search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைனில் பண இழப்பை தடுக்க விழிப்புணர்வு அவசியம்
    X

    ஆன்லைனில் பண இழப்பை தடுக்க விழிப்புணர்வு அவசியம்

    • போலீசார் அறிவுரை
    • வாட்ஸ்-அப், பேஸ் புக்கில் ஏமாற்றுகிறார்கள்

    வேலூர்:

    சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இதுவரை 1,174 புகார்கள் இணைய வழியாகவும், நேரடியாகவும் பெறப்பட்டுள்ளது.

    பணமோசடி புகார்களில் ரூ.6 கோடியே 68 லட்சத்து 96 ஆயிரத்து 489ஐ பொதுமக்கள் இழந்துள்ளனர்.

    இப்புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகளின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து ரூ.4 கோடியே 27 லட்சத்து 79 ஆயிரத்து 810 முடக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரூ.90 லட்சத்து 35 ஆயிரத்து 726 மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    சைபர் குற்றவாளிகள் போலியான அடையாள அட்டைகள் மூலம் சிம் கார்டுகளையும், வங்கிக் கணக்குகளையும் தொடங்கி அதன் மூலம் இணையவழி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் வடமாநிலங்களை சேர்ந்த நபர்களே சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதால் குற்றவாளிகளை அடையாளம் கண்டு இழந்த பணத்தை மீட்பது மிகவும் கடினமாக உள்ளது.

    எனவே பொதுமக்கள் முன்எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் நபர்கள் கேட்கும் விவரங்களையோ, வங்கி விவரங்களையோ அவர்களிடம் பகிர வேண்டாம். பெரும்பாலும் மோசடி நபர்கள் தான் போலியான அடையாளங்களுடன் இணைதளம் வாயிலாக பொதுமக்களை ஏமாற்றி பணத்தை பறித்து வருகின்றனர்.

    பல்வேறு வகைகளில் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். பகுதிநேர வேலை வழங்குவதாக கூறி மொபைல் ஆப்கள் மூலம் செல்போனில் உள்ள உங்களது புகைப்படங்கள், வங்கி விவரங்களை பதிவிறக்கம் செய்து மோசடி செய்து பணத்தை திருடி விடுவார்கள்.

    தேவையற்ற கடன் லோன் ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். பரிசு கூப்பன் தருவதாக கூறியும் ஏமாற்றுவார்கள். ஏதேனும் சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களில் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் இழந்தை பணத்தை மீட்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×