search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகராட்சியில்  தூய்மை பணியாளர்களுக்கான புதிய நடைமுறைகள் என்ன?- கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி விளக்கம்
    X

    மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி

    நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான புதிய நடைமுறைகள் என்ன?- கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி விளக்கம்

    • தினந்தோறும் பொதுமக்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.
    • சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி சார்பில் பணிக்கு எடுக்கப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மொத்தம் 55 வார்டுகளை கொண்டது. இந்த வார்டுகள் அனைத்தும் நெல்லை, தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.

    குப்பைகள் சேகரிப்பு

    மாநகரில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமாக பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் தினந்தோறும் பொதுமக்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அவை மட்கும், மக்காத குப்பைகளாக பிரிக்கப்பட்டு உரமாக்கும் பணியும் நடைபெறுகிறது.

    இதற்காக வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிப்பதற்காக மாநகராட்சி சார்பில் நிரந்தர தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் மற்றும் சுயஉதவிக்குழு பணியாளர்கள் என 3 வகையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர்.

    போராட்டம்

    இதில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 550 தூய்மை பணியாளர்கள் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு தினந்தோறும் காலை 6.10 மணி முதல் தங்களது பணிகளான சாலைகளை சுத்தப்படுத்துதல், வீடுகளில் குப்பைகளை சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொள்கின்றனர்.

    ஆனாலும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக மகளிர் சுயஉதவிக்குழு மூலமாக சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி சார்பில் பணிக்கு எடுக்கப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர்.

    மாநகராட்சியில் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் ஏற்படும் சிரமங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்தும் விதமாக சுயஉதவிக்குழு பணியாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வருகை பதிவு

    அவர்களிடம் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் சுமார் 200 பணியாளர்கள் வரை இன்று பணிக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மை பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிக்கே சென்று காலை வருகையை பதிவு செய்துவிட்டு பணிக்கு சென்றுவிடுவார்கள்.

    இதனால் அவர்கள் சீக்கிரமாகவே வீடுகளுக்கு சென்று குப்பைகளை வாங்கி கொள்வார்கள். சில மாவட்டங்களில் தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்திற்கு சென்றதும், நேரடியாகவே அங்கு சென்று அவர்களின் வருகை பதிவு செய்யப்படும்.

    ஆனால் நெல்லை மாநகராட்சியில் மட்டுமே அனைவரும் ஒரே இடத்திற்கு வந்து வருகையை பதிவு செய்துவிட்டு வேலைக்கு செல்கிறார்கள். இதனால் அவர்கள் அந்தந்த பகுதிக்கு சென்று பணியை தொடங்க தாமதமாகிறது.இதனால் குப்பைகளை சேகரிப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. அதற்குள் குப்பை லாரிகள் சென்றுவிடுகின்றது.

    இதனால் ஒரு சில இடங்களில் குப்பை சேகரிப்பவர்கள் அந்த குப்பைகளை தீவைத்து எரித்துவிடுவதாக புகார் வருவதால், மற்ற மாவட்டத்தில் உள்ள நடைமுறையை இங்கு அமல்படுத்தி உள்ளோம். இதனை சிலர் தவறாக புரிந்து கொண்டு போராட்டம் நடத்துகின்றனர்.

    தூய்மை பணியாளர்களின் வீண் அலைச்சலை குறைக்கவே இந்த முறையை நடைமுறைப்படுத்தி உள்ளோம். தற்போது பணியாளர்கள் அதனை உணர்ந்து படிப்படியாக வேலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×