search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    புதிய டி.எஸ்.பி. அலுவலகம் கட்ட இடம் தேர்வு
    X

    புதிய டி.எஸ்.பி. அலுவலகம் கட்ட இடம் தேர்வு

    • பிரம்மபுரத்தில் போலீஸ் நிலையம் வருகிறது
    • அணைக்கட்டு உட்கோட்டத்தில் 5 போலீஸ் நிலையங்கள் செயல்படும்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்ட நிலையில் வேலூர், காட்பாடி, குடியாத்தம் என மூன்று காவல் உட்கோட்டங்களுடன் காவல் துறை நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

    இதில், வேலூர் உட்கோட்ட காவல் நிர்வாகம் அதிகப்படியான போலீஸ் நிலையங்களின் எண்ணிக்கையுடன் இயங்கி வருகிறது.

    சத்துவாச்சாரி, வேலூர் வடக்கு, தெற்கு, தெற்கு குற்றப்பிரிவு, பாகாயம் மற்றும் அதன் கீழ் செயல்படும் (சர்க்கிள்) அரியூர், வேலூர் கிராமியம் மற்றும் அதன் கீழ் இயங்கும் விரிஞ்சிபுரம், பள்ளிகொண்டா மற்றும் அதன் கீழ் இயங்கும் அணைக்கட்டு, வேப்பங்குப்பம் என மொத்தம் 11 போலீஸ் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

    வேலூர் உட்கோட்டம் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பத்தில் தொடங்கி திருப்பத்தூர் மாவட்ட எல்லை வரை சுமார் 60 கி.மீ தொலைவு வரை நீண்டுள்ளது. இதன் காரணமாக, டி.எஸ்.பி. பணிச்சுமை அதிகரித்துள்ளது.

    இதை கருத்தில் கொண்டு வேலூர் உட்கோட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்துவந்தது. இதன்மூலம் போலீஸ் நிலையங்களின் செயல்பாடுகளை சிறப்பாக கவனிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையில், நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வேலூர் உட்கோட்டத்தை இரண்டாகப் பிரித்து அணைக்கட்டு உட்கோட்டம் புதிதாக உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

    அதேபோல், காட்பாடி உட்கோட்டத்தில் பிரம்மபுரம் புதிய போலீஸ் நிலையம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறும்போது:-

    வேலூர் உட்கோட்டத்தை பிரித்து புதிதாக உருவாக்கப்படும் அணை க்கட்டு உட்கோட்டத்தில் வேலூர் தாலுகா, விரிஞ்சிபுரம், அணைக்கட்டு, பள்ளிகொண்டா, வேப்பங்குப்பம் ஆகிய 5 போலீஸ் நிலையங்கள் செயல்படும்.

    அணைக்கட்டில் டி.எஸ்.பி.அலுவலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு பணியும் நடைபெற்று வருகிறது. விரைவில் தற்காலிக அலுவலகம் தொடங்கப்படும்.

    பிறகு நிரந்தர அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உட்கோட்டம் இரண்டாக பிரிக்கப்படுவதால் சட்டம் -ஒழுங்கு மற்றும் குற்றச் செயல்கள் தடுப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியும். மேலும், போலீஸ் நிலையங்களின் நிர்வாகங்களை சரியாக கவனிக்க முடியும்'' என்றனர்.

    Next Story
    ×