search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    ஆவதும் பெண்ணாலே..
    X

    ஆவதும் பெண்ணாலே..

    • உண்மையில், ஆணுக்குப் பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ தாழ்ந்தவரில்லை.
    • பெண்கள் ஆண்களை விட உணர்வுகளில் மேம்பட்டு இருக்கிறார்கள்.

    ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேன்னு ஒரு வாக்கியம் இருக்கே, அது எவ்வளவு உண்மை?

    பெண்களைத் தொலைவில் வைத்தே பார்த்துப் பழகி விட்ட ஆண்கள் சொன்ன வார்த்தைகள் இவை. பெண்ணை முழுமையாக அருகிலிருந்து பார்க்கத் தவறி விட்டவர்களின் பக்குவமற்ற புலம்பல் இது.

    உண்மையில், ஆணுக்குப் பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ தாழ்ந்தவரில்லை. இரண்டு பேரும் இல்லாமல் குடும்பமோ, சமூகமோ, உலகமோ, எதுவுமே முழுமையடையாது.

    ஆனால், ஓர் ஆணால் உணர முடியாத சில நுட்பமான உணர்வுகளை ஒரு பெண்ணால் உணர முடியும்.

    ஆண் தன்னுடைய புத்தியால் செலுத்தப்படுகிறான். பெண்ணோ தன்னுடைய உள்ளுணர்வால் செலுத்தப்படுகிறாள்.

    புத்தி என்பது வெளியிலிருந்து சேகரித்தது. அது எந்தத் தரத்தில் கிடைத்ததோ, அந்தத் தரத்தில் தான் செயல்படும். உள்ளுணர்வு வெளி அழுக்குகளால் அசிங்கப்படாதது. தூய்மையானது; புத்தியை விட உயர்வானது. அதனால், பெண்கள் ஆண்களை விட உணர்வுகளில் மேம்பட்டு இருக்கிறார்கள்.

    உலகின் பல விஷயங்களை விஞ்ஞானப் பூர்வமாக பகுத்துப் புரிந்து கொள்ள ஆணுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அவனுக்கு அருகிலேயே இருந்த பெண்ணின் நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது.

    புரிந்து கொள்ள முடியாததின் மீது இயல்பாகவே அச்சம் வரும். அச்சத்தால் பெண்ணை ஏறிட்டுப் பார்க்க விடாமல், தன் முரட்டுத் தனத்தால் தாழ்த்தி வைத்தான்.

    தன் உடல் வலுவைப் பிரயோகித்து, புத்தியின் தத்திரங்களைப் பயன்படுத்தி, அவளைத் தன் நிழலில் வைத்திருக்க வேண்டியதை எல்லாம் அவன் செய்து முடித்தான். அப்படிச் சொல்லப்பட்ட வார்த்தைகள் தான் இவை.

    ஆவது நிச்சயமாக ஒரு பெண்ணால் தான், ஓர் உயிரைத் தன்னுள் வைத்து,உருவம் கொடுத்து இந்த உலகுக்கு உங்களைக் கொடுப்பவள் ஒரு பெண் தான். ஆனால், அழிவதற்கும் அவளையே பொறுப்பாக்கிப் பார்க்கிறான் என்றால், அப்புறம் அந்த ஆணுடைய பங்களிப்பு தான் என்ன?

    ஓர் ஆண், பெண்ணை மரியாதையுடன் உரிய மதிப்புடன் கையாளத் தெரியாவிட்டால், அவளால் அழிந்து போகக் கூடும்.

    - சாந்தசீலன்.

    Next Story
    ×