search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சேலத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை: வீடுகளில் வெள்ளம்
    X

    சேலத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை: வீடுகளில் வெள்ளம்

    • பனிப்பொழிவுடன் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி.
    • சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாகவும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சுற்றுலா தலமான ஏற்காட்டில் மாலை 4 மணிக்கு சாரல் மழையாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் திடீரென பலத்த மழையாக கொட்டியது.

    தொடர்ந்து இடி-மின்னலுடன் விடிய, விடிய பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் கூட்டமின்றி நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

    பலத்த மழை காரணமாக ஏற்காடு நகரம், நாகலூர், செம்மனத்தம், வெள்ளக்கடை, மஞ்சக்குட்டை, வாழவந்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    மேலும் கடுங்குளிரும் நிலவி வருகிறது. பனிப்பொழிவுடன் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

    இதே போல் சேலம் மாநகர பகுதியில் இரவு 9 மணிக்கு இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது.

    மேலும் தாழ்வான இடங்களில் மழை தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. அம்மாப்பேட்டை மிலிட்டரி ரோடு சாலையில் மண், கற்கள் குவியலாக காட்சி அளிக்கிறது.


    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக சேலம் மாநகரில் 10 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. ஒரே நாள் இரவில் இவ்வளவு மழை பெய்ததால் சூரமங்கலம் முல்லை நகர் பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளில் மழை தண்ணீர் புகுந்தது.

    பொதுமக்கள் விடிய, விடிய, வீட்டில் புகுந்த மழை தண்ணீரை அப்புறப்படுத்தினர். இதே போல் பிரபாத் சிக்னல் பகுதியிலும் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் இரவு முழுவதும் பொதுமக்கள் தண்ணீரை அகற்றினர்.

    புதிய பஸ் நிலையத்தையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. இடுப்பளவுக்கு தண்ணீர் இருந்ததால் தண்ணீர் இருந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதே போல் வெண்ணங்கொடி முனிப்பன் கோவிலையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. மழையின் காரணமாக குளிரும் நிலவியது.

    மேட்டூர் மற்றும் நங்கவள்ளி, மேச்சேரி, கொளத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டியது.


    இதன் காரணமாக கிராமப்புறங்களில் வயல் வெளிகளில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நின்றது. இதே போல் ஆத்தூர், கெங்கவல்லி, டேனிஷ் பேட்டை, சங்ககிரி, ஓமலூர் என மாவட்டம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    சேலம் மாநகரம் - 108.5, ஏற்காடு - 63.3, வாழப்பாடி - 4, ஆனைமடுவு - 80, ஆத்தூர் - 43, கெங்கவல்லி - 5, தம்மம்பட்டி - 18, ஏத்தாப்பூர் - 19, கரியக்கோவில் - 30, வீரகனூர் - 24, சங்ககிரி - 7, எடப்பாடி - 6, மேட்டூர் - 7.2, ஓமலூர் - 14, டேனீஷ்பேட்டை - 47, என மொத்தம் மாவட்டம் முழுவதும் ஒரே நாள் இரவில் 478 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    நாமக்கல்

    இதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் இரவு 9 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது. ராசிபுரத்தில் இரவு 9 மணி அளவில் இடி மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. அதிக பட்சமாக ராசிபுரத்தில் 12 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக வயல்வெளிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதேபோல் மங்களபுரம், குமார

    பாளையம், கொல்லிமலை ஆகிய இடங்களிலும் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ராசிபுரம் - 122, மங்களபுரம் - 50.20, எருமப்பட்டி - 40, புதுசத்திரம் - 26, நாமக்கல் - 21, கலெக்டர் அலுவலகம் - 19, குமாரபாளையம் - 9.60, சேந்தமங்கலம் - 9, கொல்லிமலை - 6 என மாவட்டம் முழுவதும் 331.80 மில்லி மீட்டர் மழை கொட்டியது.

    Next Story
    ×