search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    சதுரங்க கிராமம்
    X

    சதுரங்க கிராமம்

    • எப்போது நேரம் கிடைத்தாலும் உடனே சதுரங்கம் விளையாடத் தொடங்கிவிடுவார்கள்.
    • சதுரங்கம் விளையாடத் தொடங்கினாலும், நாளடைவில் அது எங்களுக்கு ரொம்பவே பிடித்துப் போனது.

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள 'மரோட்டிசால்' கிராமத்தைச், 'சதுரங்க கிராமம்' என்றே அழைக்கிறார்கள்.

    இங்கு ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் சதுரங்க வீரர், வீராங்கனைகள் இருக்கிறார்கள். இந்தியாவிலேயே சதுரங்க விளையாட்டை அறிந்தவர்கள் அதிகம் உள்ள ஊர் என்ற பெருமையை இக்கிராமம் பெற்றிருக்கிறது.

    இங்கு வீடுகள் மட்டுமின்றி, பொது இடங்கள், கடை வாசல்கள் என்று எல்லா இடங்களிலும் மக்கள் சதுரங்க விளையாட்டில் மூழ்கியிருப்பதைச் சர்வ சாதாரணமாகக் காணலாம்.

    சதுரங்கத்துக்கும் இந்தக் கிராமத்துக்கும் எவ்வாறு இப்படி ஓர் ஆழமான உறவு ஏற்பட்டது?

    அதற்கு இக்கிராம மக்கள் கைகாட்டுவது, 60 வயதான தேநீர்க் கடைக்காரர் உன்னிகிருஷ்ணனை.

    கிராம பொது மைதானம் அருகே உள்ள உன்னிகிருஷ்ணனின் தேநீர்க் கடைதான், இங்கு சதுரங்கம் வேர் விட்ட இடம்.

    தற்போது சதுரங்க விளையாட்டு ஆர்வலர்களால் களைகட்டியிருக்கும் இந்த இடம், ஒரு காலத்தில் குடிகாரர்களின் ராஜாங்கமாகத் திகழ்ந்தது.

    பகலில் குடிகாரர்கள் லூட்டி அடிக்கும் இந்த மைதானம், இரவில் அவர்கள் மோதல்கள், வழிப்பறியில் ஈடுபடும் இடமாகமாறும்.

    இக்கிராமத்தில் கள்ளச்சாராயம் தாராளமாகக் காய்ச்சப்பட்டதால், கலால் வரித் துறையின் சோதனை அடிக்கடி நடக்கும். கிராமத்தினரே கலால் வரித் துறை சோதனையை இயல்பாக எதிர்நோக்கிக் காத்திருப்பது வழக்கம்.

    இப்படி இரவில் கண் விழித்துக் காத்திருந்ததுதான், மரோட்டிசாலில் சதுரங்க விளையாட்டு வளர்வதற்கும் காரணமாக அமைந்தது என்பது ஆச்சரியமான விஷயம்.

    இதுபற்றிக் கூறும் உன்னிகிருஷ்ணன், "1970-ஆம் ஆண்டுகளில் இரவில் கலால் ஆய்வர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது பொழுதுபோவதற்காக நாங்கள் சதுரங்கம் விளையாட ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் இப்படி ஒருவிதக் கட்டாயத்தில் சதுரங்கம் விளையாடத் தொடங்கினாலும், நாளடைவில் அது எங்களுக்கு ரொம்பவே பிடித்துப் போனது." என்கிறார்.

    இக்கிராமத்தினருக்கு பகல், இரவு என்றில்லை, எப்போது நேரம் கிடைத்தாலும் உடனே சதுரங்கம் விளையாடத் தொடங்கிவிடுவார்கள்.

    -வீரமணி வீராசாமி

    Next Story
    ×