search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டில் பிரதமர் மோடி மீண்டும் பிரசாரம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
    X

    தமிழ்நாட்டில் பிரதமர் மோடி மீண்டும் பிரசாரம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி

    தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது தமிழ்நாட்டில் பிரதமர் மோடி 4 இடங்களில் பிரசாரம் செய்வார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #LSPolls #PMModi #EdappadiPalaniswami
    சேலம்:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த 20 தொகுதிகளின் வேட்பாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டனர். சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கே.ஆர்.எஸ். சரவணன் போட்டியிடுகிறார்.

    சேலம் நெய்காரப்பட்டியில் இன்று காலை அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து சேலம் சென்றார்.



    சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மிகப்பெரிய பாரதத்திற்கு நிலையான ஆட்சி தேவை. ஆகவே இந்த நிலையான ஆட்சிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தான்வருவார் என்று ஒட்டுமொத்த மக்களே தீர்மானித்து இருக்கின்றார்கள். நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.

    நாங்கள் தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. சார்பாக வெளியிட்டு இருக்கிறோம். இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டு இருக்கின்றோம். தமிழ்நாட்டின் வளர்ச்சி மிக சிறப்பாக இருப்பதற்காக அந்த தேர்தல் அறிக்கையிலே பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருக்கின்றன.

    ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கின்ற அத்தனை வறுமை கோட்டு மக்களுக்கும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்பது தான் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருக்கின்றது. இந்த தேர்தலையொட்டி தான் எங்களுடைய தேர்தல் கள அறிக்கை அமைந்திருக்கின்றது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்வார்கள். ஆனால் செய்ய மாட்டார்கள். நாங்கள் சொல்ல மாட்டோம். ஆனால் செய்வோம்.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்ட 2-வது கட்டப்பணிக்கு அனுமதி கேட்டு இருக்கிறோம். அனுமதி விரைவில் கிடைக்க இருக்கின்றது. அனுமதி கிடைத்தவுடன் சென்னை மெட்ரோ ரெயில் 2-வது கட்டப்பணி தொடங்கப்படும்.

    அதைபோல் கோவை மாநகரத்திற்கு மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்படும். அதுவும் மத்திய அரசு அனுமதி பெற்று அம்மாவுடைய அரசு நிறைவேற்றும்.

    அதுமட்டுமல்ல மாவட்ட சாலைகள், நெடுஞ்சாலைகள் அத்தனையும் விரிவாக்கப்படும். இதற்கு மத்திய அரசு நிதி வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தி.மு.க. தேர்தலில் இடம் பெற்றுள்ள அறிக்கை பொய் அறிக்கை. சேலத்தில் எல்லா இடங்களிலும் பாலம் கட்டப்பட்டு விட்டது. வேண்டும் என்றே ஒரு அறிக்கை கொடுக்க வேண்டும் அதற்காக தி.மு.க. ஒரு அறிக்கையை கொடுத்து இருக்கின்றது.

    கிட்டத்தட்ட 3, 4 இடங்களில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேச பா.ஜ.க. கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டு இருக்கின்றோம். தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது பிரதமர் மோடி 4 இடங்களில் பேசுவார்.

    எங்களுடைய பணி வேகமாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது. அ.தி.மு.க. வேட்பாளர்களை எல்லாம் அறிவித்து விட்டோம். எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டார்கள்.

    வருகிற 22-ந்தேதி கருமந்துறையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்கப்படும். அம்மா அவர்கள் இருக்கின்றபோது புதுச்சேரி உள்பட 40 இடங்களில் போட்டியிட்டோம்.

    அதாவது 39 இடங்களில் 37 இடத்தில் வென்றோம். பா.ம.க. ஒரு இடத்தில் வெற்றிப்பெற்றது. பா.ஜ.க. ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 39 தொகுதிகளும் வெற்றி பெற்ற கூட்டணி எங்களுடைய இந்த மெகா கூட்டணி.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #LSPolls #PMModi #EdappadiPalaniswami

    Next Story
    ×