search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    இயற்கை அளித்த மாமருந்து...
    X

    இயற்கை அளித்த மாமருந்து...

    • உறவை மறந்ததால் ஒத்துப்போகும் தன்மை குறைகிறது. கோபம் அதிகரிக்கிறது. எரிச்சலும், சிடுசிடுப்பும் மேலோங்குகின்றன.
    • கணவன், மனைவி இருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தொலைதூரத்துக்குச் சென்று விடுகின்றனர்.

    வாழ்வதற்கு உணவு எவ்வாறு அவசியமோ, அதைப்போல தாம்பத்ய உறவு வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். குழந்தை வளர்ச்சிக்கு வேண்டிய முழு சக்தியும் ஊட்டமும் எப்படி தாய்ப்பாலில் உருவாகி சுரக்கிறதோ, அதேபோல் இல்வாழ்வில் உடல் வளர்ச்சிக்கும் நலனுக்கும் வேண்டிய ஊக்க சக்தியும் உணர்வுகளும் தாம்பத்யத்தால் உருவாகின்றன.

    பொன்னால் ஆன ஆபரணங்களைப் பார்த்தும் அணிந்தும் மனித இனம் சந்தோஷப்படுகிறது. பொன்னும் பொருளும் வாழ்க்கையில் மிக முக்கியமான தேவை இல்லை. ஆனால், உடலின் தேவையைத் தரவும், உள்ளத்தின் தாகத்தைத் தணிக்கவும், மனதின் அழுத்தங்களைக் குறைக்கவும், நோய் இன்றி உடல் நலம் காக்கவும் தாம்பத்ய உறவு அடிப்படை. இது இயற்கை அளித்த நலம் தரும் மாமருந்து.

    இல்வாழ்க்கையின் அடிப்படையான உடல் உறவை தெரிந்தோ, தெரியாமலோ, காரணத்துடனோ, காரணமின்றியோ தம்பதியர் பலர் அலட்சியப்படுத்தி விடுகின்றனர். இந்த அலட்சியம் பல நேரங்களில் குடும்பத்தின் அடித்தளத்தையே அசைத்து விடுகிறது. உறவு மறக்கப்படும் அல்லது மறுக்கப்படும் இல்வாழ்க்கை கொடு நரகமாகிவிடும். இத்தகைய நிலையில் கணவன்-மனைவியிடையே கசப்புணர்வு மேலோங்கும்.

    இல்வாழ்வில் உடல் உறவு இல்லாமை அல்லது போதாமைதான் துன்பங்களுக்குக் காரணம் என உறுதியாகக் கூற முடியும். உறவை மறந்ததால் ஒத்துப்போகும் தன்மை குறைகிறது. கோபம் அதிகரிக்கிறது. எரிச்சலும், சிடுசிடுப்பும் மேலோங்குகின்றன. இதன் விளைவாக, கணவன், மனைவி இருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தொலைதூரத்துக்குச் சென்று விடுகின்றனர். பழிவாங்கும் நிலைக்குக்கூடச் சென்று விடுகின்றனர். சில சமயங்களில் மாற்றாரோடு உறவு; சில சமயங்களில் மண முறிவு.

    ஆணையும் பெண்ணையும் ஆண்டவன் படைத்தான். அவர்கள் இடையே காதலையும் கவர்ச்சியையும் படைத்தான்.

    காதலுக்கு அடிப்படையாக அன்பையும், தியாகத்தையும் மனிதர்கள் இதயத்தில் தோற்றுவித்தான். எனவே கணவன்-மனைவி இடையே ஏற்படும் கலவி இன்பம் கண நேர பொழுதுபோக்கு அல்ல. அது நிலைத்த மகிழ்ச்சிக்கான முதலீடு. நிச்சயமாக சிற்றின்பம் அல்ல. அது பேரின்பம்.

    சமூகத்தாலும், மனசாட்சியாலும் அங்கீகரிக்கப்படாத முறையற்ற வழிகளில் அயலாருடன் பெறும் கண நேர சந்தோஷமே சிற்றின்பம். குறிப்பாக இறைவன் தந்த மனைவி அல்லாத மாற்றாரோடு கொள்ளும் உறவு, தீமையானது; இச்சைக்காகச் செய்யும் கொச்சையான செயல். நோய்களைத் தருவது. அது நல் உறவாகாது. மரபு காக்காது. ஒழுக்கத்துக்கு அப்பாற்பட்டது. கரம் கைப்பற்றிய இனிய இல்லாளுடன் சந்தோஷமாகக் கொள்ளும் உடல் உறவே உத்தமமானது.

    முறையான தாம்பத்ய இல்வாழ்வில் ஏற்படும் உடல் உறவு பல நன்மைகளை அளிக்கக்கூடியது. இனம் (குழந்தை உருவாதல்.) காக்கும்; கோபத்தைப் போக்கி அன்பை வளர்க்கும். குணம் காக்கும். உடலுக்குத் தேவையான ரத்தம், பிராண வாயு, உயிர் ஊட்டச்சத்து பங்கீட்டை அதிகரித்து உடல் நலம் காக்கும். ஞாபக சக்தி வளர வழி வகுக்கும். உற்சாகத்தோடு, சுறுசுறுப்போடு ஆக்க செயலில் ஈடுபட வைக்கும்.

    -பூபதி ராஜா

    Next Story
    ×