என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் வரத்து
- திருச்சி முக்கொம்பு மேலணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது
- காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்ததோடு, அவர்களுக்கு பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைத்து தங்கவும் அமைச்சர், கலெக்டர் ஏற்பாடுகள் செய்தனர்
திருச்சி:
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பியதையடுத்து உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை மீண்டும் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் முழுவதுமாக திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதிகபட்சமாக 2 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடியது.
இருகரைகளையும் தொட்டுச்சென்ற காவிரியுடன் மாயனூரில் பவானி, அமராவதி அணை தண்ணீரும் சேர்ந்து திருச்சியில் உள்ள முக்கொம்பு மேலணைக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் வந்தது.
இதையடுத்து அங்கிருந்து கொள்ளிடத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியும், மீதமுள்ள தண்ணீர் காவிரி ஆற்றிலும் திறக்கப்பட்டது. இதனை அமைச்சர் கே.என்.நேரு, கண்காணிப்பு அலுவலர், மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். அணையின் உறுதித்தன்மை குறித்தும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்ததோடு, அவர்களுக்கு பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைத்து தங்கவும் ஏற்பாடுகள் செய்தனர்.
காவிரியில் வெள்ளம் குறையும் வரை அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அமைச்சர் கே.என்.நேரு திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காவிரியில் தண்ணீர் வரத்து சற்றே குறையத்தொடங்கி உள்ளது. அதாவது இன்று காலை 8 மணி நிலவரப்படி 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அதில் காவிரியில 50 ஆயிரம் கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 31 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டது.
காவிரியாற்றில் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்லும் அழகை காண விடுமுறை தினமான இன்று காலை முதல் திருச்சி காவிரி பாலத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது குடும்பத்தினருடன் குவிந்து வருகிறார்கள்.
அங்கு பாதுகாப்புக்காக போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதேபோல் கொள்ளிடம் பழைய இரும்பு பாலத்தின் தூண்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. 20-வது தூண் பகுதி சிறிது சிறிதாக தண்ணீருக்குள் மூழ்கி வருகிறது.
கடந்த சில தினங்களாக காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே செல்லும் கல்லணை சாலையில் உத்தமர்சீலி பகுதியில் தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கியது. மேலும் 300 ஏக்கருக்கும் மேல் வாழையும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
இதனால் உத்தமர்சீலி பகுதியில் அந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலையை கடக்க கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் அந்த தரைப்பாலத்தை இருசக்கர வாகனம் மற்றும் நடந்து சென்று கடப்பதும், செல்போனில் புகைப்படம் எடுப்பதுமாக இருந்து வருகிறார்கள்.
இன்னும் ஒரு சில தினங்களில் படிப்படியாக வெள்ளம் குறையத் தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தா.பழூர் அருகே அணைக்குடி கிராமம் கொள்ளிடத்தை ஒட்டி அமைந்துள்ளது.
நேற்றைய தண்ணீர் திறப்பின் அடிப்படையில் கொள்ளிடத்தில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் சென்றதால் அந்த கிராமத்தை நீர் சூழ்ந்தது. சுமார் 70 குடும்பங்கள் வீட்டை காலி செய்து வெளியேறினர். இந்த கிராமத்தில் முகாம் இல்லாத காரணத்தினால் எங்கு செல்வது என தெரியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
தங்களுக்கு நிரந்தர தீர்வாக கொள்ளிடத்தின் கரையை உயர்த்தி பலப்படுத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்