என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மறுநடவு மூலம் மீண்டும் உயிர் பெற்ற மரங்கள்
- திருச்சி கலெக்டரின் அதீத முயற்சி
- இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு
திருச்சி,
இயற்கையை அழித்தல் என்பது பல்வேறு இன்னல்களுக்கு நம்மையும், வருங்கால சந்ததியினரையும் அழைத்து செல்லும் என்பதில் ஐயமில்லை. அதிலும் நிழல் தரும் மரங்கள் அழிந்த வருவதால் மழை வளம் குறைந்துபோனதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அதனை தடுக்க இயற்கை ஆர்வலர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
நாகரீகம் வளர்ந்து மேலோங்கிவிட்ட நிலையில் வீட்டை பெயர்த்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது போல், மரங்களும் ஓரிடத்தில் இருந்து தூருடன் எடுக்கப்பட்டு மற்றொரு இடத்தில் நடவு செய்யும் நிலை வந்துவிட்டது. மரங்களின் மறுநடவு முக்கியத்துவத்தை தமிழகம் மட்டுமின்றி மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களும் பறைசாற்றி வருகிறது. அதனை அங்குள்ள மக்களும் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர்.
மக்கள் தொகை அதிகரிப்பு, நெருக்கடி போன்றவற்றை காரணமாக கூறினாலும் மரங்களை அழிப்பதால் ஏற்படும் காலநிலை மாற்றம், நிலையற்ற சீதோஷ்ண நிலை ஆகியவற்றால் மக்கள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. எனவே எப்பேற்பட்ட நிலை வந்தாலும் மரங்கள் நடுதலை ஊக்குவிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்துவதோடு, அரசு விழாக்களில் மரக்கன்றுகளை நட்டு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.அந்த வகையில், மரங்களின் மறுநடவு முறை மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காகவும், விரிவாக்கம் செய்யும் பொருட்டும் கலெக்டர் அலுவலக வளாத்தில் அடர்ந்து, படர்ந்து வளர்ந்திருந்த வேம்பு, புளி, புங்கை மரங்கள் ஏராளமானவை அதிரடியாக வெட்டப்பட்டன. இதைப்பார்த்த இயற்கை ஆர்வலர்கள் முதலில் கண்ணீர் வடித்தனர்.அதன்பிறகே வெட்டப்பட்ட அந்த மரங்கள் மீண்டும் மறுவாழ்வு பெறப்போவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெட்டப்படும் மரங்கள் மறுநடவு மூலம் மீண்டும் அதனை பயணத்தை தொடர்வதை எண்ணி பெருமை கொண்டனர். வெட்டப்பட்ட மரங்களுக்கு உயிரூட்டுவதற்காக கலெக்டர் மா.பிரதீப் குமார் உத்தரவின்பேரில் குமுளூர் வேளாண் பல்கலை பேராசிரியர் விஜய் தலைமையிலான குழுவினர் மரங்களை மறுநடவு செய்து அசத்தியுள்ளனர்.மரங்களை மறுநடவு செய்வதற்கு ஏதுவாக மரத்தின் தேவையற்ற கிளைகள் அகற்றப்பட்டன. எந்திரங்கள் உதவியுடன், வேர்களை சீர் செய்து, 6 அடி அகலத்தில், 5 அடி பள்ளம் தோண்டி மரங்களை, அருகிலுள்ள அலுவலக வளாகத்தில் நட்டனர். மேலும் வேளாண் கல்லூரி பேராசிரியர் அறிவுறுத்தல்படி, ஒரு மாத காலத்திற்கு நீர் பாய்ச்சி, தொழு உரமிட்டு பராமரித்தால் மீண்டும் மரம் நன்கு துளிர்த்து வளரும் என விளக்கம் அளிக்கப்பட்டது.மரங்களை மறுநடவு செய்வதற்கு கூடுதல் செலவினமாகும் என்பதால் பலரும் அதற்கு முன் வருவதில்லை. ஆனால் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமாரின் அதீத முயற்சியால் இன்று வெட்டப்பட்ட பல்வேறு வகையான மரங்கள் மறுவாழ்வு பெற்றுள்ளன. இதற்காக இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கலெக்டருக்கு பாராட்டையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்