிச்சாங் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் தேங்கியது. தற்போது மழை வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது.

    எனினும் நிலையில் பூந்தமல்லியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் செல்ல வழியில்லாததால் தொடர்ந்து தேங்கி நின்றது.

    இதனால் மழைவெள்ள விடுமுறைக்கு பின்னர் மற்ற பள்ளிகள் திறக்கப்பட்டாலும் இந்த பள்ளிகளுக்கு நேற்று விரைவிடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று முதல் அரையாண்டு தேர்வு தொடங்கி உள்ளதால் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளை இன்று திறக்க வளாகத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி வேகமாக நடைபெற்றது. எனினும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மழை நீரை இன்னும் முழுமையாக அகற்றமுடியவில்லை. மேலும் பள்ளி வளாகத்தில் சேறும் சகதியுமாக உள்ளது.

    இதைத்தொடர்ந்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு நுழைவாயிலில் இருந்து வகுப்பறை வரை அவர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக மரப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை பள்ளி திறந்ததும் அந்த பாலத்தில் மாணவிகள் புதிய அனுபவத்துடன் பயந்தபடி வகுப்பறைக்கு நடந்து சென்றனர்.

    இதேபோல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் வடிந்து இருந்தாலும் சேறும்சகதியுமாக காணப்படுகிறது. அதில் மாணவர்கள் சென்றனர்.

    வரும் காலங்களில் மழைகாலத்தில் பள்ளி பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படாத வகையில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

      பூந்தமல்லி:

      சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

      மிச்சாங் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது.

      இதைத்தொடர்ந்து பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மழை இல்லாததால் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது.

      இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம், புழல் உள்பட 5 குடிநீர் ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரத்து 626 மில்லியன் கனஅடி (10 டி.எம்.சி) தண்ணீர் இருப்பு உள்ளது. இது ஏரிகளின் மொத்த கொள்ளளவில் 90.38 சதவீதம் தண்ணீர் இருப்பு ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் 10 ஆயிரத்து 47 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

      பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கன அடியில்3076 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 840 கனஅடி தண்ணீர் வருகிறது. 512 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

      சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 737 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 257 கன அடிதண்ணீர் வருகிறது. 396 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

      புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில் 3054 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 189 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

      செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3259 மி.கனஅடிக்கு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. ஏரிக்கு நீர்வரத்து 485 கனஅடியாக குறைந்தது. 624 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

      கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 54 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

      • வெள்ளம் சூழ்ந்ததால், பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது.
      • மைதா மாவு தூவப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு.

      மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் என நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக சென்னை முழுக்க வெள்ளம் சூழ்ந்ததால், பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது.

      புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து நான்கு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் தூய்மை பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மற்ற பகுதிகளை போன்றே இங்கும் தூய்மை பணிகளுக்கு பிறகு, இறுதியாக ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.

       


      செங்குன்றம் பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதியில் மைதா மாவு மூட்டையின் கவர்கள் இடம்பெற்று இருப்பதை பார்த்து அப்பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்படி தூய்மை பணிகளின் அங்கமாக ப்ளீச்சிங் பவுடர் தூவுவதற்கு மாற்றாக சாலையோரம் மைதா மாவு தூவப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

      இந்த நிலையில், செங்குன்றம் பகுதியில் தூய்மை பணிகளுக்கு மைதா மாவு பயன்படுத்தப்படவில்லை என அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், செங்குன்றம் பகுதியில் தூய்மை பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர், மைதா மாவு பையில் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு கலந்த பவுடரையே சாலையோரம் தூவியதாக தெரிவித்துள்ளார்.

      • பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.
      • உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

      பொன்னேரி:

      மிச்சாங் புயல் காரணமாக கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி அனைத்து விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகி ரமேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தொகையை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 15-ந்தேதி திரளானோர் விவசாய கருவிகளுடன் பேரணியாக சென்று பொன்னேரி சார் ஆட்சியர், வட்டாட்சியரிடம் மனு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

      • நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது.
      • பார் அசோசியேஷன் தலைவர் தேவேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

      பொன்னேரி:

      பொன்னேரியில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதி மன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் திருவள்ளூர், பொன்னேரி தாலுகா சட்ட பணிகள் குழு சார்பில் சிறப்பு மெகா லோக் அதாலத் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நான்காவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கிருஷ்ணசாமி தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர், நீதித்துறை நடுவர் 1 மற்றும் 2 ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

      இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், அசல் வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள் வங்கிக்கடன் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 69 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 2 கோடியே 7 லட்சத்து 82ஆயிரத்து 880 ரூபாய் வசூல் செய்து இழப்பீடு வழங்கபட்டது. இதில் பொன்னேரி பார் அசோசியேஷன் தலைவர் தேவேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

      • சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.
      • மொத்த கொள்ளளவான 3645மில்லியன் கன அடியில், 3271 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

      பூந்தமல்லி:

      மிச்சாங் புயல் காரணமாக கடந்த வாரம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து ஏரியில் இருந்து 8 ஆயிரம் கன அடிவரை தண்ணீர் திறக்கப்பட்டது.

      இந்நிலையில் தற்போது மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 622 கன அடியாக குறைந்தது. ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 22.59 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645மில்லியன் கன அடியில், 3271 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

      சென்னை மக்களின் கோடைகால தண்ணீர் தேவைகளை கருத்தில் கொண்டு, ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 622 அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு மேலும் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

      செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியில் பராமரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

      • சில இடங்களில் தண்ணீர் வடியாமல் வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது.
      • பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

      திருவள்ளூர்:

      மிச்சாங் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தற்போது வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. எனினும் இன்னும் சில இடங்களில் வீடுகளை சூழ்ந்து வெள்ள நீர் வடியாமல் உள்ளது. வெள்ளவேடு அருகே உள்ள புதுச்சத்திரம் அடுத்த கொட்டம்பேடு, வேப்பம்பட்டு, பெருமாள் பட்டு, திருநின்றவூர் உள்ளிட்ட இடங்களில் சில இடங்களில் தண்ணீர் வடியாமல் வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

      இந்தநிலையில் கொட்டம்பேடு பகுதியில் மழை வெள்ள நீரை வெளியேற்ற புதுச்சத்திரம்- திருநின்றவூர் நெடுஞ்சாலையை துண்டித்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் அருகில் உள்ள கூவம் ஆற்றில் கலக்கும் வகையில் வெளியேற்றப்பட்டு உள்ளது.

      இதன் காரணமாக புதுச்சத்திரத்தில் இருந்து கொசவன்பாளையம், கொட்டம்பேடு, திருநின்றவூர், தாமரைப்பாக்கம் கூட்டுசாலை, புதுவாயல் கூட்டு சாலை வழியாக கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு உள்ளன.

      புதுச்சத்திரத்தில் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர். இதேபோல் திருநின்றவூரில் இருந்து புதுச்சத்திரம் வரும் வாகனங்கள் திருவள்ளுவர் வந்து செல்கின்றன. இதனால் வாகனங்கள் சுமார் 20 கி.மீ, துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

      • கோவிலின் அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக நடந்து கோவிலுக்கு சென்றனர்.
      • மலைப் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

      திருவள்ளூர்:

      மிச்சாங் புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. வரலாறு காணாத மழையால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின.

      கடந்த 4-ந்தேதி பலத்த மழை கொட்டியபோது திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

      பின்னர் அதனை தற்காலிகமாக மணல் மூட்டைகளைக் கொண்டு சரி செய்து போக்குவரத்துக்கு அனுமதித்தனர்.

      இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்டு உள்ள அந்த இடத்தில் மீண்டும் அதிக அளவு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலைப்பாதை வழியாக போ க்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளன. மலைப்பாதையை முற்றிலும் ஆய்வு செய்து மண்சரிவை சரிசெய்த பின்னரே போக்குவரத்துக்கு அனுமதிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

      இதைத்தொடர்ந்து மலைக் கோவிலுக்கு செல்லும் பஸ், லாரி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நுழைவுவாயில் பகுதியிலேயே தடுப்புகள் அமைத்து நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பகுதியில் இருந்து பஸ், கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனத்தில் வந்த பக்தர்கள் வாகனத்தில் மலை கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அவர்கள் கோவிலின் அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக நடந்து கோவிலுக்கு சென்றனர். இதன்காரணமாக முதியோர் மற்றும் குழந்தைகள் அவதி அடைந்தனர். மலைப் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

      • சாலை மிச்சாங் புயலினால் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்பட்டது.
      • கவுன்சிலர் சுமித்ரா குமார் போக்குவரத்திற்கு தற்காலிகமாக சீர் செய்தார்.

      பொன்னேரி:

      பொன்னேரி அடுத்த பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சி பழவேற்காடு காட்டுப்பள்ளி ஒன்றிய சாலை மிச்சாங் புயலினால் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்பட்டது.

      இதனை அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு சமரசம் பேசி சாலையில் மணல் கொட்டி கவுன்சிலர் சுமித்ரா குமார் போக்குவரத்திற்கு தற்காலிகமாக சீர் செய்தார்.

      இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது

      • பொன்னேரி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆவடி உள்ளிட்ட தாலுகாக்கள் மற்றும் நகர்புற பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
      • மாவட்டம் முழுவதும் 150 மோட்டார்கள் வைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

      திருவள்ளூர்:

      மிச்சாங் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆவடி, திருநின்றவூர், பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு பகுதியில் பலத்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த பகுதிகளில் வெள்ளநீர் வெளியேற்றப் பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

      இந்தநிலையில் திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே உள்ள பெரியார் நகர், சுதேசி நகர் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் இன்னும் சூழ்ந்து உள்ளது. அருகில் உள்ள ஈசா ஏரி நிரம்பி தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் வந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் இன்னும வெள்ள நீர் வடியவில்லை. இடுப்பு அளவுக்கு மேல் உள்ள தண்ணீரில் அப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள். குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியே வரமுடியாமலும் அத்தியா வசிய பொருட்கள் வாங்க முடியாமலும் தவிக்கும் நிலை உள்ளது. கடந்த ஒரு வாரமாக அவர்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை நீடித்து வருகிறது.

      இந்தநிலையில் அந்த பகுதியில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். குடியிருப்பு பகுதியில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் கலெக்டர் பிரபுசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

      திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆவடி உள்ளிட்ட தாலுகாக்கள் மற்றும் நகர்புற பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

      மாவட்டத்தில் 50 ஆயிரம் ஹெக்டேர் சம்பா நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. பழவேற்காடு மீனவர்களின் படகுகள் மீன்பிடி உபகரணங்கள் கணக்கெடுக்கும் பணி முடிந்துள்ளது. கால்நடை உயிரிழப்பு மற்றும் 3 மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.

      மழையினால் பூண்டி, புழல் பகுதிகளிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மற்றும் ஆரணி ஆற்று உபரி நீர் ஆகியவை தேங்கி வடியாமல் இருந்த இடங்களில் தற்போது தண்ணீர் வடிந்து உள்ளது.

      மாவட்டம் முழுவதும் 172 முகாம்களில் 15 ஆயிரம் பேரை குறிப்பாக அதிகள வில் இருளர் இன மக்களை தங்க வைத்து தற்போது வரை உணவளித்து வருகி றோம். இதுவரை அதிகம் பாதித்த பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

      திருவள்ளூர் மாவட்டத்தில் 99 சதவீதம் இயல்புநிலை திரும்பி உள்ளது. மாவட்டத்தில் காக்களூர், திருநின்றவூர் அருகே பெரியார் நகர் சுதேசிநகர் பூந்தமல்லி உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

      மாவட்டம் முழுவதும் 150 மோட்டார்கள் வைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்போது வரை தண்ணீர் வெளியேறாமல் இருப்பதற்கான வடிகால் இல்லாமல் கட்டப்பட்ட குடியிருப்புகள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட குடியிருப்புகளால் இந்தப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

