search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை மூட்டை கட்டி திருட முயன்ற மர்மநபர்கள்
    X

    கொள்ளை முயற்சி நடந்த டாஸ்மாக் கடையையும், கொள்ளையர்கள் மதுபாட்டில்களை மூட்டையாக கட்டி வைத்திருந்ததையும் படத்தில் காணலாம்.

    டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை மூட்டை கட்டி திருட முயன்ற மர்மநபர்கள்

    • நரிக்குடி அருகே டாஸ்மாக் கடையில் மர்மநபர்கள் மதுபாட்டில்களை மூட்டை கட்டி திருட முயன்றனர்.
    • போலீசார் ரோந்து வந்ததால் போட்டுவிட்டு தப்பினர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் -மானாசாைல ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக பாலகிருஷ்ணன் , சூப்பர்வைசராக இருளாண்டி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்கள் நேற்று இரவு வசூல் பணம் ரூ.2லட்சத்தை எடுத்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றனர். அதன்பிறகு நள்ளிரவு நேரத்தில் அந்த கடையில் கொள்ளையடிப்பதற்காக சில மர்ம நபர்கள் வந்துள்ளனர்.

    அவர்கள் முதலில் கடையின் முன்பு இருந்த சி.சி.டி.வி. காமிராவை உடைத்து சேதப்படுத்தினர். பின்பு அவர்கள் டாஸ்மாக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பணம் கொள்ளையடிக்கலாம் என்று பணப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் பணம் எதுவும் இல்லை.

    இதனால் விரக்தியடைந்த கொள்ளையர்கள், கடையில் இருந்த மது பாட்டில்களை எடுத்துச்செல்லலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி ஒரு சாக்கில் ஏராளமான மதுபாட்டில்களை வைத்து மூட்டை கட்டினர். மேலும் தங்களிடம் இருந்த ஜவுளிக்கடை கட்டை பையிலும் மதுபாட்டில்களை அடுக்கினர்.

    பின்பு அவற்றை கடைக்கு வெளியே எடுத்து வந்தனர். அப்போது அந்த வழியாக வீரசோழன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் ரோந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்த அந்த மர்மநபர்கள், மூட்டை மற்றும் பையில் கட்டிவைத்திருந்த மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர்.

    மதுக்கடையில் இருந்து மர்மநபர்கள் தப்பி ஓடுவதை பார்த்த போலீசார், அவர்களை பிடிப்பதற்காக துரத்திக்கொண்டு ஓடினர். ஆனால் அந்த மர்மநபர்கள், வேகமாக ஓடி போலீசாரிடம் சிக்காமல் தப்பிச் சென்றுவிட்டனர்.

    மதுக்கடையில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்றது மற்றும் காமிராவை உடைத்த சம்பவம் தொடர்பாக கடையின் சூப்பர்வைசர் இருளாண்டி வீரசோழன் போலீசில் புகார் செய்தார். டாஸ்மாக் ஊழியர்கள் வசூல் பணத்தை கடையில் வைத்துவிட்டு செல்லாமல் கொண்டு சென்றதால், கொள்ளையர்களிடம் பணம் சிக்கவில்லை.

    மேலும் போலீசார் ரோந்து வந்ததால் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களும் தப்பின. கடையில் வைக்கப்பட்டிருந்த காமிரா மட்டும், கொள்ளையர்கள் உடைத்ததால் சேதமாகிவிட்டது. அவற்றின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

    மதுக்கடையில் கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×