search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை - 4 நாளில் 65 ஆயிரம் பேர் குவிந்தனர்
    X

    ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை - 4 நாளில் 65 ஆயிரம் பேர் குவிந்தனர்

    • கண்ணாடி மாளிகையில் வித, விதமான பூக்கள் அலங்காரமாக வைக்கப்பட்டு உள்ளன.
    • கமர்சியல், சேரிங்கிராஸ் சாலைகளில் சுற்றுலா வாகனங்களின் வரத்து அதிகரிப்பு

    ஊட்டி,

    தமிழகத்தில் 4 நாட்கள் தொடர்விடுமுறையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் நிலவும் 2-வது சீசன் மற்றும் குளுகுளு காலநிலையை அனுபவிப்பதற்காக நீலகிரி மாவட்டத்துக்கு திரண்டு வந்திருந்தனர். மேலும் வெளிமாநிலங்களில் இருந்தும் எண்ணற்றோர் வாகனங்களில் ஊட்டிக்கு படையெடுத்தனர்.

    இதன்காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து காணப்படுகிறது. அங்கு உள்ள விடுதிகளில் தங்குவதற்கு போதிய அறைகள் கிடைக்கவில்லை. மேலும் அதிக கட்டணமும் வசூலிக்கப்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நீலகிரியில் தங்கியிருந்து ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடும்ப த்துடன் சென்று அங்கு உள்ள இயற்கை காட்சிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் பச்சைப்பசேல் மலைத்தொ டர்களை கண்டுகளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனை முன்னிட்டு அங்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு இருந்தன. மேலும் கண்ணாடி மாளிகையில் வித, விதமான பூக்கள் அலங்காரமாக வைக்கப்பட்டு உள்ளன.

    அலங்கார மாடத்திலும் பல்வேறு தினுசுகளில் வித, விதமான தொட்டிகளில் பூச்செடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. மேலும் தாவரவியல் பூங்காவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு உள் ளன. அவை தற்போது பூத்து குலுங்கி வருகின்றன.

    எனவே ஊட்டி தாவர வியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்கள் பெரிய புல்வெளி மைதானங்களில் இருந்து ஊட்டி பூங்காவின் பேரழகை கண்டு மகிழ்ந்து பொழுது போக்கி வருகின்றனர்.

    ஊட்டியில் தாவரவியல் பூங்கா மட்டுமின்றி ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சி கரம் ஆகிய பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளை அதிகளவு பார்க்க முடிந்தது. மேலும் ஊட்டியில் உள்ள முக்கிய கடைவீதிகள் மற்றும் போக்குவரத்து சாலைகளில் பொது மக்களின் கூட்டம் அலைமோதியது.

    இதுதவிர ஊட்டியில் கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் சாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா வாகனங்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது. எனவே அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன்கார ணமாக கமர்சியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் அனைத்து சாலைளும் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டன.

    நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்தை சீர்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்கு வரத்தை சரிப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வரத்து குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்விடுமுறை காலம் என்பதால் கடந்த 21-ந்தேதி முதல் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    அன்றைய நாளில் மட்டும் 10,539 பேர் தாவரவியல் பூங்காவுக்கு வந்திருந்தனர். இதற்கு அடுத்த நாள் 16,982 பேரும், 23-ந்தேதி ஆயுதபூஜை அன்று 20,957 பேரும் வந்திருந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 4 நாட்களில் மட்டும் சுமார் 65 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளனர் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×