search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 நாட்களாக சற்று குறைந்த நிலையில் கடையநல்லூரில் தக்காளி விலை மீண்டும் ரூ.100 ஆக உயர்வு
    X

    2 நாட்களாக சற்று குறைந்த நிலையில் கடையநல்லூரில் தக்காளி விலை மீண்டும் ரூ.100 ஆக உயர்வு

    • இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருந்ததால் தக்காளி பயிரிடுவது காலதாமதம் ஆனது.
    • தக்காளி விளைச்சல் குறைந்து காணப்படுவதால் விலை அதிகரித்து வருவதாக காய்கறி கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையநல்லூர், சுரண்டை, சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு தினந்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக குவியும்.

    தற்போது தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடி மலைப்பகுதியில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் தக்காளி வரத்து அதிகமாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனையான நிலையில் சமீபத்தில் ரூ.100 வரை விற்கப்பட்டது.

    இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளிக்கு பதிலாக புளி கரைசல் அதிமாக சேர்த்து சமையல் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தக்காளி விலை சற்று குறைந்தது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.85 முதல் ரூ.100 வரையிலும் விலை உயர்ந்தது. தக்காளி விளைச்சல் குறைந்து காணப்படுவதால் விலை அதிகரித்து வருவதாக காய்கறி கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தக்காளி விலை அதிகரித்து வருவதால் பொதுமக்களும் பாதிப்படைந்துள்ளனர்.

    இதுகுறித்து காசிதர்மம் விவசாயி முருகன் கூறுகையில், இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருந்ததால் தக்காளி பயிரிடுவது காலதாமதம் ஆனது. தற்போது ஏராளமான விவசா யிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். இன்னும் 15 நாட்களுக்குள் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து அதிக அளவில் தக்காளி வரத்தொடங்கிவிடும். அதன் பின்னர் விலையும் குறைய தொடங்கும். தற்போது அரை ஏக்கரில் தக்காளி பயிரிட்டுள்ளேன். தினமும் 100 கிலோவில் இருந்து 200 கிலோ வரை தக்காளி பறிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வருகிறேன். கிலோவிற்கு ரூ.70 முதல் ரூ.80 வரை விலை கிடைப்பதால் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.

    நெல்லை மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை அதிகரிப்பதும், குறைவதுமாக இருக்கிறது. இன்றைய நிலவரப்படி நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் ரூ.90 முதல் ரூ.100 வரையிலும் விற்கப்படுவதாகவும், சில்லரை விற்பனை கடைகளில் ரூ.110 வரையிலும் விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இவை ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×