search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவைப்புதூரில் புறக்காவல் நிலையம் திறப்பதற்கான பணிகள் மும்முரம்
    X

    கோவைப்புதூரில் புறக்காவல் நிலையம் திறப்பதற்கான பணிகள் மும்முரம்

    • செயின் பறிப்பு உள்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்தன.
    • விரைவில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு வழக்கமான பணிகள் நடக்கும்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோவைபுதூரில் புற காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த பல வருடங்களாக இந்த புறக்காவல் நிலையமானது செயல்படாமல் பூட்டியே கிடந்தது.

    இதன் காரணமாக இங்கு செயின் பறிப்பு உள்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்தன. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்றனர்.

    குறிப்பாக இரவு நேரங்களில் செயின் பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதனால் புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மாவட்டத்தில் செயல்பாடு இல்லாமல் பூட்டிய நிலையில் இருக்கும் புறக்காவல் நிலையங்களை திறந்து அங்கு போலீசார் பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து கோவையில் உள்ள புறக்கவல் நிலையங்கள் செயல்பட துவங்கியுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக குனியமுத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோவைபுதூரில் பூட்டிய நிலையில் இருந்த புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீண்டும் புறக்காவல் நிலையம் செயல்பாட்டிற்கு வர உள்ளதாலும் குற்ற சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளதாலும் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    இது குறித்து தெற்கு கோட்ட போலீஸ் உதவி கமிஷனர் ரகுபதிராஜா கூறியதாவது:-

    கோவை மாநகர கமிஷனர் உத்தரவின்படி குனியமுத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோவை புதூரில் உள்ள புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர உள்ளது. பணிகள் முடிந்து விரைவில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு வழக்கமான பணிகள் நடக்கும்.

    இதற்கான ஆயத்த வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த புறக்காவல் நிலையத்தில் 2 போலீஸ்காரர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். இன்ஸ்பெக்டர் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் அவ்வப்போது இங்கு வருகை தந்து பணிகள் குறித்து கேட்டறிந்து செல்வார்கள்.

    24 மணி நேரமும் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்படும். அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் எந்த நேரமும் புறக்காவல் நிலையத்தை அணுகலாம். அவர்களது தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×