என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சி என்.ஐ.டி. கல்லூரியில் மாணவ-மாணவிகள் போராட்டம்: வார்டன்கள் மீது குற்றச்சாட்டு
- கல்லூரி விடுதி முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இன்று காலை 2-வது நாளாக போராட்டம் நடந்தது.
திருவெறும்பூர்:
திருச்சி அருகே உள்ள துவாக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.ஐ.டி. கல்லூரி அமைந்துள்ளது. இது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர்.
கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் தற்போது பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நேற்று மதியம் மாணவிகள் விடுதியில் வை-பை வசதி ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி கதிரேசன் விடுதிக்குள் சென்றார்.
அப்போது தன்னந்தனியாக விடுதி அறையில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் அவர் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடி வந்தார். மேலும் தனக்கு நேர்ந்த அநீதியை வாட்ஸ் அப்பில் பதிவிட்டார்.
இது விடுதியில் தங்கி பிடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேகமாக பரவியது. இதற்கிடையே விடுதி பெண் வார்டனிடம் பாதிக்கப்பட்ட மாணவி முறையிட்டார்.
அப்போது அவர், ஆடைகள் சரியாக அணியாத காரணத்தினால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என அவரை கண்டித்ததாக தெரிகிறது.
இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவ-மாணவிகள் கல்லூரி விடுதி முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் அகிலா மாணவ-மாணவிகளிடம் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
அதைத் தொடர்ந்து நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது. இன்று காலை 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட விடுதி மாணவ-மாணவிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி அறிந்த திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாஷ் இன்று காலை அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மாணவர்கள் சமரசமாகவில்லை.
பாதிக்கப்பட்ட மாணவியை திட்டிய வார்டன் உள்ளிட்ட 3 பெண் வார்டன்களும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதைத்தொடர்ந்து இன்று காலை ஒரு பெண் வார்டன் பாதிக்கப்பட்ட மாணவியிடம் மன்னிப்பு கேட்டார். மற்ற 2 பேரும் வரவில்லை.
இதனால் மாணவர்கள் மேலும் 2 பெண் வார்டன்கள் மன்னிப்பு கேட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என கூறினர். இதையடுத்து உதவி கலெக்டர் அருள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறும்போது, மாணவிகள் தங்கி இருக்கும் விடுதிக்குள் ஒரு ஒப்பந்த தொழிலாளியை எப்படி தன்னந்தனியாக கல்லூரி நிர்வாகம் அனுப்பி வைத்தது?. புகார் அளிக்க சென்ற மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் முதலில் எந்த உதவியும் செய்யப்படவில்லை.
மாறாக அந்த மாணவி மீது வார்டன் அபாண்டமாக குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் காவல்துறையிலும் கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்க முயற்சிக்கவில்லை.
பாதிக்கப்பட்ட மாணவி தனது தாய்-தந்தையிடம் பேசி அதன் பின்னரே மாணவர்கள் முன்னெடுத்து சென்று போலீசில் புகார் செய்துள்ளனர்.
மாணவிகளின் பாதுகாப்பை கல்லூரி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர். இதைத் தொடர்ந்து திருச்சி எஸ்.பி.வருண் குமார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து மற்ற 2 வார்டன்களும் அங்கு வந்து மாணவ-மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டனர். இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டம் காரணமாக கல்லூரி வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. பாதுகாப்புக்கு போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்