search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோத்தகிரியில் அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
    X

    கோத்தகிரியில் அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

    • கோத்தகிரி வி.சி.க. ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார்
    • அட்டடி கிராமத்திற்கு குடிநீர், நடைபாதை, தெருவிளக்கு, தடுப்புச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்

    அரவேணு,

    கோத்தகிரி அருகே நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அட்டடி கிராம த்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக உரிய நடைபாதை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அட்டடி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் முன்பாக திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோத்தகிரி வி.சி.க. ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுதாகர், மண்டல துணை செயலாளர் மண்ணரசன், கிறிஸ்தவ சமூக நீதி அமைப்பின் மாநில துணைச் செயலாளர் கோல்ட்ரஸ், மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அட்டடி கிராமத்திற்கு குடிநீர், நடைபாதை, தெருவிளக்கு, தடுப்புச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், பாதியில் நிறுத்திய பணியை நிறைவு செய்து தரவேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தொடர்ந்து அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன், கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்மு ருகன், சப்இன்ஸ்பெக்டர்கள் ரகுமான்கான், ரமேஷ், பப்பிலாஜாஸ்மின் ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இன்னும் சில தினங்களில் மத்திய அரசின் ஜல்-ஜீவன் திட்டத்தின்கீழ் அட்டடி கிராமத்திற்கு உரிய குடிநீர் வசதி செய்து தரப்படும்.

    மேலும் அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிராம மக்கள் கேட்கும் நடைபாதை தனியாருக்கு சொந்தமான நிலம். எனவே சம்பந்தபட்ட நில உரிமையாளரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனாலும் கிராம மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

    பின்னர் அங்கு வந்த கோத்தகிரி தாசில்தார் கோமதி அட்டடியில் கிராம மக்கள் நடைபாதையாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படும் நிலம் ஒடை புறம்போக்கு நிலமா அல்லது தனியாருக்கு சொந்தமானதா என்பதை அறிய வருகிற 17-18-ந் தேதிகளில் நிலஅளவை செய்யப்படும்.

    அரசுக்கு சொந்தமான நிலம் என தெரிய வந்தால் உடனடியாக அங்கு நடைபாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.

    கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அட்டடி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் அங்கு சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×