search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தமிழகத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை
    X

    தமிழகத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை

    • கண்காணிப்பு பணி தீவிரம்
    • பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

    திருச்சி,

    தமிழ்நாடு பறவையியல் கழகத்தினர் வெளிநாட்டுப்பறவைகள் தமிழகத்திற்கு இடம் பெயர்ந்துள்ளதை கண்டு பிடித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தை அடுத்துள்ள தலைவாசலில் உள்ள மணிவிழுந்தான் ஏரிக்கு இரண்டு புதிய வெளிநாட்டுப் பறவைகள் வந்திருப்பது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்சென் ஃபவுண்டேஷன் மற்றும் மணித்துளி சுற்றுச்சூழல் மேம்பாட்டு இயக்கத்தின் உதவியோடு சேலம் பறவையியல் கழகத்தைச் சேர்ந்த ஏஞ்சலின் மனோ, காசி விஸ்வநாதன், ராகுல் சிங் மற்றும் கணேஷ்வர் ஆகியோர் பறவைகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது வெளிநாட்டு கரையோரப் பறவைகளான சதுப்பு மண்கொத்தி மற்றும் கொசு உள்ளான் பறவையைக் கண்டுபிடித்துள்ளனர்.இது குறித்து சேலம் பறவையியல் கழக இயக்குநர் கணேஷ்வர் கூறியதாவது: கொசு உள்ளான் பறவை மண்கொத்தியை விட சிறியதாக இருக்கும். வடதுருவப் பகுதிகளில் உள்ள சைபீரிய சமவெளிகளில் இனப்பெருக்கம் செய்யும். சதுப்பு மண்கொத்தி கிழக்கு ஐரோப்பா முதல் வடகிழக்கு சீனா வரையிலான பகுதிகளில் உள்ள ஊசியிலைக்காடுகளை ஒட்டியுள்ள சதுப்பு நிலங்களில் வசிக்கும். அங்கே குளிர் காலம் துவங்கும் போது அந்தப் பறவைகள் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளை நோக்கி வலசை வருகின்றன. மீண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பிச்செல்லும். அப்படி செல்லும் வழியில் வெகு சில இடங்களில் மட்டும் தரையிறங்கி சில நாட்கள் புழுக்கள், பூச்சிகளை சாப்பிட்டு, உடலில் கொழுப்புச்சத்தை அதிகரித்துக் கொண்டு மீண்டும் பறக்கத் துவங்கும். இது போன்ற இடங்களுக்கு ஆங்கிலத்தில் "ஸ்டாப் ஓவர் சைட்" என்று கூறுவார்கள். அப்படியான ஒரு அதி முக்கியத்துவம் வாய்ந்த இடம் தான் மணிவிழுந்தான் ஏரி. இதற்குக் காரணங்களுள் ஒன்று மணிவிழுந்தான் ஏரியில் தண்ணீர் குறையும் போது வெளிப்படும் தாழ்வான சேற்றுப் பகுதிகளாகும். ஒரு ஏரியின் சூழலுக்கு கரையோரப் பகுதிகள் அவசியமானது. இது போன்ற இடங்களை விரும்பி வெளிநாட்டுப் பறவைகள் அதிக அளவில் வரும். இந்த இரண்டு பறவைகளின் வருகையும் மணிவிழுந்தான் ஏரியின் சூழலியலின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

    ---

    Next Story
    ×