என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
அது எப்படி ஆகும்?
- பாரதி வாழுகின்ற காலத்தில் ஓர் ஏழைத்தாய் வாடுவதா? வருந்துவதா? வா இங்கே!" என்கிறார் பாரதி.
- பாட்டு மட்டும் பாடிவிட்டுப் போகவில்லை கவியரசர்.
பாரதிக்கிருந்த பெரும் சிறப்பு அவரது எழுத்திற்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாதிருந்தது என்பதுதான்.
பேசுவதற்காக அவனைப் படித்தேன். பிறகு அவனே என்னை பேச வைத்தான். சில இடங்களில் என்னைப் பேசாதிருக்கப் பண்ணி விட்டான். கூடுதல் பட்சம் என்னை அழவைத்தான். குறைந்தபட்சம் என்னை அதிர வைத்தான்.
ஒருநாள் திருநெல்லைச் சீமையில் பொருனை நதி பொங்கி பெருக்கெடுத்து ஓடுகின்ற மணல் வெளிகளில் சுத்தானந்தரோடு பாரதி நடந்து போகிறார்.
"நம்மிடத்தில் கொஞ்சம் பணம் இருக்கிறது. அது விரைவில் இரண்டாயிரம் ஆகும், இருபதாயிரம் ஆகும்" என்று அடுக்கிக்கொண்டே போகிறார்.
அடுத்தும் தொடுத்தும் வருகின்ற சுத்தானந்தருக்கு வியப்பால் விழிப்புருவங்கள் வில்லாகின்றன. அது எப்படி இரண்டாயிரம் இருபதாயிரம் ஆகும்? வியந்து போகிறார் சுத்ததானந்தர். "எப்படி?" என்று கேட்கவும் செய்கிறார்.
"அமுதம் என்றொரு தமிழ்ப் பத்திரிகை தொடங்க இருக்கிறோம். இரண்டாயிரம் இருபதாயிரம் ஆகும் ஓய்... பாரும்!" என்று நெல்லைத்தமிழில் ஓய் போட்டுக்கொண்டே ஓங்காரமாகப் பேசுகிறார் பாரதி.
அப்போது ஒரு ஏழைத்தாயின் குரல் கேட்கிறதாம்..
"ஆண்டவனே! இன்று நாளெல்லாம் அலைந்தேன்; ஒரு பழம் கூட விற்கவிலையே!" என்று ஒரு தாய் கூக்குரலிட்டுக் கொண்டே வருகிறாள்.
அவ்வளவுதான்! "தாயே! வா இங்கே! பாரதி வாழுகின்ற காலத்தில் ஓர் ஏழைத்தாய் வாடுவதா? வருந்துவதா? வா இங்கே!" என்கிறார் பாரதி.
அவள் கூடையை இறக்கும்வரை கூட பொறுமையில்லாமல் இவரே இறக்கி, பழங்களை தானே எடுத்து சுத்ததானந்தருக்கும் கொடுத்து 'சாப்பிடும் ஓய்' என்கிறார். தானும் சாப்பிடுகிறார்.
சாப்பிட்டாயிற்று. வேண்டியவரை அள்ளியாயிற்று. ஆறு ரூபாயை எடுத்து அந்த அம்மாளிடம் நீட்டுகிறார். "இதற்கு ஆறு ரூபாயா?" என்று கேட்கிறார் அந்த அம்மணி.
"ஆமாம் தாயே! ஆமாம். நீ சாப்பிடு. உன் குழந்தைகளுக்குக் கொடு. நன்றாய் இரு!" என்கிறார்.
பிறகு, "உனக்கு எத்தனை குழந்தைகள்?" என்கிறார்.
அவள் "இரண்டு பெண்கள்" என்றாள்.
"நமக்கும் அப்படியே" என்று நடக்க ஆரம்பித்து விட்டார் பாரதியார்.
கற்பனை முகடுகளில் தடம் பதித்து தமிழ் வளர்த்த காவிய வானம்பாடி இப்போது தரைக்கு வந்து விட்டது. இதுதான் மேகம் தரைக்கு வந்த இங்கிதமான இதிகாசக் கதை.
இரண்டாயிரம், இருபதாயிரம் என்று கற்பனையில் பறந்து கொண்டிருந்த கவிப்பறவையை ஒரு ஏழைத்தாயின் அவலக்குரல் நிமிடத்தில் கீழே இறக்கிவிட்டது. அந்த ஒரே நிமிடத்தில் அவளது வறுமைக்கோலம் அவர் மனதை வாட்ட ஆரம்பித்து விட்டது. "அமுதம்" பத்திரிகை, பணம் பண்ணுதல் எல்லாம் மறந்தே போயிற்று.
"மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனி உண்டோ?"
என்று பாட்டு மட்டும் பாடிவிட்டுப் போகவில்லை கவியரசர். பாடியபடிதான் கச்சிதமாக வாழ்ந்திருக்கிறார். எழுத்திற்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் அவரது வரலாற்று நதி நடந்து போவதைப் பார்க்கிறோம்."
-வலம்புரி ஜான்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்