search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம்
    X

    திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம்

    • திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்
    • தற்போது அந்த தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்ற காரணத்தினால் மலைக்கோட்டை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது

    திருச்சி

    திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடந்தது. துணை மேயர் திவ்யா, மாநகராட்சி செயற்பொறியாளர் சிவபாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் சுரேஷ் பேசும்போது, மாவடி குளத்தை உடனடியாக தூர்வார வேண்டும். சாலைகளில் ஆங்காங்கே கேபிள் ஒயர்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

    இதனால் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே உடனே இதை சரி செய்ய வேண்டும். பாதாள சாக்கடை பணிகளை முற்றிலுமாக முடித்து விட்டு சாலைகளை போட வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் பன்னீர்செல்வம் பேசும்போது, சத்திரம் பகுதியில் பழைய கரூர் ரோட்டில் அடிக்கடி பாதாள சாக்கடை பழைய குழாய்கள் வெடித்து விடுகின்றன. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

    தி.மு.க. கவுன்சிலர் ராமதாஸ் பேசும்போது, கருமண்டபம் பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 4, 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். லாரி தண்ணீரும் சீராக விநியோகம் செய்யப்படவில்லை என செல்கிறார்கள் என்றார்.

    19-வது வார்டு திமுக கவுன்சிலர் சாதிக் பாட்ஷா பேசும் போது, எங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு மரக்கடை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

    தற்போது அந்த தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்ற காரணத்தினால் மலைக்கோட்டை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. இதனால் தேவையான தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள் எனவே தண்ணீர் திறப்பு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றார். இவ்வாறு பல்வேறு கவுன்சிலர்களும் தங்கள் வார்டுக்கு உட்பட்ட குறைகளை சுட்டிக்காட்டி பேசினர்.

    பின்னர் மேயர் அன்பழகன் பேசும்போது, பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட முக்கிய சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து சாலைகளும் போடப்படும்.

    கருமண்டபம் பகுதியில் சில வார்டுகளை சேர்த்து தண்ணீர் சப்ளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.

    Next Story
    ×