search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயாருக்கு இன்று ஜேஷ்டாபிஷேகம் - தங்கம், வெள்ளி குடங்களுடன் ஊர்வலம்
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயாருக்கு இன்று ஜேஷ்டாபிஷேகம் - தங்கம், வெள்ளி குடங்களுடன் ஊர்வலம்

    • காவிரி ஆற்றில் இருந்து 1 தங்கக்குடம் மற்றும் 28 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது.
    • மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் 2 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 11-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று தாயார் சன்னதியில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

    ஜேஷ்டாபிஷேகத்தை யொட்டி இன்று காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு சென்றனர். அங்கு கோவில் வழக்கப்படி கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டது.

    பின்னர் காவிரி ஆற்றில் இருந்து 1 தங்கக்குடம் மற்றும் 28 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 7.30 மணிக்கு தங்கக்குடத்தில் உள்ள புனிதநீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்தும் 28 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனிதநீர் அம்மாமண்டபம் ரோடு, ராஜகோபுரம் வழியாக ஊர்வலமாக தாயார் சன்னதிக்கு காலை 9.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.

    பின்னர் தாயார் சன்னதியில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரெங்க நாச்சியார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன. பின்னர் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

    இதையடுத்து பாரம்பரிய முறையில் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படும் தைலம் ஸ்ரீதேவி, பூதேவி மீது பூசப்பட்டது. இரவு 8.30 மணிக்கு தாயாருக்கு மங்கள ஆரத்தி நடைபெறுகிறது. ஜேஷ்டாபிஷேகத்தை யொட்டி தாயார் சன்னதியில் இன்று முழுவதும் மூலவர் சேவை இல்லை. ஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    நாளை (23-ந்தேதி) தாயார் சன்னதியில் திருப்பாவடை எனப்படும் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன்படி நாளை காலை 7 மணிக்கு தாயார் சன்னதியின் மூலஸ்தானத்திற்கு எதிரே தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெரியளவில் சாதம் குவிக்கப்பட்டு அதில் நெய், பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்படும். பின்னர் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்படும். மதியம் 1 மணியளவில் தாயாருக்கு மங்கள ஆரத்தி நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு மேல் மூலவர் சேவை உண்டு.

    Next Story
    ×