search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    மார்பக புற்றுநோய் சோதனை
    X

    மார்பக புற்றுநோய் சோதனை

    • ரத்தம் வெளியேறுவது புற்று நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
    • வித்தியாசமாகத் தெரிந்தால் உடனே தங்களின் மருத்துவரை நாட வேண்டும்.

    மார்பகப் புற்று நோயைக் கண்டறிய சுயமாக செய்து கொள்ளும் எளிய பரிசோதனை குறித்த செய்முறை விளக்கம்

    இருபது வயதைக் கடந்த அனைத்து மகளிரும் மாதம் ஒருமுறை தங்களின் மாதவிடாய் காலம் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு பின்வரும் சுய மார்பகப் பரிசோதனையை கட்டாயம் செய்யவும்

    முதல் படி:

    முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று கொண்டு தங்களின் இருபக்க தோள்பட்டைகளையும் நேராக வைத்துக் கொண்டு கைகளை கீழே தொங்க விட்டுக் கொள்ளுங்கள்.

    இப்போது தங்களின் இருபக்க மார்பகங்களிலும் அளவிலோ வடிவத்திலோ நிறத்திலோ ஏதேனும் மாற்றத்தை காண்கிறீர்களா? ஏதேனும் வீக்கத்தைக் காண்கிறீர்களா?

    இப்போது உங்களின் இரு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டு மேற்கூறியவற்றைப் பார்க்கவும்.

    இரண்டாவது படி:

    தங்களின் தோள்பட்டைப் பகுதிக்குக் கீழ் தலையைணையை வைத்துப் படுத்துக் கொண்டு, தங்களின் இடது கையை வைத்து வலது புற மார்பகத்தையும் வலது கையை வைத்து இடது புற மார்பகத்தையும் தொட்டு உணர்ந்து பாருங்கள்.

    மூன்றாவது படி:

    உங்களின் நடு மூன்று விரல்களின் உள்ளங்கைப் பகுதியைக் கொண்டு அங்குலம் அங்குலமாக தங்களின் மார்பகங்களை அழுத்திப் பரிசோதனை செய்யுங்கள்.

    தங்களின் மூன்று விரல்களையும் தட்டையாக சேர்த்து வைத்துக் கொண்டு சீரான அழுத்தத்தைக் கொடுத்து இந்த பரிசோதனையைச் செய்யுங்கள்.

    சிறிய சிறிய வட்ட வடிவில் தங்களின் விரல்களை வைத்து அழுத்திப் பார்க்க வேண்டும். இவ்வாறு தங்களின் மார்பகம் முழுமையையும் பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

    ஒவ்வொரு முறை வட்ட வடிவில் அழுத்தம் தருவதற்கு இடையிலும் விரல்களை எடுக்காமல் தொடர்ந்து பரிசோதனை செய்யவும்.

    வெளிப்புறத்தில் இருந்து சுற்றுப் பகுதிகளை பரிசோதனை செய்து கொண்டே உட்பக்கம் வந்து இறுதியில் முலைக் காம்பு வரை அழுத்தம் தந்த பரிசோதனை செய்திருப்பதை உறுதி செய்யவும்.

    இந்தப் பரிசோதனையில் ஏதேனும் வீக்கம், கட்டி இருப்பது போன்ற உணர்வு, தோல் பகுதி ஆரஞ்சுப் பழ தோல் போன்று தடிமனாக இருத்தல் போன்றவற்றை பரிசோதிக்கவும்

    அப்படியே அந்தப் பக்கம் இருக்கும் கக்கம் (Arm pit) பகுதியை அழுத்தி அங்கு ஏதேனும் கழலை வீக்கம் இருக்கின்றதா? என்பதை பரிசோதிக்கவும்.

    நான்காவது படி:

    தங்களது முலைக்காம்பை மெதுவாகப் பிதுக்கிப் பார்க்க வேண்டும். முலைக் காம்பில் இருந்து நீர் போன்ற, பால் நிற அல்லது மஞ்சள் நிற திரவமோ அல்லது ரத்தமோ வெளியேறுகிறதா என்பதைப் பார்க்கவும். ரத்தம் வெளியேறுவது புற்று நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

    ஐந்தாவது படி:

    மேற்கூறிய அனைத்து படிநிலைகளையும் மற்றொரு மார்பகத்திலும் செய்ய வேண்டும். ஏதேனும் வித்தியாசமாகத் தெரிந்தால் உடனே தங்களின் மருத்துவரை நாட வேண்டும்.

    இந்தப் பரிசோதனையை மாதம் ஒரு முறை செய்வதன் மூலம் தங்கள் மார்பகங்களில் நேரும் மாற்றங்களை உடனே இனங்கண்டு மருத்துவ உதவியை நாட முடியும்.

    முப்பது வயதைக் கடந்தோர் வருடம் ஒருமுறையேனும் மருத்துவரிடம் நேரடி மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    விரைவான நோய் கண்டறிதல் மூலம்துரிதமான சிகிச்சை அளித்துவியத்தகு முன்னேற்றம் அடைந்துமுழுமையான நோய் குணம் பெற முடியும்.

    -டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா

    Next Story
    ×