search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை குறிச்சி குளக்கரையில் எரியாமல் கிடக்கும் தெருவிளக்குகள்
    X

    கோவை குறிச்சி குளக்கரையில் எரியாமல் கிடக்கும் தெருவிளக்குகள்

    • தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மாலை நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்று அங்கு நேரத்தை கழிக்க கூடிய அளவில் அழகு படுத்தப்பட்டுள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவையில் உள்ள அனைத்து குளங்களும் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொலிவு பெற்று வருகிறது.

    மாலை நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்று அங்கு நேரத்தை கழிக்க கூடிய அளவில் அழகு படுத்தப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகள் கூட்டம் கூட்டமாக சென்று குளக்கரையில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்து வருவதையும் காணமுடிகிறது.

    இந்நிலையில் குறிச்சி குளக்கரையில் அமைந்துள்ள தெருவிளக்குகள் ஏதும் எரியாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனால் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.

    குறிப்பாக குறிச்சி பிரிவிலிருந்து குனியமுத்தூர் செல்வதற்கு பெரும்பாலும் குறிச்சி குளக்கரையை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.

    ஏனெனில் குறிச்சி பிரிவிலிருந்து குனியமுத்தூர் செல்வதற்கு ஆத்துப்பாலம் வழியாக சென்றால் தூரம் அதிகமாக உள்ளது. ஆனால் இத்தகைய குளக்கரையை உபயோகப்படுத்தினால் மிகவும் குறைவான தூரமே ஆகும். இந்நிலையில் குறிச்சி குளக்கரையில் தெரு விளக்குகள் எரியாததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    விளக்கு எரியாத பட்சத்தில் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விளிம்பிற்கு சென்று குளத்திற்குள் விழும் அபாய நிலை உள்ளது. இருட்டு காரணமாக ஒரு சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் குளத்திற்குள் விழுந்து எழுந்து செல்லும் நிலையும் அரங்கேறி உள்ளது. மேலும் வழிப்பறி சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது.

    இந்த சம்பவங்கள் காரணமாக அச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனே குறிச்சி குளக்கரையில் உள்ள விளக்குகளை எரிய வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×