search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    அதுபோல் இருக்கணும்..!
    X

    அதுபோல் இருக்கணும்..!

    • ஒரு பிரம்மாண்டமான மரம் மட்டும் அப்படியே இருந்தது.
    • யாரும் எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டார்கள்.

    சீனத்துறவி லாவோட் சூ தன் சீடர்களோடு போய்க் கொண்டிருந்தபோது ஒரு காட்டு வழியாகப் போனார். ஒரு பெரிய அரண்மனை வேலை நடந்து கொண்டிருந்தது.

    நூற்றுக்கணக்கானோர் மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். காடு முழுக்க வெட்டியாகிவிட்டது. ஒரு பிரம்மாண்டமான மரம் மட்டும் அப்படியே இருந்தது. ஆயிரம் பேர் அதன் நிழலில் உட்காரலாம். அவ்வளவு பிரம்மாண்டமான மரம்.

    தன் சீடர்களை அனுப்பி காடு முழுவதும் மொட்டையடித்த பின் அந்த ஒரு மரத்தை மட்டும் யாரும் வெட்டாமல் விட்டு வைத்திருக்கும் காரணத்தைத் தெரிந்துவரச் சொன்னார்.

    அவர்களும் போய், "இந்த மரத்தை மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.

    அருமையான பதில் வந்தது. 'அதுவா? இது பிரயோசனமில்லாத மரம், ஒவ்வொரு கிளையிலும் ஏகப்பட்ட முண்டு முடிச்சு. என்ன செய்வது இதை வைத்துக்கொண்டு? நேராயிருந்தாலாவது தூண்கள் செய்யலாம். அதுவுமில்லை. தட்டுமுட்டுச் சாமான்கள் செய்யலாம் என்றாலும் முடியாது. வெட்டி எரிக்கலாம் என்றாலோ கிளப்புகிற புகையின் விஷத்தில் கண்கெட்டுப் போகும். எந்தப் பிரயோசனமும் இல்லை. அதனால்தான்" என்றார்கள்.

    திரும்பிப் போய்ச் சொன்னார்கள். லாவோட் சூ சிரித்தார்.

    "இந்த மரத்தைப் போலத்தான் இருக்க வேண்டும். பிழைத்திருக்க வேண்டுமானால் இந்த மரத்தைப் போலத்தான் இருக்கவேண்டும். எந்தப் பிரயோசனமும் இல்லாமல் இருக்கவேண்டும். யாரும் எந்தத் தீங்கும் செய்யமாட்டார்கள்.நேராக இருந்தால் வெட்டி எடுத்துப்போய்த் தூணோ தட்டுமுட்டுச் சாமானோ செய்துவிடுவார்கள். அழகாக இருந்தால் சந்தையில் விற்கப்படும் பண்டமாகிப் போவாய். இந்த மரத்தைப்போல பிரயோசனம் இல்லாமல் இருந்து விடு. யாரும் எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டார்கள். செளகரியத்துக்கு வளரலாம். ஆயிரக்கணக்கானோர் உன் நிழலில் இளைப்பாறலாம்" என்றார்.

    -ஓஷோ

    Next Story
    ×