search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து, பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை
    X

    வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து, பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை

    • ஒற்றை காட்டு யானை ஒன்று அப்பகுதிக்குள் சுற்றி வருகிறது.
    • முருகன் கோவில் பகுதியில் மற்றொரு காட்டு யானை ஒன்று உலா வருகிறது.

    கோவை:

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அங்குள்ள வீட்டு சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக, ஒற்றை காட்டு யானை ஒன்று அப்பகுதிக்குள் சுற்றி வருகிறது.

    குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த ஒற்றை காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியும், விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்குள்ள பயிர்களையும் சேதப்படுத்தி அழித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஒற்றை யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார், 5 பேர் படுகாயம் அடைந்தனர். ஒற்றை யானையின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள முத்திப்பாளையம் கிராமத்திற்குள் ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. ஊருக்குள் நுழைந்த யானை வீதிகளில் உலா வருகிறது. ஊருக்குள் யானை உலவுவதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து ஊருக்குள் உலா வந்த காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அங்கிருந்த யானை, மத்திப்பாளையம் அருகில் உள்ள அன்னை இந்திரா நகர் பகுதிக்குள் நுழைந்தது.

    மேலும், யானை, அங்குள்ள வீட்டிற்குள் வீட்டிற்குள் புகுந்தது. பின்னர் அங்கிருந்து வீட்டின் சுற்றுச்சுவரை இடித்துவிட்டு காட்டு யானை வெளியேறியது. தொடர்ந்து அதிகாலை வரை அந்த பகுதியிலேயே உலாவிய ஒற்றை யானை, செந்தில் என்பவரின் தோட்டத்தில் 1½ ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை பயிர்களை சேதப்படுத்தயது.

    இரவு முழுவதும் சுற்றி திரிந்த யானை இன்று அதிகாலை 5 மணிக்கு பிறகே வனத்திற்குள் சென்றது. இரவு முழுவதும் யானை ஊருக்குள் சுற்றி திரிந்ததால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர். அனைவரும் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாமல் முடங்கினர். இதற்கிடையே வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து கொண்டு யானை வெளியேறுவதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் மருதமலை முருகன் கோவில் பகுதியில் மற்றொரு காட்டு யானை ஒன்று உலா வருகிறது. அந்த கோவிலின் ராஜகோபுரத்திற்கு பின்புறம் யானை உலா வந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக் கூடிய கோவிலில், யானை நடமாவடுவது பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை அறிந்த மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கே விரைந்து சென்று யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×