search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் கோட்டை குளத்தில் தூர்வாரப்படாததால் சுகாதார சீர்கேடு-விஷ வாயு தாக்கும் அபாயம்
    X

    தூர்வாரப்படாமல் உள்ள கோட்டைக்குளம்.

    திண்டுக்கல் கோட்டை குளத்தில் தூர்வாரப்படாததால் சுகாதார சீர்கேடு-விஷ வாயு தாக்கும் அபாயம்

    • கோவில்களில் திருவிழா காலங்களில் எடுக்கப்படும் முளைப்பாரி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வந்தது.
    • தூர்வாரப்படாததால் தொட்டியில் விஷவாயு வரத்தொடங்கி, துர்நாற்றம் வீசியும் வருகிறது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பொத்தியபடி செல்லும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மலைக்கோ ட்டை அடிவாரத்தில் கோட்டை குளம் உள்ளது. இந்த குளத்தில் திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் திருவிழா காலங்களில் எடுக்கப்படும் முளைப்பாரி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வந்தது.

    இதனை அடுத்து குளத்தை பராமரிக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரி, இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டது. மேலும் சிலைகள் மற்றும் முளைப்பாரி கரைக்க தடை விதித்து உத்தரவிட்டது. சிலைகள் கரைக்க கோட்டை குளம் முன்பு 2015ல் பெரிய தொட்டி அமைக்கப்பட்டது. இதில் சிலைகள், முளைப்பாரி கரைக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்லில் கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாப்பட்டது. இதற்காக 65 சிலைகள் இந்து அமைப்பு சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சிலைகள் கோட்டை குளத்தில் பிரத்தியேகமாக கட்டப்பட்ட தொட்டியில் கரைக்கப்பட்டது. மேலும் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் மற்றும் கோவில் திருவிழாக்களில் எடுக்கப்பட்ட முளைப்பாரி ஆகியவையும் கரைக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது தூர்வாரப்படாமல் உள்ள இந்த தொட்டியினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்த தொட்டியில் விஷவாயு வரத்தொடங்கி, துர்நாற்றம் வீசியும் வருகிறது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பொத்தியபடி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அருகே பத்ரகாளி அம்மன், அய்யப்பன் கோவில், ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்த தொட்டியை உடனடியாக தூர்வார வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொட்டியில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×