search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை-மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
    X

    சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை-மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

    • திருச்சியில் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • கடந்த 9 மாதங்களில் மட்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 12 ஆயிரத்து 890 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    திருச்சி:

    திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்றதிலிருந்து சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகிறார். அந்த வகையில், கடந்த 9 மாதங்களில் மட்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 12 ஆயிரத்து 890 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடும் ரவுடிகள், குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தவர்களை கண்டறிந்து கடந்த 2020-ம் ஆண்டு 40 பேர் மீதும், 2021-ல் 85 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதே நேரம் இந்த 9 மாதங்களில் மட்டும் 142 பேர் குண்டர் காவல் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்த 170 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 651 நபர்கள் மீதும், லாட்டரி சீட்டு விற்பனை செய்த 90 பேர் மீதும், சூதாட்டத்தில் ஈடுபட்ட 115 பேர் மீதும், சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 1,124 பேர் மீதும் மற்றும் பொது இடங்களில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக 9,857 பேர் மீதும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி மாநகரில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் குற்ற சம்பவங்கள் பெருமளவில் குறைந்துள்ளது. திருச்சி மாநகரத்தில் சட்டம், ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்ட நடத்தைக்காரர்கள் வழிப்பறி குற்ற சம்பவங்கள் மற்றும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பு கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×