search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள்
    X

    பூச்சட்டி ஏந்தி வந்த பக்தர்கள்

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள்

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.
    • விழா ஏற்பாடுகளை நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் பலர் செய்திருந்தனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழாஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும் பல்வேறு வாகனங்களிலும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இக்கோவிலுக்கு தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து மாவிளக்கு, அக்கினிச்சட்டி, பறக்கும் காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தடை காரணமாக ஆடி வெள்ளி திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஆடித்திருவிழா இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பால், பன்னீர் புஷ்பம், தேன், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து அலங்காரம் செய்து சிறப்பு பூஜை தொடங்கியது.

    அதன் பிறகு சின்னமாரியம்மன் கோவிலில் இருந்து உற்சவர் அம்மன் இன்று மதியம் 2 மணிக்கு ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து அர்ச்சுனா ஆற்றை கடந்து சந்நதி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை செய்திருந்தனர்.

    பக்தர்களின் பாதுகாப்பிற்காக விருதுநகர் எஸ்.பி தலைமையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×