      மேலும் தேவையான இடங்களில் போர்க்கால அடிப்படையிலும் மற்ற இடங்களில் அரசின் விதி முறைகளை பின்பற்றியும் ஆக்கிரமிப்புகள் எடுக்கப்படும். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு ளை எடுத்தால் மட்டுமே நீர் வடியும் என்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளை தவிர 100 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. ஆரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கினால் வஞ்சிவாக்கம் பகுதியில் கரை உடைப்பு ஏற்படுவதால் அப்பகுதியில் நிரந்தர தீர்வு காண திட்ட அறிக்கை தயார் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

      விரைவில் அரசுக்கு சமர்ப்பித்து நிரந்தர தீர்விற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

      இவ்வாறு கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.

      • சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் திடீரென மோதியது.
      • தூக்கி வீசப்பட்ட கமலேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து போனார்.

       திருத்தணி:

      திருத்தணி எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் லோகநாதன். இவரது மகன் கமலேஷ் (வயது19). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நண்பரான திருத்தணியைச் சேர்ந்த யூசுப் அலி என்பவருடன் மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் கனகம்மாசத்திரம் சென்றனர். பின்னர் அவர்கள் திருத்தணி நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

      சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் திடீரென மோதியது.

      இதில் தூக்கி வீசப்பட்ட கமலேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து போனார். யூசுப் அலிக்கு படுகாயம் ஏற்பட்டது. அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருத்தணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • கோட்டைக் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சிஅம்மன் நகரில் மழைநீர் தேங்கியுள்ளதால் படகில் சென்று வருகின்றனர்.
      • இடையன்குளம் சாலை முழுவதும் மணலால் மூடி உள்ளன. அப்பகுதியில் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை.

      பொன்னேரி:

      மிச்சாங் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

      திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழையால் ஏரி, குளங்கள் நிரம்பியும், ஆற்று வெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீரும் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். தற்போது வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.

      எனினும் திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர், பழவேற்காடு, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான ஒருசில இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 3 இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

      பழவேற்காடு அடுத்த ஆண்டார் மடம் கிராமத்தில் ஆரணி ஆற்று வெள்ளம் காரணமாக தரைப் பாலம், சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

      குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அவர்கள் பழவேற்காடு பகுதிக்கு படகுகளில் சென்று வருகின்றன. கடந்த ஒரு வாரமாக அவர்களது படகு பயணம் நீடித்து வருகிறது. ஆரணி ஆற்றில் வெள்ளம் இன்னும் குறையவில்லை. தண்ணீர் குறைந்த பின்னரே சாலைகள் சீரமைக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பும் என்று தெரிகிறது. ஒரு வாரமாக தங்களை அரசு அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை, நிவாரண உதவிகள் எதுவும் கிடைக்க வில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்

      இதேபோல் கோட்டைக் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சிஅம்மன் நகரில் மழைநீர் தேங்கியுள்ளதால் படகில் சென்று வருகின்றனர்.

      மீஞ்சூர் அடுத்த கேசவ புரம், பகுதியில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது. அதனை ராட்சத மின்மோட்டார் மூலம் வெளியேற்றி வருகிறார்கள். மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம், பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்தும் மழைநீர் வடியாமல் இன்னும் தேங்கி நிற்கிறது.

      பழவேற்காடு அடுத்த தாங்கள் பெரும் புலம் ஊராட் சிக்கு உட்பட்ட தாங்கல், பெரும் புலம், இடையன்குளம் சாலை முழுவதும் மணலால் மூடி உள்ளன. அப்பகுதியில் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தவித்து வருகின்றனர். போக்குவரத்து தடைப்பட்டதால் டிராக்டரில் உணவு மற்றும் குடிநீர், அத்தியாவசிய பொருட்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் தலைமையில் வழங்கப்பட்டு வருகின்றன. பழவேற்காடு அண்ணா மலைச்சேரி பகுதியில் 500 க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்துள்ளன. மீன்வளத்துறை சார்பில் கணக்கெ டுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

      ×